LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி

மகாகவி பாரதியார் வரலாறு - பகுதி 15

பாரதியார் புதுச்சேரி வாழ்வில் (அரசியல் கிளர்ச்சியில் தவிர) பூரணமாகக் கலந்துகொண்டு, பத்து வருஷம் அங்கே வாழ்ந்து வந்தார். யார் வீடு என்று பாப்பதில்லை; என்ன ஜாதி என்று விசாரிப்பதில்லை. கலியாணத்துக்கோ எந்த விசேஷத்துக்கோ அவரைக் கூப்பிட்டால், உடனே போய்விடுவார். சமூகப் பிரச்சினைகளைப் பற்றி, புதுச்சேரியில் பல இடங்களில் பிரசங்கங்கள் செய்திருக்கிறார். பத்து வருஷகாலத்துக்குள். புதுச்சேரிவாசிகளின் பூரண அபிமானத்தையும் பாரதியார் பெற்றார் என்று தாராளமாகச் சொல்லலாம்.

புஷ் வண்டிக்காரர்களுக்குப் பாரதியாரைக் கண்டால் கொண்டாட்டம். அவர்கள் கேட்டதைப் பாரதியார் உடனே கொடுத்துவிடுவார். சென்னையிலிருந்து துரைசாமி அய்யரோ, வேறு ஊர்களிலிருந்து அன்பர்களோ அழகான அங்க வஸ்திரம் பாரதியாருக்கு என்று அனுப்பியிரக்கலாம். ஆனால், புஷ் வண்டிக்காரன் அதைக் கண்ணால் வெறித்துப் பார்த்துவிட்டால், அது அந்த நிமிஷமுதல் அவனுடையதுதான்; பாதியாருடையது அல்ல.

“அவனுக்குச் சரிகை வேஷ்டி போட்டுக்கொள்ள ஆசை. அவன் கையில் பணம் ஏது? அவனுக்கு யார் வாங்கிக் கொடுப்பார்கள்?“ என்பதுதான் பாரதியர் சொல்லும் சமாதானம்.

புதுச்சேரி வாழ்க்கையில் பாரதியாருக்கு உதவி செய்தவர்களில், மக்கியமாகக் குவளைக் கண்ணனையும், சுந்தரேச அய்யரையும் குறிப்பிட வேண்டும். குவளைக் கண்ணன் எஜமான விசுவாசமுள்ள வேட்டை நாயைப் போன்றவர். பாரதியாருக்கு, சரீரத்தால் அவர் எல்லையில்லாமல் உழைத்தார். பாரதியாரைப் பற்றி யாரும் இளப்பமாக அவர் காது கேட்கும்படி பேச முடியாது. கன்னத்தில் அறை கண்டிப்பாய் விழுந்துவிடும்.

சுந்தரேசய்யர், மணிலாக்கொட்டை வியாபாரம் செய்து வந்த குப்புசாமி அய்யர் என்பரிடம் குமாஸ்தா வேலை பார்த்துவந்தார். நெருக்கடி காலங்களிலெல்லாம், சுந்தரேசய்யர்தான் பாரதியாருக்கு வாய் பேசாமல் பண உதவி செய்து வந்தார். சுந்தரேசய்யர், தம் மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும் விற்றும் பாரதியாருக்குப் பணம் கொடுத்து உதவியது எனக்குத் தெரியும். பாரதியாரிடம் சுந்தரேச அய்யர்க்கு அவ்வளவு பக்தி.

வெல்லச்சுச் செட்டியார் என்று பாரதியார் செல்லமாய் அழைக்கும் முத்தியாலுப்பேட்டை கிருஷ்சாமி செட்டியார் என்பதையும் இவர் வெறுங்கையோடு பாரதியாரைப் பார்க்க வரமாட்டார் என்பதையும் முன்னமே கூறியிருக்கின்றேன். வருகின்ற சமயங்களிலெல்லாம் இவர் பத்து ரூபாய்க்குக் குறையாமல் கொடுத்துவிட்டுப் போவார்; அடிக்கடி வருவார்! மாதத்துக்கு இரண்டு மூன்று தடவைகள் கூட வருவார்.

பொன்று முருகேசம் பிள்ளையின் குடும்பத்தாரைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பாரதியாரைத் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றே அவர்கள் எண்ணி வந்தாகள். வேலைக்காரி அம்மாக்கண்ணு தனிப்பிறவி அவள் அஞ்சாநெஞ்சு படைத்தவள்.

1914 ஆம் வருஷத்தில் தொடங்கிய மகாயுத்தத்தின் மூலமாக இந்தியவுக்குப் பல நன்மைகள் ஏற்படலாம் என்று பாரதியார் நம்பியிருந்தார்; 1918 ஆம் வருஷத்தில், தாம் காணுவது வீண் கனவு என்று தெரிந்து கொண்டார். பிறகு, புதுச்சேரி வாழ்க்கை அவருக்குப் பிடிக்கவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவுக்குத் திரும்பி வந்துவிடவேண்டும் என்று தீர்மானங்கொண்டார்; எ. ரங்கசாமி அய்யங்காருக்கு எழுதிக்கேட்டார். வெளியே வருவதற்குத் தக்க காலம் அதுதான் என்று அவர் பாரதியாருக்கு யோசனை சொன்னார்.

பாரதியார் புதுச்சேரியை விட்டுப் புறப்பட்டு பிரெஞ்சு சர்க்கார் எல்லையைத் தாண்டியதும், அவரைப் பிரிட்டிஷ் இந்தியப் போலீசார் கை செய்து கடலூர் சப் ஜெயிலில் கொண்டுபோய் வைத்தார்கள்.

பாரதியாரைக் கைது செய்த செய்தி தெரிந்ததும், ஏ. ரங்கசாமி அய்யங்கார் மாகாணப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் சென்று, அவரைப் பேட்டி கண்டு, பாரதியாரைப்பற்றிய உண்மையான விவரங்களைச் சொன்னார். தீவிர அரசியலில் கலப்பதில்லை என்று பாரதியார் வாக்குக் கொடுக்க வேண்டும் என்று அந்தப் போலீஸ் அதிகாரி சொன்னார். பாரதியாரை இவ்வாறு செய்யும்படியாகக் கேட்பது அவரது உத்தமமான குணத்துக்கு இழுக்காகும் என்று அய்யங்கார் வாதாடினார். மேலும், பாதியாரின் உடம்பு மிகவும் சீர்குலைந்து போயிருந்தது. அதையும் எடுத்துச் சொன்னார்.

வாக்குறுதி கொடுத்தது போலும் இல்லாமல், கொடுக்காமல் இருந்தது போலும் இல்லாமல், ஒரு சூத்திரத்தைத் தமது சாஜதந்திர மூளையால் அய்யங்கார் தயார் பண்ணி, போலீஸ் அதிகாரியின் மனத்துக்கு நிம்மதியை உண்டாக்கி, பாரதியாரை விடுதலை செய்யும்படியான ஏற்பாட்டைச் செய்தார். ‘தங்களுக்குச் ‘சுதேசமித்திர‘னில் எப்பொழுதும் தஙகுமிடம் உண்டு‘ என்று ரங்கசாமி அய்யங்கார் பாரதியாரிடம் நேரில் தெரிவித்துக்கொண்டார்.

பாரதியார் சிறிது காலம் திருநெல்வேலி ஜில்லா, கடயத்தில் வாசம் செய்தார்; பின்னர், சென்னைக்குத் திரும்பி வந்தார். “எழுதினாலும் எழுதாவிட்டாலும் ‘சுதேசமித்திர‘னில் தங்களுக்கு உத்தியோகம்“ என்று ரங்கசாமி அய்யங்கார் மீண்டும் தெரிவித்துக்கொண்டார். சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குப் பக்கத்து வீதியில் பாரதியார் குடியிருந்தார். கோயில் யானையோடு அவர் சகோதரத்துவம் கொள்ளப்பார்த்த கதை விசித்திரமானது.
பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குப் போகும்பொழுதெல்லாம் பாரதியார் கையில் தேங்காய் பழம் கொண்டு போவார், இவைகள் சுவாமிக்காக அல்ல; வெளியே கட்டியிருக்கும் யானைக்காக. யானையைத் தமது சகோதரனாகப் பாவித்த பாரதியார், அதற்குதேங்காய் பழம் முதலியவைகளைக் கொடுத்து நல்லுறவு ஸ்தாப்பித்துக்கொள்ள முயன்றார் ; பழக்கம் அதிகமாக அதிகமாக, அதன்கிட்டே போய் இவைகளைக் கொடுக்கவும் செய்வார். சில சமயங்களில் துதிக்கையைத் தடவியுங்கொடுப்பார்.

சகோரதத்துவம் முதிர்ந்து வருகிறது என்பது பாரதியாரின் எண்ணம். இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில், ஒரு நாள் வழக்கம் போல, ‘சகோதரா!’ என்று பழங்களை நீட்டினார். யானையோ வெறிகொண்டு பழங்களோடு பாரதியாரையும் சேர்த்துப் பிடித்து இழுத்துத்தான் இருக்கும் கோட்டத்துக்குள் கொண்டுபோய்விட்டது. பாரதியாரை யானை காலால் மிதித்து விடுமோ என்று பக்கத்தலிருந்தவர்கள் கதிகலங்கிப் போனார்கள். பாரதியார் கோட்டத்துக்குள் படுகிடையாகக் கிடந்தார்.

பாரதியாருக்கு நேர்ந்த விபத்தை எப்படியோ, எங்கிருந்தோ கேள்விப்பட்ட குவளைக்கண்ணன், பறந்து வந்தது போல ஓடிவந்து, யானை இருந்த இரும்புக் கிராதிக் கோட்டத்துக்கள் பாய்ந்து, பாரதியாரை எடுத்து நிமிர்த்தி, கிராதிக்கு வெளியே நின்றவர்களிடம் தூக்கிக் கொடுத்தார். சபாஷ் குவளைக்கண்ணா! இவ்வாறு யார் செய்யமுடியும்? பாரதியாரிடம் உயிராக இருந்த குவளைக் கண்ணனால்தான் முடியும் ! யானைக்கு மதம் பிடித்திருந்த சமயம், ஆனால், அதைப் பற்றிக் குவளைக்கண்ணனுக்கு என்ன கவலை?

பாரதியார் பிழைத்தார்; குவளைக்கண்ணனும் கோட்டத்திலிருந்து வெளியே வந்தார். பயம் அறியாது உயிரைத் துரும்பாக மதித்த வீரனைப் படம் பிடிக்க வேண்டுமானால், அப்பொழுது காட்சி அளித்த குவளைக் கண்ணனைப் படம் பிடித்திருக்க வேண்டும்.

‘காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்‘ என்று பாடிய பாரதியார். யானையோடு சகோதரத்துவ்ம் கொண்டாடிய இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் வெகு காலம் உயிரோடிருக்கவில்லை. யானையின் சேஷ்டையால், பாரதியாரின் தேகம் முழுதும் ஊமைக்காயங்கள். இவைகள் பாரதியாருக்கு மரண வலியைத் தந்தன. அவ்வளவு பொறுக்க முடியாத வலி! காயங்களால் ஏற்பட்ட வலியெல்லாம் தீர்ந்துவிட்டது. ஆனால், இந்தச் சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் பாரதியார் இறந்து போனார்.

“கல்தூண்
பிளந்துஇறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.“

சகோதரத்துவத்தை ஒரு வகையில் பாராட்டிப் பழகி வந்த தம்பியான யானை, இறுதியில் ஏமாற்று வித்தை செய்தது, பாரதியாரின் உள்ளத்தில் பெருமபாரமாகத் திடீரென்று விழுந்திருக்க வேண்டும். பெரும்பாரம் தாங்கின், தளர்ந்து வளைந்து கொடுக்கும் சுபாவம் பாரதியரிடம் கிடையாது. எனவே பிறர் கண்ணுக்குப் படாதபடி, அவருடைய மனம் உடைந்துபோயிருக்க வேண்டும். அதனால்தான் அவ்வளவு விரைவில் பாரதியார் மறைந்து போனார். பாரதியார் மறைந்த நாள் 1921 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி.

உலக மகா கவிகளில் தலைசிறந்து விளங்குபவரும் தமிழ்நாட்டுப் புரட்சிக்கவியுமான பாரதியாரின் பூத உடலை அடக்கம் செய்வதற்குப் போதிய பணம் அவரது வீட்டார்களிடம் இல்லையென்றும், சில பக்தர்களின் பண உதவியைக்கொண்டுதான் உடலை அடக்கம் செய்ய முடிந்ததென்றும் பாரதியாரின் பக்தரும் சிறந்த தேசபக்தருமான ஒருவர் என்னிடம் சொன்னார். அவர் சொன்னதை, அப்படியே, கூட்டிக்குறைக்காமல் தமிழர்கள் தங்கள் உள்ளங்களை இப்பொழுதாவது சோதித்துப் பார்ப்பார்களாக!

இதை முடிக்குமன், இரண்டொரு சட்மபவங்கள் குறிப்பிடத்தக்கவை. பாரதியார் புதுவையிலிருந்து சென்னைக்கு வந்தபின், திருவல்லிக்கேணிக் கடற்கரையில் அடிக்கடி கூட்டம் போட்டுப் பேசுவது வழக்கம். பாரதியாரின் சொற்பொழிவைக் கேட்க, இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் கூடிவிடுவார்கள்; வெகுநேரம் காத்துக்கொண்டிருப்பார்கள்.

“பாரதியாரின் சொற்பொழிவு வெறும் பிரசங்கமா? அது சண்டமாருதமல்லவா?“ என்று அவர்களில் பலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

இவ்வாறு கூட்டப்பட்ட கூட்டங்களில் ஒன்றில், ஸ்ரீசத்தியமூர்த்தியும் இன்னொருவரும் (அவர் பெயர் நினைவில் இல்லை) முதலில் பேசிவிட்டார்கள். அது பாரதியாருக்காகவே கூட்டப்பட்ட கூட்டம் என்பதைக் கூடக் கவனிக்காமல் சத்தியமூர்த்து துடுக்காக, ‘நீங்கள் வழக்கமாகக் கேட்கும் பாரதியார் நாளைக்குப் பேசுவார். இன்றைக்கு இத்துடன் கூட்டம் முடிவுபெற்றது‘ என்று அறிவித்துவிட்டுப் போய்விட்டார். ஆனால், கூட்டம் கலையவில்லை.

பாரதியார் எழுந்திருந்தார். ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு அழகான சொற்களில், விதரணையாகச் சன்மானம் கொடுத்தார். பிறகு, காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவது போல் ஓயாது என்று சொல்லும்படியான கரகோஷங்களுக்கு இடையே, பாரதியார் பிரசங்கமாரி பொழிந்தார். அன்றிரவு கூட்டம் கலையும் பொழுது மணி பதினொன்று இருக்கும்.

அன்றைக்குத்தான் என்றும் உயிரோடு இருக்கக் கூடிய ‘பாரத சமுதாயம் வாழ்கவே!‘ என்ற அற்புதப் பாடலைப் பாரதியார் பாடினார். கூட்டம் பதினொரு மணி வரையில் கலையாமல் இருந்ததற்கு வேறு காரணமும் வேண்டுமா?

பாரதியாரைப் பின்காலத்தில் புகழ்ந்துகொண்டாடின ஸ்ரீ சத்தியமூர்த்தி கூட, அக்காலத்தில் சரியானபடி அவருடைய பெருமையைத் தெரிந்துகொள்ளாமல் போனதுதான் ஆச்சரியம். சத்தியமூர்த்தியாக இல்லாவிடின், சகஜமாக நேரக்கூடிய சம்வந்தான் என்று இதைப்பற்றிக் கவனம் செலுத்தாமலே விட்டிருக்கலாம். சத்தியமூர்த்தியின் சம்பந்தம் இருந்ததால் இதைப்பற்றிச் சொல்ல நேர்ந்தது. மேலும், “பாரத சமுதாயம் வாழ்கவே!“ என்ற அமுதமயமான பாடல் அரங்கேறிய நாளையும் வகையையும் குறிப்பிட வேண்டுமல்லவா? அதற்காகவும் இந்தச் சம்பத்தைச் சொல்ல நேர்ந்தது.

இன்னொரு சம்பவம் ஏககாலத்திலும் மகிழ்ச்சிக்கும் துக்கத்துக்கும் உரிய சம்பவமாகும். அட்சரலட்சம் கொடுக்கும்படியான ஐந்து பாட்டுகளைப் பாரதியார் மகாத்மா காந்தியின்பேரில் பாடியிருக்கிறாரே, அவ்விருவரும் சந்தித்து உறவாடியாதாக இதுவரையிலும் தெரியவில்லையே என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். பாரதியாரும் மகாத்மாவும் சந்தித்தார்கள்; பேசினார்கள்; ஒரே தடவையில், ஒருவரையொருவர் நன்றாகத் தெரிந்து கொண்டார்கள்.

1919 ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் காந்தி சென்னைக்கு வந்தார். ரௌலட் சட்டம் என்ற அநியாயச் சட்டத்தை ரத்து செய்வதற்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்றும், அதற்குத் தலைமை வகித்து அதைக் காந்தி நடத்த வேண்டும் என்றும் இந்தியாவில் இருந்த பிரமுகர்களில் பலர் காந்தியை வேண்டிக்கொண்டார்கள். காந்தி இசைந்தார். அதற்காகத்தான், காந்தி முதன் முதலில் சென்னைக்கு விஜயம் செய்தார். சத்தியாக்கிரக இயக்கத்தை ஆரம்பிக்குமுன் அணைகோலுவதைப் போலிருந்தது இந்த விஜயம்.

அப்பொழுது ராஜாஜி, கத்தீட்ரல் ரோட், இரண்டாம் நெம்பர் பங்களாவில் குடியிருந்தார்; அந்தப் பங்களாவில் தான் காந்தி வந்து தங்கினது. நாலைந்து நாள்கள் தங்கியிருந்தார். ஒரு நாள் மத்தியானம் சுமார் இரண்டு மணி இருக்கும். காந்தி வழக்கம் போலத் திண்டு மெத்தையில் சாய்ந்துகொண்டு வீற்றிருந்தார். அவர் சொல்லிக்கொண்டிருந்ததைப் பக்கத்தில் உட்காந்திருந்தார் மகாதேவ தேசாய் எழுதிக்கொண்டிருந்தார்.

காலஞ்சென் சேலம் பாரிஸ்டர் ஆதிநாராயண செட்டியார் குடகுக் கிச்சிலிப் பழங்களை உரித்துப் பிழிந்து மகாத்மாவுக்காக ரசம் தயார் பண்ணிக்கொண்டிருந்தார். ஒரு பக்கத்துச் சுவரில் ஏ.ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் சாய்ந்து நின்று கொண்டிருந்தார்கள். அந்தச் சுவருக்கு எதிர்ச்சுவரில் ராஜாஜியும் மற்றும் சிலரும் சாய்ந்துகொணடு நின்றிருந்தார்கள். நான் வாயில் காப்போன். யாரையும் உள்ளே விடக்கூடாது என்று எனக்குக் கண்டிப்பான உத்தரவு.

நான் காவல் புரிந்த லட்சணத்தைப் பார்த்தச் சிரிக்காதீர்கள். அறைக்குள்ளே பேச்சு நடந்துகொண்டிருக்கிற சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்; “என்ன ஓய்! “ என்று சொல்லிக்கொண்டே, அறைக்குள்ளே நுழைந்துவிட்டார். என் காவல் கட்டுக் குலைந்த போய்விட்டது.

உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன். பாரதியார் காந்தியை வணங்கிவிட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்காந்துகொண்டார். அப்புறம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது:

பாரதியார் : மிஸ்டர் காந்தி ! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்த கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?

காந்தி : மகாதேவபாய் ! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?

மகாதேவ் : இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும்.

காந்தி : அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போட முடியுமா?

பாரதியார் : முடியாது, நாள் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி! தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.

பாரதியார் போய்விட்டார். நானும் வாயில்படிக்குப் போய்விட்டேன். பாரதியார் வெளியே போனதும், ‘இவர் யார்?‘ என்று காந்தி கேட்டார். தாம் ஆதரித்துவரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி அய்யங்கார் பதில் சொல்லவில்லை. காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்காந்துகொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை. ராஜாஜிதான், “அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி“ என்று சொன்னார்.

அதைக் கேட்டதும், “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?“ என்றார் காந்தி. எல்லோரும் மௌனமாக இருந்துவிட்டார்கள்.

இந்தச் சம்பவத்தைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள். மகாத்மா காந்தியிடம் பாரதியார் இம்மாதிரி நடந்து கொண்டிருக்கப்படாது என்று சிலர் எண்ணலாம்.

நாற்காலி இல்லாத இடத்தில் பாரதியார் நின்று கொண்டு விண்ணப்பம் செய்துகொள்கிறதா? ராஜாஜி போன்றவர்கள் பாரதியார் வந்ததும், அவரை அழகாக, காந்திக்கு அமுகப்படுத்தியிருக்க வேண்டுமல்லவா? அவர்களுடைய மௌனத்திலிருந்தும், அனாயாசமாகப் பாரதியார் உள்ளே நுழைந்ததிலிருந்தும் காந்தி கூடுமான வரையில் சரியாகப் பாரதியாரை மதிப்பிட்டு விட்டார்.

இல்லாவிட்டால், “இன்றைக்கு நமது அலுவல்கள் என்ன?“ என்று மகாதேவைக் கேட்காமலோ, ‘இப்பொழுது முக்கியமான ஒர ஜோலியைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது என்னை தொந்தரவு செய்யாமல் இருந்தால் நலமாயிருக்கும் ‘ என்று காந்தி சொல்லியிருக்கலாம். பாரதியாரும் குறிப்பறிந்து கொண்டு வெளியே போயிருப்பார்.

பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும் என்பார்கள். மேதாவியான காந்தி, மேதாவி பாரதியாரை, அவரது முக்கொலிவிலிருந்தே தெரிந்துகொள்ள முடியாதா? மேலும், ‘தங்கள் இயக்கத்தை ஆசீர்வதிக்கிறேன்’ என்று உள்ளன்போடு பாரதியார் சொன்னபொழுது தமது இயக்கத்தை ஆசீர்வதிபப்பதாகச் சொல்லக்கூடிய ஒருவர் பெரிய மனிதராகத்தான் இருக்க வேண்டும் என்று காந்தி முடிவு செய்துகொள்ள முடியாதா?

by Swathi   on 14 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.