கர்மயோகி பத்திரிகையைப் பாரதியார் தொடங்கி நடத்திய காலத்தில் இந்தியா முழுதும் அரசியல் கிளர்ச்சி அதிகம். இதனிடையே லோகமான்ய திலகருக்கு ஆறு வருஷம் சிறைவாசம். அவர் பர்மாவுக்கு கொண்டுபோகப்பட்டார்.
அரசாங்கத்தார் இரண்டு வித உபாயங்களைக் கையாண்டார்கள்; அடக்குமுறையை வலக்கையால் உபயோகப்படுத்திக்கொண்டார்கள்; இடக்கையால் சீர்திருத்தம் வழங்கினார்கள். இதற்கு மிண்டோ-மார்லி சீர்திருத்தம் என்று பெயர்.
இந்தச் சீர்திருத்தத்தின் மூலமாய், மாகாணச் சட்ட சபையில் ஜனங்களின் பிரதிநிதிகள் பெரும்பன்மையில் இருப்பார்களென்று மார்லி பிரபு சத்தம் போட்டு சீமையிலிருந்து சொன்னார். இது தவறு என்று அரவிந்தர் தமது கர்மயோகி் பத்திரிகையில் தெளிவாக எடுத்துக் காண்பித்தார்.
சட்டசபையில் கேள்வி கேட்கும் உரிமைதான் ஜனப் பிரதிநிதிகளுக்கு மிச்சப்படும் என்றும், கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சர்க்கார் பிரதிநிதிகளிடமிருந்து பெற முடியாது எனறும் அரவிந்தர் எழுதியிருந்தார் அரவிந்தர் 1909 ஆம் ஆண்டில் எழுதியதை, தேசமக்கள் இருபது வருஷங்களுக்குப் பிறகு அனுபவத்தில் தெரிந்து கொண்டார்கள்.
சில்லறைச் சீர்திருத்தங்கள், புரட்சிகரமான பெரிய சீர்திருத்தங்களுக்கு விரோதிகள் என்று மார்லி பிரபு ஓரிடத்தில் கூறிய உண்மையைத் தேசபக்தர்கள் எடுத்துக் காண்பிப்பதற்கு அப்பொழுது சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பாரதியார் கைநழுவவிடவில்லை. ‘கர்மயோகி’யில் அழுத்தமாக அழுத்து வேலை நடந்துகொண்டு வந்தது.
பதஞ்சலி யோக சூத்திரம் சமஸ்கிருதத்தில் இருந்ததைச் சுவாமி விவேகானந்தர் இங்கீலீஷில் மொழிபெயர்த்தார். மூலத்துக்கும் விவேகானந்தருடைய மொழிபெயர்ப்புக்கும் சில இடங்களில் முரண் இருக்கிறது என்பது பாரதியாரின் எண்ணம். மூலத்திலிருந்தே அவர் யோக சூத்திரத்தைத் தமிழில் தர்ஜமா செய்து, பகுதி பகுதியாகக் ‘கர்மயோகி’ பத்திரிகையில் வெளியிட்டார்.
மொழிபெயர்ப்பு வேலையே எப்போதும் சிரமம். எழுதிய ஆசிரியரின் மனோபாவத்தை உணராமல், மொட்டைத்தனமாய் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜமா செய்வது பள்ளிக்கூடப் பையன்களுடைய வழக்கம்.
பாரதியார் மொழிபெயர்த்தது நிரம்ப நன்றாயிருக்கிறதென்று அரவிந்தர் முதலிய பெரியார்கள் சொன்னது எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. மகா பாரதத்தைக் கிரிப்பித் என்ற இங்கிலீஷ்காரரும் ராமேஷ்சந்தர தத்தர் என்ற வங்காளியும் தனித்தனியே தர்ஜமா செய்திருக்கியார்கள். இவைகள் சாரமற்றவை என்பது அரவிந்தர், பாரதியார், வ.வே.சு. அய்யர் – இவர்களின் கருத்து.
மொழிபெயர்ப்பைப் பற்றிய இவ்வளவு விஸ்தாரமாகப் படிப்பவர்களுக்கு அலுப்பு வரக்கூடிய அளவில் ஏன் பேசவேண்டுமென்றால், ஒரு காரியத்தின் வெளியுருவத்தைக் காட்டிலும் அந்தக் காரியத்தைத் தூண்டும் மூல சக்தியும் மனோபாவமுந்தான் உயர்ந்தவை என்று சொல்லுவதற்குகவே. மேதாவிகள், விஷயத்தின் மர்மத்தை விரைவில் உணர்கிறார்கள்; மற்றவர்கள் வெளியுருவத்தைக் கண்டு மயங்கிவிடுகிறார்கள்.
பாரதியார் வெறும் கவி மட்டுமல்லர். தத்துவதரிசனத்தில் அவருக்கு அளவிலா ஆவல், ‘சொல் வேண்டும்’ என்று பாரதியார் பாடியிருக்கும் பாட்டு, அவருடைய தத்துவ தரிசனத்தின் ஆவலைக் காண்பிக்கிறது. இயற்கையின் மர்மத்தை விண்டு காண்பிக்கும் சொல் வேண்டும்; அதன் மூலமாய்த் தமிழர்களும் ஏனையோரும் எல்லையற்ற சக்தியைப் பெற வேண்டும் என்பது பாரதியாரின் வாழ்க்கை ஆவல்.
பத்திரிகைத் தொழில் நின்று, பட்டினி கோர உருவத்துடன் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. பட்டினிக் காலங்களில் மேதாவிகள், கர்மவீரர்கள், வள்ளுவரைச் சரண்புக வேண்டியதுதான். செவிக்கு உணவில்லாத பொழுது, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்ற வள்ளுவர் வாக்கை, வயிற்றுக்கும் உணவில்லாதபொழுது, செவியைக் கொண்டு காலந்தள்ள வேண்டும் என்று மாற்றிவிடலாம் எனத் தோன்றுகிறது.
வரம்பில்லாமல் தத்துவம் பேசிக்கொண்டே போகிறேன் என்று நீங்கள் வருந்தக்கூடாது. இவையெல்லாம் தத்துவமே இல்லை. பூரண வாழ்வு வாழத்துணிந்த மேதாவிகளுக்கு, வீரர்களுக்குப் பொதுவாக எந்த நாட்டிலும், சிறப்பாகச் சுதந்தரமில்லாத நாட்டில் எத்தனை விதத் துன்பங்கள் நேருகின்றனவென்றும், அவைகளை மேதாவிகள் எவ்விதம் ஜீரணம் செய்து கொள்ளுகிறார்கள் என்றும் நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
நாம் எல்லோரும் ஞானிகள் அல்ல; வீரர்களுமல்ல, ஞானம் பிறக்கிறது என்பது பெரும்பாலும் தவறு. கள்ளி வயிற்றில் அகில் பிறப்பதைப் போல, தப்பிதத்திலிருந்து ஞானோதயம் ஏற்படுவது சாதாரணம், விளையாட்டுச் செயலிலிருந்து வீரத்தனம் உண்டாவது சகஜம். மேதாவிகளுக்குத் தப்பிதம் செய்யத் துணிச்சல் இருக்கிறது. மற்றவர்களுக்கு இந்தத் துணிச்சல் சாதாரணமாய் இருப்பதில்லை, மேதாவிகளையும் வீரர்களையும் ஆட்டி வைப்பது அவர்களுடைய உணர்ச்சி. அந்த உயர்ச்சி கட்டுக்கும் கட்டுப்பாட்டுக்கும் அஞ்சி ஒடுங்குவதில்லை.
புதுச்சேரியில் மறைந்த தேசபக்தர்கள் என்ன செய்ய முடியும்? அரசாங்கத்தாருக்குக் கோபம் வராத நிலைமையில் அவர்களால் பத்திரிகை நடத்த முடியாது. தேசபக்தர்களுடைய உணர்ச்சி துடிதுடிக்கிற அளவுக்குத் தக்கபடி, அரசியல் நிர்வாகிகளுக்குக் கோபம் உண்டாவது இயல்பு.
1910 ஆம் வருஷத்தில் பாரதியாரின வாழ்விலே, மேற்சொன்ன வகையில் ஒரு நெருக்கடியான நிலைமை ஏற்பட்டது. லோகத்தில் ஒரு விசித்திரம் உண்டு. இணையற்ற மேதாவிகள் பிறந்தாலும், அவர்களுடைய மேதையைச் சிலரால்கூட அனுபவிக்க முடியாமல் போனால், மேதாவிகள் கதி அதோகதிதான். எவ்வளவுதான் திட சித்தம் இருப்பினும், மேதாவிகள் மனம் உடைந்து போகக்கூடிய நிலைமைக்கு வந்துவிடுவார்கள். பிற நாட்டுச் சரித்திரங்களைக் கொண்டுதான் மனத்தில் தைரியம் உண்டாக்கிக் கொள்ளவேண்டும்.
பாரதியார் மனமுடைந்து போகவேண்டிய தருணத்தில அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். மானிக்டோலா வெடிகுண்டு வழக்குக் காலத்தில் காவலிலிருந்த அரவிந்தர், சிறையில் கண்ணனைக் கண்டு தைரியமும் மனச்சாந்தியும் கொண்டதாக ஒரு பிரசங்கத்தில் சொல்லியிருக்கிறார். இத்தகைய மேதாவியைக் கண்ட பாரதியார் உள்ளப் பூரிப்படைந்தார். அரவிந்தரின் சம்பாஷணையினால் பாரதியாரின் ’ஊக்கமும் உள்வலியும்’ வளர்ந்தன. பாரதியாரின் பேச்சினால் அரவிந்தர் மகிழ்ச்சியடைந்தார். அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்ததும், பங்களா முதலிய வசதிகள் அவருக்கு இருக்கவில்லை. கலவை சங்கர செட்டியார் வீட்டு முன்றாவது மெத்தையில் அரவிந்தரும் அவரது சிஷ்யர்களும் வாசம் செய்து வந்தார்கள். சாயங்கால வேளைகளில் பாரதியாரும் பொறுக்கி எடுத்த அவரது நண்பர்கள் சிலரும் சம்பாஷணைக்காக அரவிந்தரின் இடத்துக்குச் செல்வார்கள்.
அந்தக் காலத்தில் இந்தியாவில் இருந்த தலைவர்களிடம் ஏகதேசம் எனக்குப் பழக்கம் உண்டு. சத்தியாக்கிரக இயக்கத்துக்குப்பின் தோன்றிய தலைவர்களிடமும் சிறிது அறிமுகமுண்டு. காந்திஜீயையும் தெரியும். ஆனால், சம்பாஷணையின் மாண்பிலும் இனிப்பிலும், அரவிந்தருக்கும் பாரதியாருக்கும் இணையாக யாரையுமே சொல்ல முடியாது என்பது என் கருத்து. ஒரு வேளை, காந்திஜியையும், கபர்தேயையும் விலக்காகச் சொல்லலாமோ என்னவோ?
திலகரின் சம்பாஷணையில் பொருளும் சக்தியும் இருக்கும்; ஆனால், வழவழப்பும் இனிப்பும் உறாஸ்யமும் இரா. தோழரான கபர்தேயின் பேச்சில் வியக்கத்தக்க நகைச்சுவையும் சிங்காரமும் செழித்து இருக்கும். சுரேந்திரநாதரின் பேச்சே பிரசங்கம். விபினசந்திரபாலரின் பேச்சில் கசப்பும், சுளிப்பும் கலந்து நிற்கும்; ஆனால், சக்தியும் நவீனமுங்கூட இருக்கும். கோகலேயின் பேச்சு தங்கக் கம்பி இழை சன்னப் பேச்சு. பிரோஸ்தா மேத்தாவின் பேச்சு தடியடி முழக்கம். லஜபதிராய், அமெரிக்கையுடன், முன்னெச்சரிக்கை நிறைந்த பேச்சுப் பேசுவார். சரித்திர மேற்கோள் இல்லாமல் பேசவே மாட்டார்.
பாரதியார் – அரவிந்தர் சம்பாஷணையில் நவரசங்களும் ததும்பும், ஒழுகும். கவிதை, சரித்திரம், தத்துவம், அனுபவம், கற்பனை, ஹாஸ்யம், குறுக்கு வெட்டு, விஸ்தாரம், உண்மையை வெளிப்படுத்தும் ஆவல், அபரிமிதமான இலக்கியச் சுவை, எல்லை இல்லாத உடல் பூரிப்பு எல்லாம் சம்பாஷணையினிடையே இடைவிடாது நர்த்தனம் செய்யும். அந்தக் காலத்திலே குறுக்கெழுத்து நான் பழகிக்கொள்ளவில்லையே என்று வருந்துகிறேன். சம்பாஷணையில் சிற்சிலகட்டங்களும் குறிப்புகளுந்தான் இப்போது என் நினைவில் இருக்கின்றன. தினசரி டயரி எழுதும் பழக்கம் என்னிடம் இல்லை, அளவற்ற நஷ்டம். இப்போது என்ன செய்வது?
புதுச்சேரித் தேசபக்தர்களுள் வ.வே.சு. அய்யரைப்போல நூல் பயிற்சி உள்ளவர்கள் யாருமே இல்லையெனச் சொல்லலாம். அபாரமாகப் படிப்பார். வீரர்களின் சரித்திரம், இலக்கியம், யுத்த சாஸ்திரப் புஸ்தகங்கள், பழைய தமிழ்க்காவியங்கள், பிற நாட்டு நல்லறிஞர்களின் நூல்கள் இவைகளை அய்யர் இடைவிடாது படித்துக்கொண்டிருப்பார். கஸ்ரத் செய்வதில் அய்யருக்குரொம்ப ஆவல். நீந்துவார்; ஓடுவார்; பாரதியாருக்கு இவைகளில் எல்லாம் நிரம்ப ஆசைதான். ஆனால், செய்வதேயில்லை. எல்லாவற்றையும் பக்கத்திலிருந்து கொண்டு, உற்சாகத்துடன் வேடிக்கை பார்ப்பார்.
அய்யர், கஸ்ரத் செய்யும்போது பாரதியார் பார்த்துக் கொண்டிருந்தால், அய்யர் எப்படி உடம்பை வளைக்கிறாரோ, அதைப்போல் பாரதியார் தன்னினைவு இல்லாமல் வளைப்பார். பாரதியாரின் உள்ளம் அவ்வளவு உற்சாகம் நிறைந்த உள்ளம்; மெழுகு உள்ளம்; யோசித்து ஈடுபடுகின்ற உள்ளமல்ல. நல்ல காரியங்களில் யோசனையின்றி அவரது உள்ளம் ஒட்டிக்கொள்ளும். இதற்குத்தான் கவிதை உணர்ச்சி என்று பெயர். இதுவே காதல் உள்ளமாகும்.
அய்யர், பாரதியார், சீனிவாஸாச்சாரியார் முதலியோர் அரவிந்தரின் வீட்டுக்குச் சென்று பேசத்தொடங்கினால், பொழுது போகிறதே தெரியாது, மாலை நான்கு மணிக்கு பேச ஆரம்பித்தால், இரவில் பத்து மணி வரைக்கும் வேறு எந்தச் சிந்தனையுமே இருக்காது. சாப்பாட்டைப்பற்றிக் கவலை எதற்கு?
இந்தச் சம்பாஷணையின் அற்புதம் என்னவென்றால், அவர்கள் சந்நிதானத்தில் இருக்கும் வரையில், சாதாரணமாக முடியாதவை என்று தோன்றும் காரணங்களையெல்லாம் சுளுவாகச்செய்து முடித்துவிடலாம் என்று தோன்றும். காரியசித்திக்கு நடுவே கஷ்டம் இருப்பதாகவே தோன்றாது. மலையை நகரச் செய்யும் தன்னம்பிக்கை இவர்களிடம், இந்தக் கூட்டத்தில் இருந்தது என்று சொல்லலாம்.
லாப நஷ்டக் கணக்குப் பார்க்கும் காரியத் திட்டத்தால், தந்தரமும் சரித்திரமும் பிறப்பதில்லை. ஆழத்திலிருக்கிற பொருளை எடுக்க வேண்டுமானால், தண்ணீரில் தலைகீழாகப் பாயத் தூண்டும் தன்னம்பிக்கைதான் தேவை.
|