இங்குள்ள மூலவர் மண்ணில் கிடைத்தவராக நெற்றியில் மூன்று நேர்கோடுகளுடன் காட்சிதருகிறார். அவருக்கு நேரே ஆவணியில் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரியன் தனது கிரணங்களைப் பரப்பி பூஜை செய்கிறார். இங்குள்ள நவக்கிரகங்கள் தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் அமைந்துள்ளது சிறப்பாக உள்ளது.
மிகவும் புராதனமான இங்கு, இதுவரையிலும் அதிகளவில் கல்வெட்டுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்தலம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி அரணாக அமைந்துள்ள குருடி மலை, பாலமலை, பொன்னூத்து மலை ஆகிய மலைகளில் பெய்யும் மழைநீர் வழிந்தோடி வரும் இரண்டு ஓடைகளின் கரைகளுக்கு நடுவே இவ்வூர் அமைந்துள்ளது.
இதனால் இவ்வூர் ஆதியில் "இருகரை' என்றழைக்கப்பட்டு அதுவே மருவி நாளடைவில் "இடிகரை' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள வில்லீஸ்வரருக்கு இடப்புறம் முகப்பில் மிகச்சிறிய நந்தியுடன் வேதநாயகி அம்பாள், கோயில் சுற்றில் ஆல மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் தட்சிணாமூர்த்தி ஆகியோரும் அருள்புரிகின்றனர். |