LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வேலையைக் காதலி - அத்தியாயம் 13

வேலையைக் காதலி.


முதல் மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் சவாலாகவே கழிந்தது. கடுமையான வேலைப்பளூ என்பதை விட தூக்கம் மறந்து இருபத்தி நான்கு மணி நேரமும் அலுவலகம் மற்றும் தொழிற்சாலையிலே இருக்க வேண்டியதாக இருந்தது.  வீட்டுக்கு வந்தாலும் அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலை குறித்தே நினைப்பில் இருக்க உடம்பு படுத்த ஆரம்பித்தது. ஆனாலும் இந்த வேலையை ரொம்பவும் நேசித்தேன்.


நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும் போது நம் தகுதிகள் புரிபடத் துவங்கும். நேரம் காலம் மறந்து தொடர்ந்து வேலை செய்து கொண்டேயிருந்தாலும் நமக்கு சோர்வு வருவதில்லை. அதுவும் மற்றவர்களால் சாதிக்க முடியாதவற்றை நாம் சாதித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் செயல்படும் போது  நம்முடைய வேகம் அசாத்தியமானதாக இருக்கும். அதுவரையிலும் இனம் கண்டு கொள்ளாமல் நமக்குள் இருக்கும் அத்தனை திறமைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வரும். அப்படித்தான் எனக்கும் இந்த நிறுவனத்தில் நடந்து கொண்டிருந்தது.


வேலை என்பதை சம்பளம் என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சானை தீட்டப்படாத கத்தியை வைத்து நறுக்குவது போலத்தான் இருக்கும். நான் ஏற்றுக் கொண்ட பணியை அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகவே பார்த்து வந்தேன். இதன் மூலம் கிடைக்கக்கூடிய அனுபவம் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்பதை உறுதியாக நம்பினேன். 


மதம் சார்ந்த விருப்பங்கள், கடவுள் மயக்கம், அப்பாற்பட்ட ஏதோவொரு சக்தி போன்றவற்றை கடந்து வந்து விட்ட காரணத்தால் இது விதி சார்ந்தது என்று யோசிக்கவில்லை.


எவரை நோக்கியும் என் ஆள்காட்டி விரல் நீட்டப்படவே வில்லை. "தீதும் நன்றம் பிறர் தர வரா" என்பதைப் போல "எண்ணம் போல வாழ்வு" என்பதையும் கொள்கையாக வைத்திருந்தேன். நிறுவனத்திற்குள் இருந்த ஒவ்வொருவரும் தெரிந்தே செய்த தவறுகளையும், அறியாமல் செய்த பிழைகளையும் மன்னிக்கத் தயாராக இருந்தேன்.  இதனால் ஏற்பட்ட மன உளைச்சலை அமைதியாக உள்வாங்கிக் கொண்டேன். தெளிவாக இனம் பிரித்துக் கொண்டேன். அவரவர் தகுதி குறித்தே எண்ணங்களை பகுதி பகுதியாக பிரித்து வைத்திருந்தேன்.


எவரிடம் உண்மையான உழைப்பு இருக்கின்றது என்பதை விட எவர் உழைப்பது போல நடிக்கின்றார்கள் என்பதையும் கண்டு கொள்ள முடிந்ததால் எவர் மீதும் எரிச்சல்படாமல் தகுதியில்லாதவர்களை ஒதுக்கத் தொடங்கினேன். சிலர் புரிந்து கொண்டு சுதாரித்துக் கொண்டார்கள். பலர் இது தான் வாய்ப்பு என்று மேலும் நடிக்கத் தொடங்கினார்கள்.  இது தான் எனக்கு வாய்ப்பாக இருந்தது.  நடிப்பவர்களை எடுபிடியாக பயன்படுத்தத் தொடங்க தாமதமாக புரிந்து கொண்டு கதறத் தொடங்கினார்கள்.


காலையிலேயே திட்டமிட்டு வந்திருந்தேன். தேவையான ஆட்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினேன். அலுவலகம் என்ற பெயரில் மேஜைகள் நாற்காலிகள் இருந்ததே தவிர அங்கங்கே இருந்து செயல்பட வேண்டிய ஆட்கள் இல்லை. முதலில் அலுவலகம் சார்ந்த நபர்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.

 

Jothi Ganesan Factory 37


விளம்பரத்தின் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது பல பாதக அம்சங்களை தரக்கூடும் என்பதால் என் பழைய தொடர்பில் இருந்த தகுதியான நபர்களை நினைவில் வைத்து பேசினேன். வருகின்றவர்களுக்கு தொழில் அறிவு எந்த அளவுக்குத் தெரிகின்றது என்பதை விட எதைக்கண்டும் பின்வாங்காத குணம் இருக்க வேண்டும் என்பதை வருகின்றவர்களின் அடையாளமாக வைத்திருந்தேன். உழைப்பாளியாக இருந்தால் மட்டும் போதும் என்று கூட நினைத்திருந்தேன்.


உழைக்கும் எண்ணம் கொண்டவனுக்கு அடுத்தவன் குறைகள் குறித்து யோசிக்க நேரம் இருக்காது.  அடுத்தடுத்த வேலைகள் என்னவென்றே மனம் ஓடிக் கொண்டேயிருக்கும். வேலையில்லாதவர்களுக்கும், வேலை செய்ய மனமில்லாதவர்களின் மனமும் தான் பிசாசு போல செயல்படும். பழிவாங்குதல், கடமைகளில் இருந்து தப்பித்தல், காரணம் சொல்லுதல், காரணங்களை தேடிக் கொண்டே இருந்தல் என்று தொடங்கி தான் வாழ எவரை வேண்டுமானாலும் பழிகிடா ஆக்கி விடலாம் என்று எண்ணத்தில் கொண்டு வந்து நிறுத்தும். 


ஒரு நிர்வாகத்தின் வளர்ச்சி வீழ்ச்சியடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமான முதன்மையான காரணமாக இருப்பது மனித மனங்களை கையாளத் தெரியாத பட்சத்தில் வீழ்ச்சி விரைவாகும்.


நாகரிகம் வளராத காலகட்டத்தில் மனிதர்களின் தேவைகள் குறைவாக இருந்தது.  இன்று ஒவ்வொரு மனிதனையும் தேவைகள் தான் இயக்குகின்றது. அவரவர் தேவைக்கேற்றபடி தான் இன்றைய உலகம் இயங்குகின்றது. ஆனால் இங்கே என் தேவை என்பது என்னை நிரூபித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தது. அந்த நோக்கத்திற்காக என்னை நானே வளைத்துக் கொண்டேன். அடுத்தவர் கௌரவம் பார்த்து நுழையத் தயங்கும் ஒவ்வொரு இடத்திலும் புகுந்து வெளியே வந்து கொண்டிருந்தேன்.


என் உழைப்பு மட்டும் இங்கே முக்கியமல்ல. என் சிந்தனையை போன்று ஒத்த நோக்கம் கொண்டவர்களையும் உள்ளே கொண்டு வந்தால் மட்டுமே என் பாரம் குறையும் என்று பாரம் சுமக்கத் தயாராக இருப்பவர்களை தேடத் துவஙகினேன்.


ஒரு ஆயத்த ஆடைத் தொழிற்சாலைக்கு முக்கியமான சில நபர்கள் தேவை.  முதலில் மார்க்கெட்டிங் என்ற துறையில் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகத்திற்கு தேவைப்படுகின்ற ஒப்பந்தங்களை கொண்டு வரக் கூடியவராக இருக்க வேண்டும்.

 

Jothi Ganesan Factory 38


ஏற்றுமதி ஒப்பந்தங்கள் திருப்பூர் சார்ந்த வெளிநாட்டு நிறுவனங்களின் அலுவலகத்தில் இருந்து வரலாம். அல்லது நேரிடையாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரலாம். நம் திறமையைப் பொறுத்து ஒப்பந்தங்களை உள்ளே கொண்டு வர முடியும்.  இதற்கு மார்க்கெட்டிங் மேனேஜர் என்றொரு பதவியை உருவாக்க வேண்டும். இது தவிர உள்ளே வந்த ஒப்பந்தங்களை கொண்டு செலுத்த மெர்சன்டைசர் சிலர் வேண்டும்.  இது தவிர பல வேலைகளுக்காக வெளியே அலைய ஆட்கள் வேண்டும். முக்கியமாக பர்சேஸ் மேனேஜர், பேப்ரிக் மேனேஜர் போன்றவர்கள் வந்தே ஆக வேண்டும். அலுவலகம் சார்ந்த முக்கியப் பதவிகளைப் போல தொழிற்சாலைச் சார்ந்த பல பெரிய, சிறிய பதவிகளுக்கு ஆட்களை உள்ளே கொண்டு வர வேண்டும்.


என் கடந்த கால அனுபவத்தில், தொடர்பில் இருந்த நண்பர்களை உள்ளே கொண்டு வருவது பெரிய வேலையல்ல. ஆனால் இது போன்ற நிறுவனத்தில் உள்ள பாதக அம்சங்களைக் கணக்கில் கொண்டு தயங்கிக் கொண்டே வர மறுப்பது தான் எனக்கு பெரிய சவாலாக இருந்தது. சமாதானப்படுத்த வேண்டியதாக இருந்தது. "என் மீது நம்பிக்கை வைங்க" என்று உறுதியளிக்க வேண்டியதாக இருந்தது. பல சமயங்களில் அளவு கடந்து கீழே இறங்க வேண்டியதாக இருந்தது.


மனித மனம் விசித்திரமானது. எப்போது கீழான எண்ணங்களை நோக்கியே செல்லும் வல்லமை கொண்டது. தவறு என்று தெரிந்தும் அதையே விரும்புவதும், சூழ்நிலைகளைக் காரணம் காட்டுவதும் என அவரவர்க்கென பல கொள்கைகளை வைத்துக் கொண்டு தான் இங்கே ஒவ்வொருவரும் இருக்கின்றனர்.


நாம் ஏன் அளவு கடந்து உழைக்க வேண்டும்? இதனால் நமக்கென்ன லாபம்? என்பதையும் கருத்தில் கொண்டே செயல்படுகின்றர்.


குறுகிய கால அறுவடையைத்தான் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். எனக்கு தனிப்பட்ட முறையில் பல சவால்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருந்தது. அப்பாவும் மகனும் அலுவலகம் வந்தாலும் சுற்றுலா தளத்திற்கு வந்து விட்டு போவதைப் போல வந்து போய்க் கொண்டிருந்தனர். காலையில் பத்து நிமிடம் பேசுவார்கள்.  அப்புறம் சென்று விடுவார்கள்.


அலுவலக வேலைகள் முடிந்து வீட்டுக்கு வந்தாலும் நிறுவனத்திற்கு தேவைப்படும் ஒப்பந்தத்திற்காக என் தொடர்பில் உள்ள பழைய நபர்களை தொடர்பு கொண்ட போது எல்லோரும் ஒரே வார்த்தையில் மறுத்து ஓடினார்கள்.  "அவர் நிறுவனத்திற்கா? வேண்டாம்ப்பா? நாங்க ஏற்கனவே பட்ட அவமானங்களும் அவஸ்த்தைகளும் போதும்" என்றார்கள். 


பேசிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொன்னார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருந்தார்கள்.


ஒவ்வொன்றையும் விமர்சனமாக எடுத்துக் கொண்டேன். மனம் தளராத விக்ரமாதித்தனாய் பூதத்தை சுமந்தபடி அடுத்த பயணத்தைத் தொடங்கினேன்.  ஆனால் பயணம் விடை தெரியாத விடுகதை போலவே இருந்தது.


இங்கே ஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு விலை கொடுத்தே ஆக வேண்டும். எந்தவொரு வெற்றிக்குப் பின்னாலும் ஒரு மிகப்பெரிய தியாகம் இருந்தே ஆக வேண்டும். அது அளவில் சிறியதாக பெரியதாக இருக்கலாம்.


இளமைப் பருவத்தை தியாகம் செய்தவனால், இளமையில் அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்களை தியாகம் செய்து உழைத்தவனுக்கு மட்டுமே வாழ்நாள் முழுக்க நல்ல வாழ்க்கை அமையக்கூடியதாக இருக்கும். மாறுபாடுகள் இருக்கலாம். பல இடங்களில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் தலைவன் முதல் தறுதலைகள் வரைக்கும் அவரவர் அளவில் ஏதோ சில தியாகத்தீயைத் தாண்டித்தான் வெற்றிக் கோட்டை அடைந்திருப்பார்கள்.


எனக்குப் பெரிய லட்சியம் எதுவுமில்லை. ஆனால் சவால்கள் மீது மிகப் பெரிய ஈர்ப்புண்டு.  ஒவ்வொரு சவால்களும் நம்மை இயக்குகின்றது. சவால்கள் நம்மை புதுப்பிக்கின்றது. நமக்குள் இருக்கும் திறமையை அடையாளம் காண உதவுகின்றது.  எதிரிக்கும் நமக்கும் உண்டான பாகுபாட்டை பக்குவமாக எடுத்துரைக்கின்றது. புரிந்தவர்களுக்கு பொக்கிஷம். புரியாதவர்களுக்கோ "ஏன் வம்பை விலை கொடுத்து வாங்குகின்றாய்?" என்ற புலம்பல் தான் அறிவுரையாக கிடைக்கின்றது.

 

எனக்கு இப்படிப்பட்ட அறிவுரைகள் தான் தொடர்ந்து கிடைத்தபடியே இருந்தது.  காரணம் நூலில் சிக்கல் இருந்தால் எளிதில் பிரித்து விடலாம். ஆனால் சிக்கல் என்பது மலையாக இருந்தால் என்ன செய்ய முடியும். அப்படித்தான் ஒவ்வொன்றும் இங்கே இருந்தது.


இந்த நிறுவனத்தின் மற்றொரு கொடுமையுண்டு. அலுவகத்திலிருந்து தொழிற்சாலை திருப்பூரின் மற்றொரு பகுதியில் இருந்தது. ஒரு முறை சென்று வந்தாலே பாதிப் பொழுது அதிலேயே போய் விடும்.


ஒரு ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிற்சாலை இயங்க தேவைப்படும் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு இடத்தில் இருக்கும் பட்சத்தில் பல பாதகங்களை அந்த நிறுவனம் சந்தித்தே ஆக வேண்டும்.  நிர்வாக செலவு கட்டுக்கடங்காமல் போகும். கட்டுப்பாடு என்பது கட்டவிழ்ந்த காளை போல துள்ளிக் குதிக்கும். அடக்குவது சிரமமாக இருக்கும். முதன்மைப் பதவியில் இருப்பவர்களுக்கு மேய்க்கும் வேலைக்கே நேரம் சரியாக இருக்கும். எவர் என்ன தவறுகள் செய்கின்றார்கள்? என்பதை கவனிப்பதில் பாதிப் பொழுது போய்விடும். செய்ய வேண்டிய வேலைக்குத்தான் வெளியே செல்கின்றார்களா? இல்லை அவரவர் சொந்த வேலைக்காக சுற்றுகின்றார்களா? என்பதை கவனிக்கும் போது உருவாகும் மன உளைச்சலுக்கு அளவே இருக்காது. 

 

Jothi Ganesan Factory 39

 

மனம் சோர்ந்து விடும். கவனிக்க வேண்டிய முக்கிய வேலைகளை தவிர்த்து உளவுத்துறை வேலை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். என் ஒவ்வொரு நாளின் பொழுதும் இப்படித்தான் அவஸ்த்தைகளுடன் கழிந்தது.


நான் இந்த நிறுவனத்தின் உள்ளே நுழைந்த மூன்றாவது நாள் அலுவலகத்தில் இருந்த நிர்வாக அதிகாரி பதறியடித்துக் கொண்டு நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு மூச்சு வாங்க நின்றார்.  இரண்டு நாட்களாக அவரை கவனித்துக் கொண்டிருந்தேன். மனதிற்குள் "நீ உலக மகா நடிகனடா?" என்று இனம் பிரித்து வைத்திருந்தேன்.  என்ன? என்று எதுவும் பேசாமல் கண்களால் அவரைப் பார்த்து என்ன? என்பது போல பார்த்தேன்.


"சார் நீங்க காலையிலேயே இங்கே நுழையும் போது சொல்ல நினைத்து மறந்து விட்டேன்.  இப்பொழுதான்  எம்.டி கூப்பிட்டு இருந்தார். உங்களை பேக்ட்ரிக்கு வரச் சொல்லியிருந்தார்" என்றார்.  


நான் ஒன்றும் பேசவில்லை.  செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே எடுத்து வைத்து விட்டு எழுந்து அவருடன் கீழே இறங்கி வந்த போது வெளியே எனக்கான வாகனம்  நின்று கொண்டிருந்தது.


எனக்காக வரவழைக்கப்பட்ட வாகனத்துக்கு பின்புறம் மற்றொரு வெளிநாட்டுக் கார்  நின்று கொண்டிருந்தது. நான் குழப்பத்துடன் நிர்வாக அதிகாரியைப் பார்த்த போது "எம்.டி யே வந்து விட்டார். என்னை மாட்டிக் கொடுத்து விடாதீர்கள். பின்னால் நிற்கும் வண்டியில் இருவரும் இருக்கின்றார்கள். அதில் போய் ஏறிக் கொள்ளுங்க" என்றார். இருவர் என்றால் அப்பாவுடன் மகனும் இருக்கின்றார் என்று அர்த்தம். இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஜால்ராக்கள் "சின்னவர்"  "பெரியவர்" என்று அழைத்தனர்.  நானோ "சின்னப்புத்தி", "பெரிய புத்தி" என்று மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன்.


நிர்வாக அதிகாரி சொன்னதை புரிந்து கொண்டு பின் பக்கமாக நின்று கொண்டிருந்த வாகனத்தை நோக்கிச் சென்றேன்.


ஒட்டுநர் இருக்கையில் மகன் அமர்ந்திருந்தார். பின்பக்க இருக்கையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு எம்.டி இருந்தார். வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்று "உள்ளே வந்து உட்காருங்க" என்றார்.


மரியாதைக்காக சற்று தள்ளியே அமர்ந்து கொண்டேன். வண்டி சென்று கொண்டிருந்த போது தனது சுயபுராணத்தை அளந்து விட்டுக் கொண்டே வந்தார். அமைதியாக கேட்டுக் கொண்டே அவர் கண்களையே கவனித்துக் கொண்டு வந்தேன்.


உலகத்திலேயே மிகவும் ஆபத்தான மனிதர்கள் பல வகையினராக இருக்கின்றார்கள். அதிலும் மிக ஆபத்தானவர்கள் சுயமோகி.


தன்னைத் தானே பெருமையாக நினைத்துக் கொள்ளுதல். தன்னைப் பற்றியே மற்றவர்களிடம் பெருமையடித்தல். தன் எதிரே நிற்கும் நபர் தன்னைப் பற்றி புகழ்வதை ரசித்துக் கேட்டுக் கொள்ளுதல். எதிரே இருப்பவன் தரம் என்ன? தராதரம் என்ன? என்பதைப் பற்றியே யோசிக்காமல் தன்னை மன்னன் போல கற்பனை செய்து கொண்டு தான் சொல்வதையெல்லாம் எதிரே இருப்பவர்கள் நம்ப வேண்டும் என்ற கட்டாயப்படுத்துதல். 


குடும்ப வாழ்க்கையில் இந்தப் பழக்கம் இருந்தாலே நம் மரியாதைக்கு உத்திரவாதம் இருக்காது.  தொழில் வாழ்க்கையில் இருந்தால் என்னவாகும்?  பெரும்பாலும் தன் திறமையைப் பற்றி தாழ்வான எண்ணம் கொண்டவர்களிடத்திலும், தன் திறமையை வளர்த்துக் கொள்ள முடியாதவர்களிடத்திலும், போட்டி போட முடியாதவர்களிடத்தில் மட்டுமே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பழக்கம் இருக்கும்.


"மற்றவர்கள் நம்மை விரும்புவதை விட நம்மை நாமே விரும்ப வேண்டும்" என்பது தான் நம் தனிப்பட்ட வளர்ச்சியின் பாலபாடம்.  ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவுண்டு என்பதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும்.


"பேச்சைக் குறை. செயலில் காட்டு" என்பதற்கான அர்த்தமே நாம் செய்யும் செயலே நம்மைப் பற்றி மற்றவர்கள் பேசுவதாக இருக்க வேண்டும். அது நல்லதாக இருக்கலாம். இல்லை விமர்சனமாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் நாம் அதை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும்.  நான் இப்படித்தான் என்னை மாற்றிக் கொண்டிருந்தேன்.

 

Jothi Ganesan Factory 40


ஆனால் பேசிக் கொண்டிருந்தவரோ என்னைத் தவிர உலகத்தில் உள்ள அத்தனை பேர்களும் முட்டாள்.  நான் தான் வில்லாதி வில்லன். சூரப்புலி என்று கதையளந்து கொண்டிருந்தார்.


நாங்கள் தொழிற்சாலை இருந்த இடத்திற்கு சென்று சேர்வதற்கு தேவைப்பட்ட அரை மணி நேரத்திற்குள் என்னால் தாங்க முடியாத அளவிற்கு பொளந்து கட்டிக் கொண்டிருந்தார். தொழிற்சாலையின் உள்ளே வண்டி நுழைந்தது.  நுழைவாயிலில் செக்யூரிட்டி என்ற பெயரில் ஒரு வயதான பெரியவர் நின்று கொண்டிருந்தார். நிச்சயம் அவர் உள்ளே தோட்டத்தில் பணிபுரிபவராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.


தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதியையும் அப்பாவும், மகனும் எனக்கு காட்டிக் கொண்டே வந்தார்கள்.  படிப்படியாக விளக்கிக் கொண்டே இடையிடையே இருபது வருடத்திற்கு முன் அவர் செய்த சாதனைகள் இந்த தொழிற்சாலை இயங்கிய விதத்தை விவரித்துக் கொண்டே வந்தார். மகன் ஒத்து ஊதிக் கொண்டிருந்தார்.


தொழிற்சாலை என்ற பெயரில் இருந்ததே ஒழிய எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. கடந்த நாலைந்து வருடங்களாக செயல்படாமல் முடங்கிப் போய் கிடந்தது.


அதுவொரு மிகப் பெரிய தோட்டம். தோட்டத்தின் உள்ளே ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக பிரிந்து ஒரு ஆய்த்த ஆடை உருவாக்கத்திற்கு தேவைப்படும் ஒவ்வொரு வசதியையும் உருவாக்கியிருந்தார்கள். உள்ளே நுழைந்தவுடன் உற்பத்தி சார்ந்த கட்டிடங்கள் இருந்தன. அடுத்த பகுதியில் பிரிண்டிங் இருந்தது. தோட்டத்தின் மற்றொரு பகுதியில் சாயப்பட்டறை சார்ந்த அத்தனை வசதிகளும் இருந்தது. தோட்டத்தின் இறுதியில் பலதரப்பட்ட அறவு எந்திரங்கள் பொருத்தப்பட்ட நிட்டிங் பகுதி இருந்தது. 


ஒவ்வொரு பகுதிக்கும் இடையே வயல்வெளி இருந்தது. உள்ளே இருந்த வயல் பகுதியில் சோளத்தட்டையும், தென்னை மரங்களும் இருந்தது. கிராமத்திற்கு நுழைந்தது போல இருந்தது. சுத்தமான காற்று உடம்பைத் தழுவியது.


ஆனால் எந்த இடத்திலும் பொறுப்பான ஆட்கள் இல்லை. எல்லா இடங்களிலும் நாமே நுழைந்து இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டியதாக இருக்கும் என்பதை யூகித்துக் கொண்டேன். 


தொழிற்சாலையில் தைக்க வேண்டிய 300க்கும் மேற்பட்ட எந்திரங்கள் கேட்பாரற்று தூசியடைந்து போய்க் கிடந்தது. உள்ளே ஒவ்வொரு இடத்திலும் மலை போல குப்பைகள் குவிந்து கிடந்தது.  சாயப்பட்டறை இவர்கள் செய்த தவற்றின் காரணமாக மூடப்பட்டு அனுமதிக்காக காத்திருந்தது. நிட்டிங் பகுதி காயலான் கடைக்கு எடுத்துச் செல்லும் அளவிற்கு இருந்தது.  ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்து கடைசியாக பிரிண்டிங் இருந்த பகுதிக்குள்  நுழைந்தோம்.


ஓடுகள் வேயப்பட்ட நீண்ட தாழ்வாரம் பகுதி போன்ற இடத்திற்குள் சென்ற போது அந்தப்பகுதி முழுக்க இருட்டாக இருந்தது.  மின்சார வசதிகளை துண்டித்து வைத்திருந்தார்கள்.  காரணம் கேட்ட போது மின்சார வாரியத்திற்கு பணம் கட்டாத காரணம் என்று சொன்னார்.  அதுவும் நிர்வாக அதிகாரி மேல் பழியைப் போட்டார். 


அப்பாவும், மகனும் நுழைவாயிலில் இடத்தில் நின்று கொண்டார்கள். நான் கும்மிருட்டில் தடவித் தடவி உத்தேசமாக நகர்ந்து மேலோட்டமாக பார்த்து விட்டு வாசல்படியை நோக்கி நகர்ந்து வந்த போது புஸ் புஸ் என்ற சப்தம் கேட்க நடப்பதை நிறுத்தி விட்டு இருட்டுக்குள் என் கண்களை செலுத்தினேன். சில நொடிகளுக்குப் பிறகு அந்த சிறிய வெளிச்சம் தென்பட்டது.  மேலும் உற்று நோக்க அது பாம்பின் கண்கள் என்று தெரிந்து. ஒன்றல்ல? நாலைந்து பாம்புகள் படம் எடுத்துக் கொண்டு என் முன்னால் நின்று கொண்டிருந்தது.  என் ராஜ்ஜியத்திற்குள் ஏன் வந்தாய்? என்று கேட்பது போல வழியில் வரிசையாக நின்றது.


சூரப்புலியோ வெளியே நின்று கொண்டு தன் சுயபுராணத்தை விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.


என் உடம்பின் உள்ளே வியர்வை ஆறாக ஓடிக் கொண்டிருந்தது.

 

குறிப்புகள் தொடரும்....

 

by Swathi   on 24 Oct 2014  4 Comments
Tags: திருப்பூர் பின்னலாடை தொழில்   திருப்பூர் ஜோதிஜி   Tiruppur Textile Industry   Tiruppur Jothiji   Velai   Kadhali   வேலை  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! இந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-27-11-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-27-11-2015
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-13-11-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-13-11-2015
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-23-10-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-23-10-2015
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18
கருத்துகள்
25-Oct-2014 05:13:02 ப.வீஜயகுமார் said : Report Abuse
சார், நிங்கள் எழுதிய 13 பகங்களையும் படித்து உள்ளேன் அனைத்து பகங்களும் நன்றகா உள்ளது. உங்களுது எழுதது பயணம் தொடர வேண்டும். வழ்ததுகளுடன் உங்கள் வாசகன். ப.வீ ஜயகுமார். திருப்பூர்
 
25-Oct-2014 04:08:54 M.Thevesh said : Report Abuse
Your critical and analytical thinking skill put you on mile ahead of others. The way you present your article give clear understanding of the problem you face in your chosen profession.I am waiting for your next article. Best of luck in your endeavor.
 
24-Oct-2014 19:13:40 டி.என்.முரளிதரன் said : Report Abuse
தொழிற்சாலைத் தொடராக மட்டும் இல்லை மனித மனங்களை அலசும் தொடராகவும் இருக்கிறது. உண்மைகள் கற்பனைகளை விட வியப்பானவை என்பதை உணர்த்துகிறது தங்கள் அனுபவங்கள்
 
24-Oct-2014 05:37:42 கிருஷ்ணமூர்த்தி said : Report Abuse
ஒருமுறை நண்பரின் அண்ணாவை சந்திக்க நேர்ந்தது அவர் தொல்பொருள் துறையிலிருந்தார் .எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம் ஏதாவது துறத்திகொண்டு இருப்பேன் அப்போது யார் கிடைத்தாலும் அதை பற்றியே பேசுவேன் .அவர் கிடைத்த போது தியானம் பற்றி அதிகம் சிலாகித்தேன் அவரையும் அழைத்தேன்.அவர் மெல்ல சொன்னார் எனக்கு என் வேலையே தியானம் என்று முகத்தில் அறைந்தது போல இருந்தது .அவரை போலவே நீங்களும் மொத்த வாழ்க்கையுமே உங்கள் தொழிலுக்கு உள்ளேயே தேடிப்பெறுவது அதிசயமாக இருக்கிறது அதிலும் மனித மனம் பற்றி நீங்கள் பேசுவது இன்னும் எழுத வேண்டும் என்பதாய் ஆவலாக இருக்கிறது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.