இங்கு அருளும் சுயம்பு மாரியம்மன், இரண்டரை அடி உயரத்தில் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறாள். லிங்கக்கல்லின் அடியில் ஆவுடையாரும் உள்ளது. அம்பாளுக்கு உரித்தான அடையாளங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட அம்பாளாகவே பாவிக்கப்பட்டு புடவை கட்டி அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்படுகிறது.கருவறையில் அணையாவிளக்கு ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.
அமராவதி ஆற்றின் கரையில் கிழக்கு நோக்கியபடி அம்மன் வீற்றுள்ளாள்.புதியதொழில் தொடங்கும்போதும், வீட்டில் சுபநிகழ்ச்சி நடத்தும் போதும், அம்பாளின் தலையில் பூ வைத்து உத்தரவு கேட்டு, அனுமதி கிடைத்தால் மட்டுமே அதனை செயல்படுத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.
அம்பாள் உயரமான இடத்தில் கோட்டை போல இருந்து ஊரைக்காப்பதால் "கோட்டைமாரி' எனப்படுகிறாள். வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் "குழுமூர்' எனவும் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அதுவே மருவி "கொழுமம்' என்றானது. |