LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி

மகாகவி பாரதியார் வரலாறு - பகுதி 3

“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை யில்லை”

இது பாரதியார் நமக்காகவும் பிறருக்காகவும் செய்த வேத சூத்திரமாகும். ஆகவே, அவரது வாழ்நாளிலே சிறப்பாக நேர்ந்த நிகழ்ச்சிகளை, அவர் வாயினின்றும் கேட்பது மிகவும் அருமை. நான் எத்தனையோ தடவைகளில் அவருடைய அடிநாள் வரலாற்றைப் பற்றிய பேச்சை சம்பாஷணையிலே நுழைத்துப் பார்த்திருக்கிறேன். வெகுசாமர்த்தியமாக, இந்தப் பேச்சை சம்பாஷணையிலேயே கிள்ளிக் கிடத்திவிட்டு வேறு ஏதேனும் ருசியுள்ள சங்கதியைப் பற்றிப் பேசத் தொடங்கிவிடுவார். பாரதியாரைப் பற்றி ஆங்காங்கே கிடைக்கும் துக்கடாக்களை நண்பர்கள் பலர் சேர்ந்து திரட்டினாலொழிய, அவரது வாழ்க்கை வரலாற்றைப் பூர்த்தி செய்ய முடியாது.

சுப்பிரமணிய சிவம் நடத்திவந்த ‘ஞானபாநு’ என்ற பத்திரிகையில் பாரதியார் ‘சின்னச் சங்கரன் கதை’ என்ற ஒரு கதை எழுதிவந்தார். ஏழு அத்தியாயங்கள் வந்தன என்பது என் நினைவு. அது பூராவும் அச்சுக்கு வருதற்கு முன்னமே, அதன் மூலக்கையெழுதுப் பிரதி திருட்டுப் போய்விட்டது. பாரதியாரிடம் வேலை பார்த்து வந்த பக்தன் ஒருவன் துரோகியாகிச் சின்னச் சங்கரன் கதையையும், வேறு சில பாட்டுகளையும், தஸ்தாவேஜிகளையும் திருடி, புதுச்சேரியில் கூடாரமடித்திருந்த ரகசியப் போலீசாரிடம் கொடுத்துவிட்டதாக அந்நாள் வதந்தி. கதை சுமார் முப்பது அத்தியாயங்கள் கொண்டது; பூர்த்தியாகவில்லை. அரசாங்கத்தாரிடம் இருந்தாலும், அதைத் திரும்பக் கொடுக்க அவர்கள் பெரிய மனது பண்ணினால், தமிழுக்கு லாபம். சின்னச் சங்கரன் கதையை அனேகமாய்ப் பாரதியாரின் சுயசரிதம் என்றே சொல்லலாம். வரிக்கு ஒரு தடவையேனும் விழுந்து விழுந்து சிரிக்கும்படியான எழுத்து.

பாரதியாரைப்பற்றி நல்ல விவரங்கள் கொடுக்கக் கூடியவர்களுள் முதன்மையானவர் மண்டையம் சீனி வாஸாச்சாரியார். அவர் சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குப் பக்கத்தில் வசித்து வருகிறார். இன்னொருவர் துரைசாமி அய்யர். இவர் சென்னையில் பிரபல வக்கீல். ராயப்பேட்டையில் பழைய பாம் குரோவ் என்ற பங்களாவில் இருந்தார்; இப்பொழுது புதுச்சேரியில் அரவிந்த ஆசிரமத்திலேயே இருந்து வருகிறார். “லோகோபகாரி” பத்திரிகையின் ஆசிரியர் பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்குப் பல குறிப்புகள் தெரிந்திருக்கலாம். பாரதியாரின் மனைவி ஸ்ரீமதி செல்லம்மாள், பாரதியாரின் குடும்ப வாழ்க்கையையும் மற்றும் பல விவரங்களையும் பற்றி உண்மையான தகவல்களைத் தர முடியும். புதுச்சேரியில் வசிப்பவரும் “பாரதிதாஸன்” என்ற புனைபெயருடன் பாரதியாரைப் போலவே அருமையாகக் கவி பாடும் ஆற்றல் கொண்டவருமான வாத்தியார் சுப்புரத்தினம், பல வினோதத் துக்கடாக்கள் சொல்லக்கூடும். அரவிந்தர் ஆசிரமத்தில் வசித்து வரும் மகா புத்திசாலியான அமிருதா என்ற ஆராவமுத அய்யங்கார், நகைச்சுவையில் பொருள் செறிவு கலந்து பாரதியாரைப்பற்றிப் பல குறிப்புகள் தரக்கூடும். பாரதியாரின் தம்பி விசுவநாத அய்யர் (பி.ஏ., எல்.டி.) சிலவற்றை சொல்லக்கூடும். பாரதியாரைப் படம் பிடித்தது போலவே, பாரதியாரின் பாட்டுகளைப் பாடக்கூடிய சங்கர அய்யர் (பாரதியாரின் அத்தை மகன்) சென்னையில் இருக்கிறார். அவருக்குப் பாரதியாரைப் பற்றித் தெரியும். பாரதியாருக்கும் அவரிடம் நிரம்ப அன்பு உண்டு. பாரதியாரின் பக்தர்களும் அபிமானிகளும், இவர்கள் யாவரையும் கலந்துகொண்டால் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை ஒருவாறு பூர்த்தி செய்யலாம். இதனிடையே என்னாலான கைங்கர்யத்தைச் செய்கிறேன்.

1882 ஆம் வருஷத்தில் சுப்பிரமணிய பாரதியார் அவதரித்தார். பிறந்த ஊர் எட்டயபுரம். இது திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கிறது. எட்டயபுரம் ஒரு பெரிய ஜமீன். ஆனால், ஜமீன்தாருக்கு ராஜா என்ற பட்டம். இந்த சமஸ்தானத்தைக் “கவுண்டனூர் சமஸ்தானம்” என்று பாரதியார் சின்னச் சங்கரன் கதையிலே வர்ணிக்கிறார். பாரதியார் பிறப்பிலே, ஸ்மார்த்த பிராமண, கண்டர மாணிக்க பிரகசரண வகுப்பைச் சேர்ந்தவர்.

“தோடி நாராயண அய்யங்கார், பல்லவி சுப்பராமய்யன், கம்பராமாயணம் முத்திருளுத்தேவர்” (இவை யாவும் புனைபெர்யள்) முதலிய புலவர்கள் அலங்கரித்த சமஸ்தானத்திலே (எட்டயபுரத்திலே) சேவல் சண்டையால் செருக்கடைந்த அடாணா ராமசாமிக் கவுண்டரின் (சமஸ்தானாதிபதிக்குப் பாரதியார் சின்னச் சங்கரன் கதையில் கொடுத்த கற்பனைச் செல்லப் பெயர்) குடைக்கீழ், பாரதியார் திருவவதாரம் செய்தார்.

பாரதியாரின் தகப்பனாருக்குச் சின்னச்சாமி அய்யர் என்று பெயர். அவருக்கும் சமஸ்தானத்துககும் இடையே அளவு கடந்த நேசம். அவர் சம்பந்தப்பட்ட வரையில் அரண்மனைப் பாரா எதுவுமே கிடையாது. தாராளமாய் எந்த நேரத்திலும் அரண்மனையில் உட்புகுந்து வெளியே வரலாம். சின்னச்சாமி அய்யர் கணித சாஸ்திரத்தில் ருசியும் தேர்ச்சியும் பெற்றவர். பரம்பரையையும் பழக்கத்தையும் துணைக்கொண்டு, அய்யர் தமது குமாரனைக் கணிதப் புலவனாகச் செய்யப் பெரிதும் முயன்றார். அவருக்கு யந்திரப் பழக்கம் மிகுதியும் உண்டாம். மேனாட்டு யந்திரங்களை, அக்காலத்திலேயே (சுமார் அறுபது வருஷங்களுக்கு முன்னரே) தாமே, எவர் உதவியுமில்லாமல் பிரித்து, மறுபடியும் பூட்டக்கூடிய சாமர்த்தியமும் சக்தியும் பாரதியாரின் தகப்பனாருக்கும் இருந்ததாம்.

கணித சாஸ்திரத்திற்குக் கற்பனா சக்தி அதிகம் தேவையில்லை என்று கோல்ட்ஸ்மித் என்ற ஆங்கில நாட்டு மேதாவி எழுதியிருக்கிறார். யந்திரம் ஓட்டும் வேலைக்கு அதிகமாகப் புத்தி நுட்பம் வேண்டியதில்லை என்று சொல்லிக்கொள்கிறார்கள். இவ்விரு துறைகளிலும் பையன் பாரதி தேர்ச்சியடைந்து, குவியல் குவியலாகப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்பது தகப்பனாரின் கருத்து. அல்லது ஏதோ அற்பப் படிப்புடன் இந்தியாவை விட்டு வெளியேற்றி, சீமையிலே தள்ளி, சில காலம் அங்கே இருக்கச் செய்யவேண்டும்; தமிழ் நாட்டுக்கு வரும்பொழுது, பாரதியார் ஜில்லா கலெக்டராய்க் கைச்சொக்காய், கால் சராயுடன் வரவேண்டும் என்பது தகப்பனாரின் பேரவா. ஆகவே, பிள்ளையின் ஆரம்பப் படிப்பு விஷயத்தைத் தாமே கொஞ்ச காலம் நடத்தி, பிறகு ஆவலுடன் மேற்பார்வை பார்த்து வந்தார்.
கணக்குப் போடப் பையனைத் தகப்பனார் கூப்பிட்டால், பாரதியார் மனத்துக்குள்ளேயே, கணக்கு, பிணக்கு, வணக்கு, மணக்கு, ஆமணக்கு என்று தொடர் அடுக்கிக் கொண்டே போவார்.

யந்திரத்துககு நேர்ந்த கதியும் அதுதான். யந்திரத்துக்கு மட்டும் பாரதியாரின் கற்பனையிலே அடுக்குத் தொடர் அகப்படுவது அருமையா? தகப்பனார் மிக்க ஆவலுடனும் தெளிவுடனும் கணக்கைப் பையனுக்குப் போதிக்க எத்தனித்தார். ஆனால் பிள்ளையோ, தமிழ்ச் சொற்களைச் சந்தத்துடன் அடுக்கிக்கொண்டே போகும். இந்த வெள்ளைத் திருட்டைத் தகப்பனார் கண்டுகொண்டார். ஏதேனும் வைதால், திட்டுக்குச் சந்த அடுக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் தகப்பனாருக்கு உண்டு. ஏதோ ஒரு சமயம், கணக்குப் போடாமல் பாரதியார் விழித்துக்கொண்டிருந்ததைத் தகப்பனார் கண்டார். இது என்ன விழி? என்றார் உடனே பாரதியார் உரக்கவே, “விழி, பழி, வழி, பிழி, சுழி” என்று கூறிக் கணக்கிலே சுழி போட்டுவிட்டாராம். பையனுக்குச் சித்தப் பிரமையோ என்று எண்ணித் தகப்பனார் மனம் ஏங்கிப் போனார்.

சின்னச்சாமி அய்யருக்குப் பிள்ளையினிடத்தில் அளவில்லாத வாஞ்சை. பிள்ளையை அடித்துத் தொந்தரவு செய்ய அவருக்கு விருப்பமில்லை. பாரதியாருக்கு மிகவும் மெல்லிய உடல். அந்த உடலிலும் ஆவி இருக்குமோ என்று தோன்றும். சாகும் வரையில் பாரதியாருக்குத் தேகப் பயிற்சியில் ரொம்ப உற்சாகம். குஸ்திபோட வேண்டுமென்று பல காலம் சொல்லுவார். எவரேனும் நேர்த்தியாக ‘கஸ்ரத்’ செய்தால், பாரதியார் சொந்த நினைவு இல்லாமல் தாம் உட்காந்திருக்கும் இடத்திலேயே தம்முடைய கை கால் உடம்பு முதலியவைகளை அப்படியுமிப்படியும் ஆட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவருடைய நண்பர்கள் வாய்க்குள்ளாகவே சிரிப்பதுண்டு. பாரதியார் தாயில்லாப் பிள்ளை என்ற காரணத்தினால் (பாரதியாரின் குழந்தைப் பருவத்திலேயே அவருடைய தாயார் இறந்துபோனார்) சின்னச்சாமி அய்யர் தமது பையனைத் தொட்டு அடிப்பதற்கு மனங்கொள்ளவில்லை.

தம் தாயைப் பற்றிப் பாரதியாருக்கு நல்ல ஞாபகம் இருந்ததில்லை. அந்த வகையில் தமது அனுபவம் நிறைந்து பூர்த்தியாக இருக்கவில்லையே என்று அவர் மனம் வருந்துவார்; அண்டை வீட்டுக் குழந்தைகளுக்கு இருந்த தாயின் சலுகை தமக்கு இருந்ததில்லையே என்று மனம் வாடுவார். தாயார் இந்த உலகத்தை விட்டுச் சீக்கிரம் அகன்றதாலேயே, பாரதியார் சாகுமளவும் குழந்தையாயிருந்து வந்தார். நேற்றைய தினம் பிறந்த பெண் குழந்தையும் பாரதியாருக்கு அம்மாதான். வயதுக் கணக்கு அவருக்குத் தொந்தரவு கொடுத்ததேயில்லை. “அம்மா, அம்மா” என்று அவர் தமது பாட்டுகளில் கூவி அழைத்திருப்பதை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள்.

வீதியிலே, ஒரு குழந்தையைத் தாயில்லாப் பிள்ளை என்று எவரேனும் சுட்டிக் காட்டிவிட்டால், பாரதியார் அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்றுவிடுவார். அவர் மனதில் என்ன என்ன எண்ணங்கள் தோன்றி மறையுமோ, அவைகளை நான் அறிந்ததில்லை. “என்ன ஓய்! எனக்கு அம்மா மயக்கத்திலிருந்து ஒரு நாளும் விடுதலை இல்லையா?” என்று பக்கத்திலிருக்கும் நண்பரை வினவிவிட்டுச் சிறிது நேரத்துக்கெல்லாம், “அம்மா, அம்மா” என்று இசையில் கூவுவார். ஆகவே, கணிதத்தில் புலமை வாய்ந்த, உயிருள்ள தகப்பனார் தம் பையனைக் கணித சாஸ்திரியாகச் செய்ய முடியவில்லை. மறைவிலிருந்தே தாய், பாரதியாரைக் கவியாக வளர்த்துவிட்டாள்.

பையனாக இருக்கையில், பாரதியாருக்கு எட்டயபுரம் அரண்மனையில் சலுகை அதிகம் உண்டு. சமஸ்தானம் பாரதியாரை அன்புடன் நோக்கி வந்ததால், சமஸ்தான வித்துவான்களும் மற்றவர்களும் பாரதியாரிடம் அன்பும் மரியாதையும் காட்டி வந்தார்கள். பாரதியாருக்குப் “பாரதி” என்ற பட்டம், சமஸ்தான வித்துவான்களால் அளிக்கப்பட்டதுதான். தமிழ்ப் பண்டிதர்களுக்கு இதைப் பற்றிச் சந்தேகம் வேண்டாம். குழந்தையாயிருக்கும்பொழுதே பாரதியார், கேட்போர் திகைக்கும்படி, வெடுக்கு வெடுக்கென்று பேசுவார்; பதில் சொல்லுவார். நூற்றுக் கிழவனுடைய அனுபவத்தை, பாரதியார் தமது இளம்பருவத்திலேயே காட்டி வந்தார். சமஸ்தானத்தின் ஸன்னிதானத்தில் புலவர்கள் நூல்களை அரங்கேற்றுகையில், இளம் பாரதியார் சபையில் ஒரு மெம்பர். பாரதியார் தமது அபிப்பிராயத்தைக் கூசாமல் சொல்லிவிடுவாராம். “பழுதை என்று மிதிக்கவும் முடியவில்லை; பாம்பு என்று மதிக்கவும் கூடவில்லை” என்று வித்துவான் கள் முணுமுணுப்பார்களாம்!

சிறு பிராயத்தில், பெரிய புலவர்களின் நட்பும், சமஸ்தானத்தின் தயவும் பாரதியாருக்கு அபரிமிதமாகக் கிடைத்திருந்தபடியால், அவர் தேனை நுகரும் வண்டைப் போலக் களி எய்தி வாழ்ந்து வந்தார். லேசாகப் படிப்பதும், எளிதிலே பரீட்சையில் தேறுவதும் அவரது வழக்கமாயிற்று. இலக்கணத்தின் கொடிய விதிகளில் சிலவற்றை உடைத்தெறிந்துவிட்டுக் கவிகள் பாடத் தொடங்கினார். சிங்கார ரஸம் பொங்கிய சமஸ்தானமானதால், பாரதியார், ‘மடல்களும் உலாக்களும்’ முதலிலே பாடினார். நல்ல வேளையாக, அவை இன்றைக்கு இருந்த இடம் தெரியாமல், மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிட்டன. அவை இப்பொழுது உயிருடன் இருந்திருக்குமாயின், பாரதியாரின் பெரும் புகழுக்கும் பெயருக்கும் குறுக்கே வந்து படுத்துக்கொண்டிருக்கும். நண்பர்களின் நிமித்தம், பாரதியார் தனிப் பாடல்கள் பாடுவதுண்டாம். அவை காகிதத்தில் எழுதப்படாததனால், செல்லரித்திருக்க வழியில்லை; உலகத்தின் ஒலியிலே கலந்தொளிந்து போயிருக்கலாம்.

பாரதியாருக்கு வயது வருமுன்னரே அவருடைய தகப்பனார் மரணமடைந்தார்.

by Swathi   on 14 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.