LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19

பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான்.


"சார் உங்க மாதிரி ஆட்களிடம் எங்கள மாதிரி ஆட்கள் வேலை செய்வதே பாவம் சார். இதற்கு மேலே நான் ஏதாவது பேசினால் ரொம்பச் சங்கடமாகப் போயிடும். எனக்குக் கணக்கு முடிச்சு குடுங்க. நான் போயிடுறேன்"


ராஜாவுக்கும் எனக்கும் ஒரு வெள்ளிக்கிழமை மதிய நேர உரையாடல் இப்படித்தான் முடிவுக்கு வந்தது. ராஜா என்பவன் பல விதங்களில் ராஜா தான். அகத்தியர் உயரத்தில் தான் இருப்பான். ஆனால் செயலாக்கத்தில் கம்பீரமானவன். மற்றவர்களை விட எதையும் தனித்தன்மையுடன் செய்யக் கூடியவன். அவனின் வயது இருபத்தி மூன்றே தவிர அகாயச் சூரன். காசு விசயத்தில் கெட்டி. அதே சமயத்தில் உழைப்பில் வீரன். தனக்குச் சேர வேண்டிய ஒரு ரூபாயைக்கூட அடுத்தவன் எடுக்க அனுமதிக்க மாட்டான். அதே சமயத்தில் அடுத்தவரின் ஒரு பைசாவை அபகரிக்க வேண்டும் என்று எண்ணத்தில் கூட நினைக்க மாட்டான்.


அவனிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்து விட்டு நாம் நிம்மதியாகத் தூங்கப் போய்விடலாம். ஆனால் அவன் எதிர்பார்த்த பணம் சரியான நேரத்தில் வரவில்லை என்றால் பெரிய பதவியில் இருந்தாலும் நேருக்கு நேராக நின்று கிழித்துத் தோரணம் கட்டி விட்டு தான் நகர்வான். நான் இருந்த நிறுவனத்தில் FINISHING DEPARTMENTல் ஒப்பந்தக்காரராக இருந்தான். இந்தத் துறையில் வந்த பிறகு தான் தைத்த ஆடைகள் தரம் வாரியக பிரிக்கப்பட்டு முழு வடிவம் பெறுகின்றது. வெளிநாட்டுக்காரர்கள் எதிர்பார்க்கும் ஆயத்த ஆடைகள் அழகு வடிவம் பெறுகின்றது. ராஜாவுக்குக் கீழே ஒரு படை பட்டாளம் உண்டு. இவனுக்குக் கீழே பணிபுரிபவர்கள் அதனைத் தேய்த்து, பாலிபேக்கிங் செய்து ஒரு வடிவத்திற்குக் கொண்டு வருகின்றார்கள்.

 

Attai Petti


கடைசியாகப் பெட்டியில் ஒட்ட வேண்டிய ஸ்டிக்கர் சமாச்சாரங்களை ஒட்டி லாரியில் ஏற்றி விடுவார்கள். இந்தத் துறையில் ஒவ்வொரு இடத்திலும் பல பிரச்சனைகள் உருவாகும். மிகக் கவனமாகச் செயல்பட வேண்டியவர்களாக இருப்பார்கள்.


வேடிக்கை பார்த்துக் கொண்டு செயல்பட்டால் ஒரு ஆடைக்குப் பின்னால் உழைத்த அத்தனை பேர்களின் உழைப்பும் வீணாகப் போய் விடும் வாய்ப்புள்ளது.


அயரன் செய்ய, பேக்கிங் செய்ய, பெட்டியில் போட்டு மூடி முடிக்க என்று மொத்தமாக இந்த விலை என்று பேசி விட்டு வேலையைத் தொடங்குவான். அவனுக்குக் கீழே இருபது பேர்கள் பணியில் இருந்தனர். நான், தொடக்கத்திலேயே "இது தான் உனக்கான விலை" என்று சொல்லி விடுவேன். பல சமயம் வேலை முடித்ததும் விலை நிர்ணயிக்கப்படும். இது போன்ற இடங்களில் அவனுக்கும் எனக்கும் தள்ளு முள்ளு நடக்கும். நான் உறுதி செய்யும் விலையை வைத்து அதிலும் தனது திறமையால் நல்ல லாபம் ஈட்டிவிடுவான்.


ஆட்களை வேலை வாங்குவதில் கில்லாடி. இவனிடம் பணிபுரிபவர்களில் ஒருவர் கூட வேலை நேரத்தில் வெறுமனே நிற்க முடியாது. அவன் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் பெண்களால் கேட்க முடியாததாக இருக்கும். தொடர்ந்து இருபத்தி நான்கு மணி நேரம் வேலை என்றாலும் கண் அசராமல் தான் எடுத்த வேலையை முடித்து விட்டுக் கடைசியாக நமக்குக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தூங்கச் சென்று விடுவான். இப்போது அவனுக்கும் எனக்கும் தான் பிரச்சனை. வாக்குவாதமாக மாறி விட்டது.

 

dress packing


ஒரு ஆடையின் அவனுக்குண்டான கூலியை நிர்ணயிப்பதில் பிரச்சனை உருவாகி அது முற்றிப் போய் அவனைக் கோபப்படுத்தி மேலே சொன்ன வார்த்தையைச் சொல்லும் அளவிற்குக் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.


நான் கோபப்படவில்லை. ஒரு ஆடை உருவாக்கத்தில் ஒவ்வொரு இடத்திலும் எந்த அளவுக்குச் செலவு செய்யப்பட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து வைத்து விட்ட பிறகு அதனை மீறி பத்துப் பைசா கூடக் கூடுதலாகச் செலவளித்து விட முடியாது. அதற்குத் தனியாக அனுமதி பெற வேண்டும். தீர்மானிக்கப்பட்ட விலையை விட ஒருவருக்கு நாம் கூடுதலாகச் சேர்த்து கொடுக்கும் பட்சத்தில் நிர்வாகத்திற்குத் தேவையற்ற சந்தேகங்கள் நம் மீது உருவாகும் வாய்ப்புள்ளதால் இந்தச் சமயத்தில் கவனமாகச் செயல்பட வேண்டும். இதன் காரணமாக இவனைப் போன்ற ஆட்களைச் சமாளித்தே ஆக வேண்டும்.


இங்கு ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு விலை உண்டு. அதனை விலை என்றும் சொல்லாம் அல்லது மனித பலகீனம் என்றும் அழைக்கலாம். இவனின் பலகீனம் இவனது குடும்பம். இவன் குடும்பத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினால் சுற்றிலும் உள்ள உலகத்தை மறந்து விடுவான்.


"உன்னைப் போல வேறொரு நபரை, துடிப்பான இளைஞனை பார்த்தது இல்லை. உங்கம்மா கொடுத்து வைத்தவர் என்று சொல்லி விட்டு ஒரு முறை உங்கள் அம்மாவை இங்கே அழைத்து வா? நான் அவர்களைப் பார்க்க வேண்டும்" என்று இவனிடம் சொல்லிவிட்டால் போதும். நெகிழ்ந்து விடுவான்.

 

எல்லாச் சமயத்திலும் இது போன்ற வார்த்தைகள் எடுபடாது. ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொருவிதமான பூஜைகள் உண்டு தானே? நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் இவனை ஒவ்வொரு முறையும் நான் கையாள்வதுண்டு.


இவனைப் பற்றிப் பேசுவதற்கு முன் இவர்களின் உலகத்தைப் பற்றி நாம் கொஞ்சம் பேச வேண்டும்.


திருப்பூரில் உள்ள என்பது சதவிகித ஏற்றுமதி நிறுவனத்தில் இன்று வரையிலும் வாரச் சம்பளம் தான் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. பெரிய நிறுவன செயல்பாடுகள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். மாதச்சம்பளமாகத் தொழிலாளர்களுக்கு வழங்குகின்றார்கள். மற்றபடி அலுவலகம் சார்ந்த பணியாளர்களுக்கு மாதச்சம்பளம் தான். ஒவ்வொரு நிறுவனத்திலும் வெள்ளிக்கிழமை என்பது வாரக் கணக்கு முடிக்கப்படும் நாளாகும். அந்த வாரத்தில் மொத்தமாக எத்தனை லட்சம் தேவைப்படுகின்றது என்பதைக் கணக்கில் வைத்து வங்கியில் சென்று பணம் எடுத்து வைத்து விடுவார்கள். சனிக்கிழமை தோறும் இரவு பணி முடியும் நேரத்தில் வழங்கப்படுகின்றது.

 

Ironing section


ஒரு தொழிலாளர் 'பீஸ் ரேட்' கணக்கில் வேலை செய்வார். மற்றொருவர் 'ஷிப்ட் கணக்கில்' வேலை செய்வார். இரண்டுக்கும் வெவ்வேறு விதமாகக் கணக்கு உருவாக்கப்பட்டு மேலே உள்ளவர்களின் பார்வைக்குச் செல்லும். சிறிய நிறுவனங்களில் மொத்தமாக ஐம்பது பேர்கள் பணிபுரிவார்கள். நடுத்தரவர்க்க நிறுவனத்தில் முன்னூறு முதல் ஐநூறு பேர்கள் வரைக்கும் பணிபுரிவார்கள். பெரிய மற்றும் மிகப் பெரிய நிறுவனங்களில் ஆயிரம் பேர்களுக்குக் குறையாமல் இருப்பார்கள். இங்கு ஆயிரம் பேர்களைத் தாண்டி பணிபுரியும் நிறுவனங்களும் உண்டு.


சம்பளக்கணக்கு என்பது வெறுமனே சம்பளத்தோடு நின்று விடுவதில்லை. அவர்களுக்குச் சேர வேண்டிய ESI, PF, LEAVE SALARY போன்றவற்றைப் பட்டியலில் கொண்டு வர வேண்டும். ஒருவரின் சம்பளக்கணக்கு இறுதி செய்யப்படும் போது இவைகள் அனைத்தையும் கணக்கில் எடுத்து ஒவ்வொரு வாரம் மற்றும் மாதத்திலும் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படாத போது அவர்கள் பணியில் இருந்து விலகும் போது வழங்கப்பட வேண்டும்.


ஒருவர் தொடர்ந்து வேலை செய்யும்பட்சத்தில் வருடத்திற்கு ஒரு முறை கணக்கு முடித்துக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் தீபாவளி அன்று வழங்கப்படும் போனஸ் உடன் கணக்கு முடித்துக் கொடுக்கின்றார்கள். வருடம் முழுக்கப் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு இந்தத் தொகை பெரிய தொகையாகக் கிடைக்கும். பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தக் கணக்கில் பல கோல்மால்கள் செய்து பட்டை நாமத்தை பூசி விடுவார்கள். சிலர் அப்புறம் கொடுக்கின்றேன் என்று நழுவுவார்கள். சிலர் கட்டைப்பஞ்சாயத்து அளவுக்குச் சென்ற பிறகு கொடுப்பார்கள்.


மாத சம்பளம் என்றால் ஒருவர் பணி செய்த அந்த மாதத்தின் மொத்த நாட்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வாரச்சம்பளம் என்றால் வியாழக் கிழமை வரைக்கும் கணக்குக்கு எடுத்துக் கொள்வார்கள். அடுத்த இரண்டு நாளான வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை பணிபுரிந்த பணம் அடுத்த வாரத்தில் சேர்க்கப்படும்.


வாரம் முழுக்கப் பணிபுரிந்தவர் அடுத்த வாரத்தில் பணிக்கு வரவில்லை என்றால் அவர் சென்ற வாரத்தில் பணிபுரிந்த இரண்டு நாள் சம்பளம் என்பது அடுத்த வாரத்தில் வருகின்ற சனிக்கிழமை அன்று வழங்கப்படும். ஒரு தொழிலாளர் 90 நாட்கள் தொடர்ந்து பணியில் இருந்தால் அவர் அனைத்து விதமான உரிமைகளையும் பெறக் கூடியவராக மாறி விடுகின்றார். இது போன்ற ஏகப்பட்ட விசயங்களை நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.


ஒவ்வொரு நிறுவனத்திலும் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் பணியாளர்களைக் கீழ்மட்ட நிலை மற்றும் மேல் மட்ட நிலை என்று இரண்டு வகையினராகப் பிரிக்க முடியும்.


கீழ்மட்ட நிலையில் உள்ள பணியாளர்களுக்குத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் மரியாதை கூடக் கிடைக்காது. 'கசக்கி பிழிதல்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் காண வேண்டுமென்றால் இவர்களின் உழைப்பைத்தான் உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்களின் உரிமையைப் பற்றிக் கேட்க பேச ஆட்கள் இருக்காது. "தப்பித்துக் கொள்வதே வாழ்க்கை" என்கிற ரீதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும்.


உற்பத்திப் பிரிவில் பணியாற்றுகின்ற பெரிய பதவிகளில் உள்ளவர்களின் தலைக்கு மேலே எப்போதும் கத்தி தொங்கிக் கொண்டே இருக்கும். எப்போது எந்தப் பிரச்சனை உருவாகும்? எப்போது தலை வெட்டப்படும் என்கிற ரீதியில் தான் வாழ்ந்தாக வேண்டும். ஒரு பக்கம் நிர்வாகம் எதிர்பார்க்கும் லாபத்தைக் கொடுத்தாக வேண்டும். அந்த அளவுக்கு உற்பத்தித்திறனை அதிகப்படுத்த வேண்டும். மறுபக்கம் தொழிலாளர்களை மனம் கோணாமல் நடத்தியாக வேண்டும்.


பேக்டரி மானேஜர் பொறுப்பில் உள்ளவர்கள் ஒவ்வொரு வாரத்தின் வியாழன் முதல் சனிக்கிழமை வரைக்கும் இரட்டைத் தலைவலியில் தடுமாறுவார்கள். ஒரு நிறுவனத்தில் மனிதவளத்துறை  தனியாக இருந்தால் தொழிலாளர்களின் சம்பளக் கணக்கை அவர்கள் கையாள்வார்கள். பல நிறுவனங்களில் பெயருக்கென்று மனிதவளத்துறை இருக்கும்.

 

tirupur jothiji office


முதலாளிகளின் அல்லக்கை போலச் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். இது போன்ற சமயத்தில் பேக்டரி மானேஜர் தலையில் கணக்குச் சமாச்சாரங்கள் வந்து விழும். நான் இருந்த நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவின் சம்பளக் கணக்கும் அந்தந்த துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களால் இறுதி செய்யப்பட்டு  மனித வளத்துறை பார்வைக்குச் சென்று விடும். கடைசியாக என் பார்வைக்கு வந்து விடும். நான் தான் உறுதி செய்யப்பட வேண்டும்.


பீஸ் ரேட்டில் தைப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் நேரிடையாக என் பார்வைக்கு வரும். அவர்களுக்கு உண்டான பணம் சார்ந்த விசயங்களை நான் தான் முடிவு செய்ய வேண்டும். காரணம் பீஸ் ரேட்டில் தைப்பவர்களின் விசயத்தில் மிக மிகக் கவனமாகக் கையாளத் தெரிந்துருக்க வேண்டும். ஆயிரம் ஆடைகள் தைத்து விட்டு ஐயாயிரம் ஆடைகள் என்று கணக்கு காட்டக்கூடிய ஆபத்து உண்டு. எவர் தவறு செய்தாலும் கடைசியில் அதற்கான முழுப் பொறுப்பும் நாம்தானே ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கும்?


இப்போது நாம் மேலே பார்த்த ராஜாவின் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.


அவனின் சொந்த ஊர் அறந்தாங்கிக்கு அருகே உள்ள நாட்டுமங்கலம் என்ற சிறிய கிராமம். எட்டாவது வரைக்கும் படித்தவன். இவன் தான் வீட்டில் தலைமகன். குடும்பச் சூழல் காரணமாக ஒன்பதாம் வகுப்புச் செல்லாமல் அறந்தாங்கியில் உள்ள சிறிய உணவகத்தில் பறிமாறுபவராக வேலைக்குச் சேர்ந்துள்ளான். பத்தாண்டுகளுக்கு முன் அவன் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் மாதம் முன்னூறு ரூபாய்.


இவனிடம் ஆச்சரியமான குணங்கள் பல உண்டு. படிப்பறிவு இல்லையே தவிரப் பட்டறிவு அதிகம். எந்த இடத்தில் எப்படிப் பேசி காரியம் சாதிக்க வேண்டும் என்பதை அறிந்தவன். அதேசமயத்தில் முன் கோபத்தின் மொத்த உருவமும் இவனே. தன்னை எவரும் எந்தக் குறையும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இரண்டு மடங்கு உழைப்பை கொட்டக்கூடியவன். எவருக்கும் இவனை எளிதாகப் பிடித்து விடும். உழைக்கத் தயாராக இருப்பவனைச் சூழ்நிலை வெறுமனே வாழ அனுமதிக்குமா? அவன் பணியாற்றிய உணவகத்தில் பறிமாறும் போது உருவான பிரச்சனையில் முதலாளி இவனின் குடும்பத்தைப் பற்றித் தவறுதலான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டி விட இவனோ பக்கத்தில் கிடந்த காய்கறிகள் வெட்டப் பயன்படுத்தும் கத்தியை எடுத்து அவரைக் குத்த பாய்ந்து விட்டான்.


முதலாளி எழுப்பிய குரலில் கூட்டம் சேர்ந்து விட்டது. கிராமத்து பஞ்சாயத்து கூட்டப்பட வெறுத்துப் போய்ப் அறந்தாங்கி பேரூந்து நிலையத்திற்கு வந்தவனுக்கு என்ன தோன்றியதோ திருப்பூர் பேரூந்தைப் பார்த்து ஏறி அமர்ந்து விட்டான். திருப்பூர் வந்த முதல் மாதத்தில் தங்க இடமில்லை. கையில் காசில்லை. உணவுக்கு வழியில்லை. வழிகாட்ட ஆளில்லை. இங்குள்ள வேலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை.


சிலர் சூழ்நிலையைக் காரணம் காட்டுகின்றனர். சிலரோ சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவனோ சூழ்நிலையைத் தனக்கு உரியதாக மாற்றிக் கொண்டான். தட்டுத்தடுமாறி எவரவர் பின்னாலோ அலைந்து கடைசியில் ஒரு ஒப்பந்தக்காரர் பின்னால் சென்று பேக்கிங் வேலை செய்யப் போன போது தான் இவனின் கிரகங்கள் வேலை செய்யத் தொடங்கியுள்ளது.


ஒருவர் வாழ்வில் தென்படும் சிறிய வெளிச்சம் தான் மிகப் பெரிய பாதையைக் காட்டுகின்றது. தன்னம்பிக்கையோடு உழைக்கத் தயாராக இருப்பவனுக்கு இங்கு ஏதோவொரு சமயத்தில் வழி கிடைக்கத்தான் செய்கின்றது. இவன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் இவன் உழைப்பில் கிடைத்த விசயங்களே.


மூன்று மாதங்கள். குடும்பத்துடன் கூடத் தொடர்பு கொள்ளவில்லை. ஒரு சிறிய நிறுவனத்தில் பேக்கிங் பகுதியில் வேலைக்குச் சேர்ந்தவன் படிப்படியாக அயரன் மாஸ்டர் என்கிற ரீதியில் அடுத்த மூன்று மாதத்திற்குள் தன்னை வளர்த்துக் கொண்டு விட்டான். அயரன் மாஸ்டர் ஆகி விட்டான் என்பதை நாம் திரைப்படங்களில் பார்ப்பதைப் போல ஒரு வரியில் வாசித்து விட்டு நகர்ந்து விட முடியும். ஆனால் இதற்குப் பின்னால் அடைந்த வேதனைகளும் வலிகளைப் பற்றியும் பத்து அத்தியாயங்கள் எழுதினாலும் தீராத சமாச்சாரங்கள்.


காரணம் இங்கே ஒருவர் வளர்வதை எவரும் விரும்புவதில்லை. காரணம் இல்லாமல் ஒருவர் மற்றொருவரை வெறுக்கத் தான் கற்றுள்ளனர். இவன் ஏன் வளர வேண்டும்? என்ற எண்ணம் தான் ஒவ்வொருவர் மனதிலும் மேலோங்குகின்றது. திருப்பூர் போன்ற போட்டி நிறைந்த ஊரில் முடிந்தவரைக்கும் ஒருவரை கீழே வைத்திருப்பதைத் தான் ஒவ்வொரு துறையிலும் உள்ளவர் விரும்புவர்.


இது போன்ற சமயங்களில் ஒருவரின் சமயோஜித புத்தி வேலை செய்ய வேண்டும். இவன் தான் இயல்பிலேயே கெட்டிக்காரன் ஆச்சே? ஒவ்வொரு நாளிலும் விடுமுறை எடுக்கும் அயரன் மாஸ்டர் டேபிள் அருகே தான் செய்ய வேண்டிய பேக்கிங் சமாச்சாரங்களை எடுத்து வைத்துக் கொண்டு அந்தத் துறையின் சூப்ரவைசர் பார்க்காத சமயத்தில் தேய்த்த ஆடைகளை மீண்டும் அளவு மாறாமல் தேய்த்துப் பயிற்சி எடுத்து விடுவான். இரவு வேலை என்றால் முதல் ஆளாகப் போய் நின்று விடுவான். பாதி அயரன் மாஸ்டர்கள் குடிவெறியில் மட்டையாகி அங்கே படுத்துக்கிடக்க அவர்கள் செய்ய வேண்டிய வேலையை இவன் செய்து முடித்து விடுவான். காலையில் "அண்ணே உங்கள் கணக்கில் இத்தனை பீஸ் சேர்த்துக் கொள்ளுங்க நான் தேய்த்து கொடுத்து விட்டேன்" என்றதும் அவர்களும் இவனை நம்பத் தொடங்கி விடுவார்கள். படிப்படியாக அவர்கள் இடத்தை இவன் ஆக்ரமித்துக் கொள்வான்.


அடுத்தடுத்த நிறுவனத்திற்கு நகர்ந்து ஒரு வருடத்திற்குள் தனக்குக் கீழே பத்துப் பேர்களை வைத்து வேலை வாங்கும் அளவிற்கு வளர்ந்து விட்டான். இதிலும் சாமர்த்தியசாலியாக இருப்பான். தனக்குக் கீழே திறமையான நபர்களை விடப் புதுப்புது ஆட்களைத்தான் வேலைக்கு வைத்துக் கொள்வான். அவர்கள் தான் இவன் சொல்லும் விலைக்கு கட்டுப்பட்டு வேலை செய்வார்கள்.


நன்றாகப் பயிற்சி பெற்று தொழில் அனுபவம் மிக்கவர்கள் இவனிடம் பீஸ் ரேட் பேச இவன் அவர்களை புறக்கணித்து விடுவான். புதிதாக வருபவர்கள் ஷிப்ட் கணக்கில் தேய்த்துக் கொடுக்கச் சம்மதிப்பார்கள். ஒருவரை ஷிப்ட் கணக்கில் வேலை வாங்கும் போது இவனுக்குக் கூடுதல் லாபம். அவர்களை விரட்டி வேலைவாங்கினால் அதிகப் படியான லாபம் இவனுக்குக் கிடைத்து விடும். பள்ளி, கல்லூரி விடுமுறை சமயங்களில் ஊரில் இருந்து ஒரு படை பட்டாளத்தை இரண்டு மாதத்திற்கு அழைத்து வந்து தங்க வைத்து விடுவான். இவன் அவர்களுக்கு கொடுப்பது தான் சம்பளம்.  நாலைந்து இடங்களில் ஒரே சமயத்தில் வேலை எடுத்து புயல் போல பணியாற்றுவான். அந்த இரண்டு மாதத்தில் இவன் காட்டில் அடை மழை தான்.


முதல் வருடத்தில் இரவு பகலாக உழைத்த உழைப்பின் பலன் இவன் மூத்த அக்காவை குடும்பத்தினர் விரும்பிய வகையில் சிறப்பாகத் திருமணம் செய்து கொடுத்து விட்டான். அடுத்தடுத்த இரண்டு வருடங்கள் குடும்பத்தில் மீதம் இருந்த இரண்டு அக்காக்காளின் திருமணம். கடைசியாகத் தம்பியை அவன் விரும்பியபடி எம்.ஈ முடிக்க வைத்து இன்று வளைகுடா நாட்டில் மாதம் ஒரு லட்சம் சம்பளம் அளவிற்கு வாங்கும் அளவிற்கு உருவாக்கிக் காட்டியுள்ளான். இவனின் தற்போதைய லட்சியம் ஊரில் பெரிய வீடு ஒன்று கட்ட வேண்டும். தம்பி சம்பளத்தைக் கூட வங்கியில் தான் போட சொல்லியுள்ளான்.


சுயமரியாதை மற்றும் தன்மானம் அதிகம் கொண்டவனுக்கு வாழ்க்கை முழுக்க அதிகப் பிரச்சனைகள் உருவானாலும் ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும் என்பதை நானே என் அனுபவத்தில் கண்டுள்ளேன். ராஜாவின் வாழ்க்கையும் அப்படித்தான் அவனை வளர்த்துள்ளது. நான் பணியாற்றிய ஒவ்வொரு நிறுவன தொழிற்சாலைக்குள் நுழையும் போதெல்லாம் வேலை சார்ந்த விசயங்களுக்கு அப்பால் பலதரப்பட்ட நபர்களுடன் அவர்கள் குடும்பம் சார்ந்து, அவர்களின் பிரச்சனைகளைப் பேச்சுவாக்கில் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு.


காரணம் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டுத் தலைமறைவு வாழ்க்கைக்காகத் திருப்பூரில் வந்து பணிபுரிபவர்கள், பகலில் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டே இரவு நேரத்தில் வழிபறிக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள், செக்கிங் வேலைக்குச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் என்று பலதரப்பட்ட மனிதர்கள் ஒவ்வொரு தொழிற்சாலைக்குள்ளும் தொழிலாளர்கள் என்ற பெயரில் இருப்பார்கள்.


பொறாமை குணம் என்பது ஒரு தனி மனிதனின் வளர்ச்சியை மட்டுப் படுத்தும் என்பது பொது விதி. ஆனால் ஒரு தொழிலாளரின் பொறாமை என்பது பெரிய பதவிகளில் இருப்பவருக்கு நிர்வாகத்தை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதற்கு உதவியாக இருக்கும் என்பதை நீங்க நம்ப முடியுமா? ஒரு தொழிலாளருடன் சற்று நெருங்கி உரிமையாகப் பேசும் போதே அங்கே உள்ள பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட விசயங்கள் நம் பார்வைக்கு வந்து விடும். இதுவே பத்து இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் பேசும் போது மொத்த நிர்வாகத்தின் புரையோடிப்போன பல விசயங்கள், பலரும் நம்மிடம் சுட்டிக்காட்டப்படாத சமாச்சாரங்கள் அனைத்தும் நம் கண்களுக்குத் தெரிந்து விடும்.


ஒரு சிறந்த நிர்வாகி என்பவருக்கு முதல் தகுதியே நெருக்கடியான சூழ்நிலையில் உருவாகும் பிரச்சனைகளை எப்படிக் கையாள்கின்றார் என்பதை வைத்தே முதலாளி அவரைப்பற்றி முடிவுக்கு வருகின்றார். ஆனால் நெருக்கடியான சூழ்நிலை உருவாகாமல் தனது நிர்வாகத்தைச் செம்மையாக வைத்திருப்பவரை எந்த முதலாளிக்குத்தான் பிடிக்காமல் போகும்?


நாம் பலவிதங்களில் பரிசோதித்து தேர்ந்தெடுத்து நமக்கு கீழே பல பதவிகளில் வைத்திருப்பவர்களின் விசுவாசத்தைக் காட்டிலும் அடிமட்ட நிலையில் உள்ள தொழிலாளர்களின் விசுவாசம் என்பது அளவு கடந்தது என்பதை என் அனுபவத்தில் பல இடங்களில் பார்த்துள்ளேன். ஒரு நிறுவனத்தில் அலுவலகம் மற்றும் தொழிற்சாலையில் ஏராளமான பதவிகள் உண்டு. ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு நபர் இருப்பார். ஒரு பதவியில் உள்ளவர் அவர் அளவுக்குத் தான் திறமையாக இருக்க முடியும். அவருக்கென்று ஒரு குறிப்பிட்ட வரையறை உண்டு. அதற்கு மேல் அவரிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. அவர் செய்ய முடியாத காரியத்தை நாமே செய்து விடும் போது அடுத்து வரக்கூடிய பல பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். இப்படித்தான் எனக்கான நிர்வாக ஒழுங்கமைப்பை ஒவ்வொரு இடத்திலும் உருவாக்கி இருக்கின்றேன்.


கௌரவம் சார்ந்து, ஈகோ சார்ந்து இது போன்ற விசயங்களைக் கையாளும் போது நம் மானம் மரியாதை அனைத்தும் கப்பலேறிவிடும் ஆபத்துள்ளது. நாம் இதைப் போய்ச் செய்வதா? என்று யோசிக்கத் தொடங்கினால் ஏதோவொரு இடத்திலிருந்து பெரிய ஆபத்து நம்மைத் தாக்கப் போகின்றது என்று அர்த்தம்.


நாம் எந்தப் பதவியில் இருந்தாலும் எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் இயல்பான மனிதராகக் கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்க்கையை, பதவியை நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியும். சிறப்பான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று இறுமாப்பில் நாம் நம்மை மாற்றிக் கொண்டால் அடுத்து ஒரு ஆப்புக் காத்திருக்கின்றது என்று அர்த்தம். இது தவிர ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் ஒவ்வொரு இடத்திலும் உள்ள மனிதர்களுடன் பேசினால் மட்டுமே அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும். நம் பதவி சார்ந்து ஒரு இறுக்கத்தை நாமே உருவாக்கிக் கொண்டே இருந்தால் அது பலவிதங்களில் நம்மைப் பல மனிதர்களிடத்தில் இருந்து அந்நியமாக வைத்து விடும் ஆபத்துள்ளது.


மற்ற துறைகளை விட ஆயத்த ஆடைத் துறை என்பது முழுக்க முழுக்க மனித உழைப்பை நம்பி செயல்படும் துறை. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நிலையிலும் அரவணைத்து சென்றால் தான் நாம் நம் காரியத்தை வெற்றியாக மாற்ற முடியும்.

 

workers meeting


நாம் பலருடனும் பேசும் போது அவர்களுக்கு ஒரு விதமான ஆத்ம திருப்தி கிடைக்கின்றது. நம்மையும் இவர் மதித்துப் பேசுகின்றாரே? என்ற எண்ணத்தில் வேலை விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். சுயநலத்தின் அடிப்படையில் தான் இந்த உலகம் இயங்குகின்றது. மறுபக்கம் பார்த்தால் சக மனிதனை மதிக்காமல் உலகில் எந்த நிகழ்வும் வெற்றியை நோக்கி நகர்வதில்லை. எந்தந்த இடங்களில் எப்படிப்பட்ட அளவீடுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.


ராஜா போன்ற சமூக அங்கீகாரத்தில், பொருளாதார ரீதியாக வெற்றி பெற்ற இளைஞர்கள் திருப்பூரில் ஏராளமான நபர்கள் உண்டு. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை நோக்கி படையெடுத்து வரக்காரணம் இங்குள்ள இயல்பாக உள்ள இயற்கை வளமும் அதிக எண்ணிக்கையில் உள்ள இளையர் கூட்டமும் தான் முக்கியக் காரணமாக உள்ளது. மேலும் இந்த இளையர்களின் எண்ணிக்கை இங்கே அளவு கடந்து இருப்பதால் இந்தியாவின் தொழில் உலகம் நாள் தோறும் விரிவடைந்து கொண்டேயிருக்கின்றது. திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் எல்லைகளும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றது.


(அடுத்த அத்தியாயத்துடன் இத் தொடர் நிறைவடைகின்றது. தொடர் வாசிப்பில் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றி)

by Swathi   on 04 Dec 2014  3 Comments
Tags: திருப்பூர் ஜோதிஜி   ஆயத்த ஆடைத் துறை   ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்   Oru Tholitchalaiyin Kurippugal   Tiruppur Jothiji   Jothiji Tiruppur     
 தொடர்புடையவை-Related Articles
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14
கருத்துகள்
12-Dec-2014 07:19:26 krishmoorthy said : Report Abuse
போன வாரம் எவ்வளவோ முயன்றும் என் கருத்தை பதிவு செய்ய தடையாக வலைத்தமிழ் சர்வர் என்னை மிரட்டிவிட்டது .இன்று கூட அந்த பயம் இருக்கிறது ... கடந்த 15 ஆண்டுகளாக நீங்கள் சொல்வது போல பணிபுரிபவர்களை கவனித்து கொண்டுதான் இருக்கிறேன் .ஆனால் இங்கு பணிபுரிபவர்கள் எல்லோரும் ஒரு விதத்தில் ஞானிகள் போலத்தான் பெற்றவர்களாகட்டும் குடும்பம ஆகட்டும் ஏன்? தனக்கெ ஒன்றாகட்டும் அவ்வளவு சுலபமாக விடுப்போ ,அனுமதியோ பெற முடியாது அதனாலோ என்னவோ இங்கு உள்ள மனிதர்கள் பொதுவாக ஆறு குணங்கள் சொல்வார்களேஅதை தாண்டி ஏழாவதாக ஒருவித சலிப்பில் எதையும் பொறுத்து கொள்ளாதவர்களாக இருப்பதை பார்க்கிறேன் ராஜா போல தன்னலம் பார்க்காத பல மெழுகுகள் இங்கு பல ஆயிரம் சுடர்விட்டு கொண்டு இருக்கத்தான் செய்கிறது - சொந்த ஊரில் கிடைக்காத சம்பளம் , வசதிகள் இங்கு பெறலாம் என்பதால் பலரும் இங்கு வாழ்கையை வசதி வந்த பிறகு தொலைத்து கொண்டது அதிகம் .அதில் ராஜா போன்றவர்கள் வசதியை பயன்படுத்தி கொண்டவர்களில் ஒரு பாடம் .ஒரு முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் பணிபுரிபவர்களின் மன நிலை பற்றி புரிய வேண்டிய அவசியத்தை பற்றி இந்த பதிவு பாடமே நடத்துகிறது .
 
07-Dec-2014 03:46:16 சண் நல்லையா said : Report Abuse
அருமையான கட்டுரை தொடர்..வாழ்க திருப்பூர்! வாழ்க தமிழ்நாடு! வாழ்க தமிழர் நலம்!ஒற்றுமை!
 
05-Dec-2014 09:48:27 டி.என்.முரளிதரன் said : Report Abuse
எத்தனை விதமான மனிதர்கள்.போட்டிகள் பொறாமைகள். உழைக்கும் வர்க்கம் முதலாளி வர்க்கம் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் நின்று உணர்ந்து எழுதப் பட்ட அற்புதமான தொடர்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.