சூரிய பூஜை நடக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என பெயர் வந்தது. அகஸ்தியர், மார்க்கண்டேயர், காமதேனு இங்கு வழிபட்டு சிறப்பு பெற்றுள்ளனர். ஒவ்வொரு தலத்திலும் ஒன்று சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இத்தலதம் மூன்று சிறப்புடையது.
மூர்த்தி சுயம்புலிங்கமாக ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் என்ற பெயர்கள் உண்டு. அம்மன் சிநேகவல்லி, அன்பாயிரவல்லி. தீர்த்தம் சூரியபுஷ்கரிணி, வருண, வாருணி, மார்க்கண்டேய, அகத்திய, காமதேனு தீர்த்தங்கள். அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், ""திருவாடனைக்கு வா சொல்லித் தருகிறேன்''என்றார்.
அதன்படி அர்ஜுனனும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தெரிந்து கொள்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இங்குள்ள சோமாஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தான் என்பது ஐதீகம். இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார். அம்மன் சிநேகவல்லி சுக்கிரனுக்குரிய அதிதேவதை ஆவார். இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத்தலம். |