அம்பாள் சன்னதிக்கு இடப்புறம் முத்துக்குமரன், தனது கழுத்தில் சொருகிய வாளை கையில் பிடித்தபடி, அருட்காட்சி தருவது வேறு தலங்களில் இல்லாத சிறப்பாகும்.இப்பகுதியை சேரமன்னர்கள் ஆண்டபோது, போரில் வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் குருநாதரிடம் ஆலோசனை கேட்டனர்.அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய குருநாதர், போரில் வெல்ல படைபலம் மட்டுமின்றி காளியின் அருள்பலமும் வேண்டும் எனக்கூறி, அவளுக்கு கோயில் அமைத்து களப்பலி கொடுத்து போருக்குச் சென்றால் எளிதில் வெல்லலாம் என்றார்.
அதன்படி மன்னர்கள் இவ்விடத்தில் காளிதேவிக்கு தனியே கோயில் ஒன்றைக் கட்டினர். பின்பு அண்டை நாடுகள் மீது படையெடுத்துச் செல்லும் முன்பு காளியை வணங்கி பெரிய குண்டம் ஒன்றில் வேள்வி வளர்த்து அதில் வீரர் ஒருவரை பலி கொடுத்து விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.இங்கு வீற்றிருக்கும் கொண்டத்துக்காளியம்மன் ஏழு பேராக அவதரித்த அம்பாள் சகோதரிகளில், ஒருவராக, எட்டு கைகளில் ஆயுதங்களையும், கல்வியையும் ஏந்தி, லட்சுமி, காளி, சரஸ்வதி என மூன்று அன்னையர்களின் அம்சமாக அருள்பாலிக்கிறாள். |