இத்தல இறைவன் மிகப்பெரிய ஆவுடையாருடன் கூடிய மிகப்பெரிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும். இப்படி சிவலிங்கத்தின் மீது படும் ஒளியானது, உத்திராயணம் மற்றும் தட்சிணாயன காலங்களில் கூட மாறாமல் சிவலிங்கத்தின் மீது படும் படி கோயில் கட்டப்பட்டுள்ளது.
கன்னி மூலையில் தல விநாயகரான வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதியும், சுப்பிரமணியருக்கும் அதனருகில் சண்டிகேசுவரருக்கும், அமைந்துள்ளது. சிவ சன்னதிக்கு முன் நந்தி அழகிய திருமேனியுடன் விமானத்துடன் கூடிய மண்டபத்தில் வீற்றிருக்கிறார். சிவன் கருவறையின் தெற்கு பக்கம்பளிங்கு கல்லால் ஆன தட்சிணாமூர்த்தியும், மேற்கு பக்கத்தில் நின்ற கோலத்தில் மகா விஷ்ணுவும் அருள்பாலிக்கிறார்கள். சிவன் சன்னதி முற்றத்தில் கிழக்கு வாசல் பகுதியில் 36 அடி உயர ராஜ கோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது. |