LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி

மகாகவி பாரதியார் வரலாறு - பகுதி 4

பாரதியாரின் தாயார் இறந்து போனபின், சின்னச்சாமி ஐயர் மறுதாரம் விவாகம் செய்துகொண்டார். அந்த அம்மாள் மூலமாய், சின்னச்சாமி அய்யருக்கு ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தார்கள். பாரதியாரோ, சமஸ்தானத்துச் சிறு கவிராயர். தம்பியும் தங்கையும் சிறு குழந்தைகள். யந்திர முயற்சியை இந்தியாவில் ஸ்தாபிக்க வேண்டும் என்ற பிடிவாதத்தினால் சின்னச்சாமி அய்யர் தமது சொத்து முழுமையையும் இழந்தார்.

இந்த நிலைமையில், பாரதியாரின் சீமைப் படிப்புப் பற்றி யோசிக்க வேண்டிய தேவையே இல்லாமல், சின்னச்சாமி அய்யர் இறந்துபோகவே, அந்தக் குடும்பம் தவித்துத் தத்தளித்ததை விவரித்துக் கூற வேண்டுமா? இந்த அனுபவம் ஏகதேசம் எல்லாம் குடும்பங்களிலும் காணக்கூடியதுதான்; குடும்பத்தின் மூலபுருஷன் மறைந்து, அவருக்குப் பின், அவரை அண்டி வாழ்ந்து வந்தவர்கள் திக்கற்றுத் தவிப்பதை, நமது தேசத்தில் நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்களில், நாம் சாதாரணமாய்ப் பார்க்கலாம். அந்தக் காலத்தில் இன்ஷுரன்ஸ் கம்பெனிகளும் அதிகமாக முழங்கவில்லை. அப்படியிருப்பினும் சின்னச்சாமி அய்யர் இன்ஷுரன்ஸ் கம்பெனிக்குப் பணம் கட்டியிருப்பாரோ என்பது சந்தேகம். அதற்குக் கட்டக்கூடிய பணத்தை, யந்திரத்தைப் பழுது பார்க்கச் செலவு செய்யத்தான் அவருக்குப் புத்தி போயிருக்கும் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். தாம் கொண்டிருந்த ஒரே கருத்தில் சின்னச்சாமி அய்யர் ரொம்பப் பிடிவாதம் காட்டுவார் என்று பாரதியார் அடிக்கடி சொல்லுவதுண்டு.

இந்தச் சமயத்திலோ, கொஞ்ச காலம் பொறுத்தோ (நிச்சயமாய்ச் சொல்லுவதற்கில்லை) பாரதியாருக்குக் கலியாணமும் ஆகிவிட்டது. ஆகவே, புலவர் வறுமை அவரைப் பால்யத்திலே பிடித்துக்கொண்டுவிட்டது என்று சொல்லலாம். தகப்பனார் இறந்தவின் பாரதியாரின் படிப்பு விஷயம் எப்படியிருக்கும்? நல்ல நாளிலேயே நாழிப்பால் கறக்காத பசுமாடு சங்கதிதான்.

சிறு பிராய முதலே, பாரதியார் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். எட்டயபுரம் ராஜா பாரதியாரின் பேச்சில் ஈடுபட்டுப் போனதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? ஆனால், சிங்கார ரஸஸ பாட்டுகளை மிகுதியும் வேண்டின ராஜாவோடு, பாரதியார் நீண்ட காலம் சல்லாபம் வைத்துக்கொள்ள முடியாமல் போயிற்று.

‘விளையும் பயிர் முளையிலே’ என்று சொல்லுகிறார்களே, அதைப் பிரத்யட்சமாகப் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம். சாதாரணமாய்ப் பத்தாயிர ரூபாயுள்ளவனைப் பணக்காரன் என்று மதித்து, அவனுடைய உறவை நாடும் மனிதர்களையே நாம் எல்லோரும் பார்க்கிறோம். மகா புத்திசாலிகளுங்கூட வயிற்றுப் பிழைப்பை உத்தேசித்து, அசதட்டுப் பணக்காரனுடைய அவலச் சொற்களில்கூட அழகும் அர்த்தமும் இருப்பதாக வர்ணிக்கும் இந்தத் தேசத்தில், பாரதியார் எட்டயபுரம் ராஜாவின் நன்மதிப்பைப் பெரிதாகக் கொள்ளவில்லை என்றால், அது தினமும் நடைபறுகின்ற சம்பவமா?
ராஜாவின் நட்பினால், பாரதியாருக்கு நஷ்டமாக ஏற்பட்டது ஒரு கெட்ட பழக்கம். பாரதியாரின் உடம்பு ரொம்ப ‘பூஞ்சை’ (மெல்லிய உடல்) தேகத்திலே அதிகமாக வலு கிடையாது. ராஜாவுக்குப் பாரதியாரின் பேரில் ரொம்ப வாஞ்சை. “தம்பி! உடம்பை நீ இப்படி வைத்துக்கொண்டிருக்கக் கூடாது. உன்னைப் பார்த்தால், புளிச்சேப்பக்காரன் மாதிரி இருக்கிறாய், நீ நன்றாகச் சாப்பிட வேண்டும். பசி ஏற்படுவதற்கு நீ பூரணாதி லேகியம் சாப்பிட்டால் நல்லது. பூரணாதி லேகியத்தின் மகிமை உனக்குத் தெரியாது. அந்த லேகியம் சாப்பிட்டால் ஓர் அண்டாச் சோறு வறிற்றுக்குள்ளே போய்விடும். அது மட்டுமா? அண்டாவே உள்ளே போனாலும் போய்விடும்” என்று விகடம் பேசித் தட்டிக் கொடுத்து, பாரதியாரைப் பூரணாதி லேகிய யோகத்தில் தலைகுப்புற இறங்கும்படியாகச் செய்துவிட்டார். இந்தச் சம்பவத்தை, பிற்காலத்தில் தமாஷாயிருக்கிற சமயத்தில், ரொம்ப வேடிக்கையாகப் பாரதியார் வர்ணிப்பதுண்டு.

கங்காபானம் செய்ய வேண்டும் என்று பெரியார்கள் சொல்லுவதை வேறு விதமாக மாற்றி, பாரதியார் சிறு பிராய முதல் ‘கஞ்சாபான’ முயற்சியில் மோகங்கொண்டார். பணக்காரர்களின் உறவு ஏழைகளுக்கு நல்ல பழக்கதை உண்டாக்காது என்று பலர் சொல்லுவதற்குப் பாரதியாரே பெரிய அத்தாட்சியாக விளங்குகிறார். உடல் வலிமைக்காகப் பாரதியார் பூரணாதி உட்கொண்டதும், அதே உடல் வலிமையின் பொருட்டுக் காந்தி தமது சிறு பிராயத்தில் திருட்டுத்தனமாய் மாமிச போஜனம் செய்து, இரவில் பசியில்லை என்று தம் தாயிடம் சொன்னதும் குறிப்பிடத் தக்கவை.

பாரதியாருக்கு உபதேசம் செய்த ராஜாவுக்கும் காந்தி உபதேசம் செய்தவருக்கும் கெட்ட எண்ணம் கிடையாது. பால்யத்தில் ஒன்றைக் கேட்டாலும் பார்த்தாலும் அது எவ்வாறு அழுத்தமாகப் பதிகின்றது என்பதை இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஆகவே, சிறு பிள்ளைகள் விஷயத்தில் வயதில் பெரியார்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு, இந்த இரண்டு சம்பவங்களும் எச்சரிக்கைகளைப் போல இருக்கின்றன.

எட்டயபுரத்தில் இருக்க மனமில்லாமல் பாரதியார் காசிக்குத் தமது அத்தை வீட்டுக்குச் சென்றார்; கல்கத்தா சர்வகலாசாலைப் பிரவேசப் பரீட்சைக்குப் படித்தார். காசியிலேயே, தனிப் பல்கலைக் கழகம் (சர்வ கலாசாலை) அப்பொழுது இல்லை. அக்காலத்தில் சர்வ கலாசாலையாக அமையாத ஸென்ட்ரல் ஹிந்து காலேஜைச் சேர்ந்த, உயர்தரப் பள்ளிக்கூடத்தில் பாரதியார் படித்தார். தாம் பள்ளிக் கூடத்துக்குப் போன விதரணையைப் பாரதியார் கேலி செய்து பேசுவதுண்டு. அந்தக் கேலியின் சாரம் இதுதான்.

“காலை மாலை நூலை ஓது என்கிறார்கள். அது தப்பு. நான் படித்த காலத்தில், நான் நூலையே ஓதினதில்லை. பள்ளிக்கூடத்துக்குக் காலையில் போனால் மாலையில் போகமாட்டேன்; மாலையில் போகலாம் என்று எண்ணிக் காலையில் போகமாட்டேன். பிறகு ஓர் எண்ணம் தோன்றும். மாலையிலும் போகமாட்டேன். காலை மாலை உருண்டோடிப் போகும். புஸ்தகம் ஹஸ்தபூஷணம் என்பதும் தவறு. ஹஸ்தத்துக்குப் பூஷணம் (கைக்கு அலங்காரம்) நல்ல ஸில்க் சட்டை, ஜோரான பச்சைக்கல் மோதிரம். நான் புஸ்தக மூட்டையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் போனதேயில்லை. சட்டை ஜேபியில் சில கடிதங்கள், ஒரு பென்சில் – இவைகள்தான் இருக்கும். வாத்தியார் பாடம் சொல்லிக்கொண்டிருப்பார். அவரைப் பற்றி ஹாஸ்யக் குறிப்புகள், வசனத்திலும் பாட்டிலும் எழுதி அடுத்த பையனிடம் நீட்டுவேன். இருவரும் சிரிப்போம். பிறகு பெஞ்சு பூராவும் பரவிவிடும். ஒரே சிரிப்பு. என்ன சத்தம் என்று வாத்தியார் கேட்குமுன்னரே, மெதுவாக வகுப்பிலிருந்து நழுவிவிடுவேன்; வீட்டுக்கு வந்து, மாடியிலேறி, கங்காப் பிரவாகத்தைப் பார்த்துக் களிப்பேன். இதுதான் நான் படித்த கதை”

இவ்வாறு பாரதியார் பிற்காலத்தில் கேலி செய்வதைக் கொண்டு, அவர் ஒன்றும் படிக்கவில்லை என்று யாரும் அவசரமாக முடிவுக்கு வந்துவிட வேண்டாம். பாரதியார் பள்ளிக்கூடத்துக்கு இவ்வளவு டோகர் கொடுத்தாலும், பிரவேசப் பரீட்சையில் முதல் வகுப்பில் தேறினார். அக்காலத்தில் காலேஜ் படிப்புக்கு முதல் படியான எப்.ஏ. வகுப்பிலும் சேர்ந்தார். குடும்பக் கவலையினாலோ கல்லூரிப் படிப்பில் மனமில்லாததாலோ, ஒரு வருஷத்துக்குள் அந்தப் படிப்பிற்கும் சலாம் போட்டுவிட்டு நின்றுவிட்டார்.

‘தத்தாரி’ மனங்கொண்ட (ஒரு விஷயத்திலும் பிடிப்பில்லாத; இந்தப் பிள்ளையை, உற்றார் உறவினர் எவ்வாறு நேசித்து, பராமரித்து, பாதுகாக்க முடியும்? பாரதியார் ‘மண்டு’வாக இருந்தாலும் அவர்கள் ஒருவாறு தங்கள் மனத்தைத் தேற்றிக்கொண்டிருப்பபார்கள். வீட்டிலே அதிகமாகப் படிக்காமல் பரீட்சையில் முதல் வகுப்பிலே தேறின பாரதியார், ‘ரொம்ப புத்திசாலி’ என்று அவர்கள் கண்டுகொண்டார்கள். அதனாலேதான் தொல்லைப்பட்டார்கள்.

பரீட்சை தேறினதில் இன்னொரு விசேஷம். பிரவேசப் பரீட்சைக்கு இரண்டு பாஷைகள் வேண்டும். இங்கிலீஷ் ராஜாங்கத்தில் ஒரு பாசை இங்கிலீஷ் என்று சொல்லவும் வேண்டுமா? காசியிலே தமிழ் பாஷை கிடையாது. ஆகவே, பாரதியார் தமிழிலே பரீட்சை கொடுக்க முடியாது. இரண்டுடொரு வருஷங்களில் ஹிந்தி பாஷையைக் கற்றுக்கொண்டு, பரீட்சையில் முதல் வகுப்பில் பாரதியார் தேறினது மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயமல்லவா? பாரதியாரின் ஹிந்தி உச்சரிப்பைக் கேட்டவர்கள், அவர் வடக்கத்தி ‘கோஸாயி பிராமணரோ’ என்று சந்தேகப்படும்படி இருக்கும். அவ்வளவு ‘டாண்டாண்’ என்று பேசுவார். ஹிந்தி பாஷையிலே, சில சப்தங்களைத் தொண்டைக்குக் கீழிருந்தே (நாபிக் கமலத்திலிருந்து என்றுகூடச் சொல்லலாம்) கொண்டுவர வேண்டும். தமிழர்களுக்கு அது ரொம்பக் கஷ்டமாயிருக்கும். ஆனால் பாரதியாருக்கு அது தண்ணீர் பட்ட பாடு; ரொம்ப லேசாக வரும். பாரதியார் ஹிந்தி ரொம்ப அழகாகப் பேசுவார், உச்சரிப்பார்.

என்ன காரணத்தினாலே, பாரதியாருக்குக் காசியும் படிப்பும் பிடிக்கவில்லை. எட்டயபுரத்துக்கு வரும்படியாக ராஜா பாரதியருக்குக் கடிதம் எழுதினார். அதுதான் சாக்கு. எட்டயபுரத்துக்கு வந்த பாரதியார், காசிக்குத் திரும்பிப் போகவேயில்லை. படிப்பு முற்றிற்று, அரண்மனைத் தயவைத் தவிர, நிலைத்த உத்தியோகம் கிடையாது. ‘கையில் காசு’ சங்கதியைச் சொல்லத் தேவையில்லை.

by Swathi   on 14 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.