- முனைவர் கி.செம்பியன்
நல்லா றெனினுங் கொளறீது மேலுலக
மில்லெனினு மீதலே நன்று (222)
(கொளல் நல்லாறு எனினும் தீது----ஏற்றல் வீட்டுலகிற்கு நல்லநெறியென்பார; உளராயினும் அத தீது; மேலுலகம் இல் எனினும் ஈதலே நன்று---ஈந்தார;க்கு அவ்வுலகெய்துதலில்லையென்பார; உளராயினும் ஈதலே நன்று---பரிமேலழகர;)
வாங்குவது கேவலம்!
எந்த நாட்டில்?
வள்ளுவன் குறள் பாடிய நாட்டில்!
என்ன வாங்குவது?
கையில் பணம், அரிசி, பூசணிக்காய், பறங்கிக்காய், துணிகள் போன்ற விரும்பிக் கொடுப்பனவற்றை வாங்குவதே தீது என்றால், கிம்பளம் வாங்குவதை என்ன சொல்வது?
வாங்குவது நல்வழி என்று யார் கற்பித்தது?
இந்த வேற்று ஆசாரத்தை வெறுத்தார் வள்ளுவர்! சுவர்க்கத்தில் இடம் கிடைக்காவிட்டாலும் ஈதலே நன்று! ஈயெனக் கேட்பது இழிந்தது! கேட்டுவிட்டால் கொடுக்காமல் இருப்பது இழிந்தது! பெற்றுக்கொள்பவர் இருக்கும்வரை ஈதல் நன்று!
அற்றவர்க்கு ஒன்று ஈவதே ஈகை!
இலஞ்சம் கொடுப்பது ஈகையா?
கடமையைச் செய்வதற்கு இலஞ்சம் வாங்குவது தீதினும் தீது! ஈன்றவள் பசித்தாலும், சான்றோர் பழிக்கும் காரியத்தைச் செய்யக்கூடாது என்பது வள்ளுவம்!
தாயைக் காப்பாற்றுவதாக இருந்தால்கூட இலஞ்சம் வாங்கிக் காப்பாற்றக்கூடாது என்பதே வள்ளுவம்!
உயர்ந்த தத்துவங்கள் பூத்துவிட்டன அறியாமை நிறைந்த நாட்டில்! காட்டிலே பூத்த மணமுள்ள மலர்;! யாருக்கு இலாபம்! வாங்குவதைக் கலாச்சாரமாகவே மாற்றிவிட்டார்கள்! பன்றி போட்டால் குட்டி; மரம் செழித்தால் கன்று; மனிதன் பெற்றால் குழந்தை! மாடு போட்டால் சாணி; யானை போட்டால் லத்தி; மனிதன் கழித்தால் ஈகார பகரம்!
தெருவில் வாங்கினால் பிச்சை!
அலுவலகத்தில் வாங்கினால் இலஞ்சம்!
அமைச்சர்கள் வாங்கினால் ஊழல்!
வாங்குவதற்கு நியாயம் கற்பித்துக்கொண்டார்கள்!
வாங்குவது உலகப் பிரச்சினையாம்; உலகம் முழுவதும் உள்ளதாம்! அழிக்கமுடியாதாம்! அணுக்குண்டு சோதனையாம்; கணிப்பொறி வித்தைகளாம்; நிலவுக்குப் போவார்களாம்; விண்வெளிச் சோதனைகளாம்; பீரங்கிகளாம்; துப்பாக்கிகளாம்! கொடியேற்றி வீரமுழக்கம் செய்வார்களாம்!
முப்படை அணிவகுப்பாம்; மூவேந்தர; பரம்பரையாம்; முத்தமிழ் வேந்தர்களாம்; ஆரிய மாயைகளாம்; திராவிட மாயைகளாம்; அத்தனைக்குப் பிறகும் அழிக்கமுடியாத இலஞ்சங்களாம்!
பிறப்புச் சான்றிதழுக்குத் தனி; இறந்தால் தனி; வாழ்ந்தால் தனி; மண்ணாய்ப்போனாலும் தனி!
வள்ளுவத்தைப் படித்துவிட்டு மறந்துவிடு! வள்ளுவத்தைப் படி; மனப்பாடம் செய்; மதிப்பெண் வாங்கு; மேடையில் முழங்கு; கட்டுரை எழுது; அத்துடன் நிறுத்து! வள்ளுவத்தில்; வாங்காதே தூங்காதே என்று மட்டும்தான் சொல்லியிருக்கிறதா?
காமத்துப் பாலுக்குப் போ!
மாதரின் கொங்கைமேல் துகில்; அந்தத் துகில் யானையின் நெற்றியில் இடப்பட்ட முகபடாம்!
அதைப் படித்து மயங்கு; போதை கொள்! நீ எப்போதும் போதையில் ஆழ்ந்திருக்கவேண்டும்!கொள்ளல் தீது; ஈதல் நன்று! ஒன்றை மட்டும் மாற்றிக்கொள்வோம்! இலஞ்சம் என்பதுதான் ஈதல்! எனவே,
இலஞ்சம் நன்று!
நாட்டுக்கு ஏற்பக் கடிகார மணியை மாற்றிக்கொள்ளவேண்டும்! நடப்பிற்கு ஏற்பக் குறளை மாற்றிக்கொள்வோம்!
(தொடரும்....)
|