LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15

பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே


மாதச் சம்பளத்திற்கான பட்டியலை முதலாளியின் மேஜையில் வைத்த போது அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். சிரித்துக் கொண்டே "என்ன இது?" என்று பார்வையால் கேட்டார். நானும் சிரித்துக் கொண்டே ஒன்றும் பேசாமல் என்னருகே இருந்த காகிதத்தை அவர் பார்வையில் படும்படி அவர் பக்கம் தள்ளிவைத்துவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தேன். அவர் மீண்டும் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அந்தக் காகிதத்தின் மேல்  பார்வையை ஓட விட்டார்.


அவரின் சிரிப்பு உண்மையான சிரிப்பல்ல. அதுவொரு கள்ளச் சிரிப்பு. பலரையும் கலங்க வைக்கும் சிரிப்பு. புரிந்தவர்களுக்கு எரிச்சலை வரவழைக்கக்கூடிய சிரிப்பு. மற்றவர்களை எகத்தாளமாகப் பார்க்கக்கூடிய சிரிப்பு. எல்லோருமே தனக்குக் கீழ் தான் என்று எண்ணக்கூடிய கீழ்த்தரமான சிரிப்பு.


நான் நன்றாக உணர்ந்து வைத்திருந்த காரணத்தால் என் உணர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் கூர்மையாக நேருக்கு நேர் அவர் கண்களைப் பார்த்தேன். மனிதர்களின் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசி பழகும் போது பலவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் கள்ளத்தனத்தை அவர்களின் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்.


இந்த நிறுவனத்தில் நான் நுழைந்தது முதல் என்னை எந்த இடத்திலும் முதலாளியிடம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. எதற்காகவும் அவசரப்பட்டு உணர்ச்சிவசப்படுவதில்லை. வார்த்தைகளைக் கொட்டிவிடுவதில்லை. அவர் முன்னால் அமரும் ஒவ்வொரு நிமிடமும் என்னைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பதுண்டு.


கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்களுடன் நாம் பழகும் போது பல மடங்கு கவனமாக இருக்க வேண்டும். எந்த நொடியிலும் நாம் நம்மை இழந்து விடக்கூடாது. எந்தச் சமயத்திலும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் நாம் சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் நம்மைத் தாக்க அது மன வலிமையைக் குறைப்பதோடு அதன் தாக்கம் உடலில் பரவும் போது நாம் சேர்த்து வைத்துள்ள மனோபலத்தைப் பாதியாகக் குறைத்து விடக்கூடிய ஆபத்துள்ளது.


நாம் வாழும் சமூகம் என்பது நாடகதாரிகளால் சூழப்பட்டது. கள்ளத்தனம் தான் தங்கள் கொள்கை என்ற எண்ணம் கொண்ட பெரும்பான்மையினர் மத்தியில் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும்.


இது சரி, இது தவறு என்பதற்கு அப்பாற்பட்டு இங்கே ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதியாகத் தான் வாழ்கின்றார்கள். இவற்றை எந்தப் புத்தக அறிவும் நமக்குத் தந்து விடாது. மனிதர்களுடன் பழகும் போது தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். நாம் தான் ஒவ்வொரு சமயத்திலும் புரிந்து கொள்ள வேண்டும்.


சிரிப்பு மற்றும் அழுகை இந்த இரண்டும் மனிதனுக்கும் மட்டுமே உரிய சிறப்பம்சம். விலங்குகளில் அதிகப் பாரம் சுமக்கும் போது அவைகள் அனுபவிக்கும் அவஸ்த்தைகளை அவற்றின் செயல்பாடுகளில் இருந்து கூர்மையாகக் கவனித்துப் பார்க்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடியும். சில சமயம் அவற்றின் கண்ணீர் நமக்கு அடையாளம் காட்டும்.


அடக்க முடியாத ஆற்றாமையில் மதம் பிடிக்கும் யானைகளின் செயல்பாடுகளை அதன் பிளிறல் சப்தத்தில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.


ஆனால் விலங்குகளின் மகிழ்ச்சியென்பது அதன் சப்த ஒலிகளில் மட்டுமே நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். வினோத மொழியில் விதவிதமான சந்தோஷங்களை அவைகள் வெளிக்காட்டிக் கொள்கின்றன. பசி இல்லா மிருகம் தன் எதிரே வரும் எந்த விலங்கினங்களையும் எந்த நிலையிலும் தொந்தரவு செய்வதில்லை. விலங்குகளின் காமப்பசிக்கு குறிப்பிட்ட பருவம் மட்டுமே. ஆனால் மனித இனத்தில் மட்டும் இவை எதுவுமே செல்லுபடியாகாத பல வினோதங்கள் உண்டு.


கிராம வாழ்க்கையில் நம் வெளிப்படைத் தன்மை ஒவ்வொரு சமயத்திலும் வெளிப்பட்டு விடும். பரஸ்பரம் அதற்குரிய அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்கும் போது அது இயல்பான பழக்கமாகவே இருக்கும். அதுவே அங்கு வாழும் மனிதர்களின் இயல்பான குணமாக மாறிவிடும். ஆனால் நகர்புற வாழ்க்கையில் பல சமயம் நாடக நடிகர் போலவே ஒவ்வொருவரும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உருவாகின்றது.


நாம் வகிக்கும் பதவியைப் பொறுத்து மகிழ்ச்சியை வெளிக்காட்ட முடியாத நிலையும் தகுதியைப் பொறுத்து அதனைப் பகிர்ந்து கொள்ள முடியாத தன்மையும் உருவாகின்றது.


"நீ அற்புதமான காரியத்தைச் செய்து உள்ளாய்" என்று பாராட்டினால் உடனே "என் சம்பளம் ரொம்பக் குறைவா இருக்கு சார். முதலாளிக்கிட்டே கொஞ்சம் பார்த்து சொல்லுங்க சார்?" என்று அடுத்த வேண்டுகோள் நம்மைத் தாக்கும். இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பழகினால் "சார் எனக்கு அட்வான்ஸ் தொகை வேண்டும்" என்பவர்கள் மத்தியில் வாழும் போதும் நாமே நம் இயல்பான குணத்தை மறைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கும்.


பல முதலாளிகள் ஒவ்வொரு சமயத்திலும் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் தனித்தனி தீவுகளாக வாழத் தொடங்கின்றார்கள். அவர்களின் இயல்பான குணங்கள் மாறி விடுகின்றது.


ஆனால் என் முதலாளியின் குணமோ எல்லாவிதங்களிலும் வித்தியாச மனிதராக இருந்தார். தனித்தீவாக இருந்தார். தன்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு எவரும் நன்றாக இருந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்தார். எவ்வித பாரபட்சமும் எவரிடமும் காட்டுவதும் இல்லை. தன் குடும்பத்தைத் தவிர மற்ற அத்தனை பேர்களும் அவருக்குச் சேவகம் செய்யக் காத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். தனது தோல்விகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தோல்விகள் தொடர்ச்சியாக தாக்கிய போதும் தனது எண்ணங்களை மாற்றிக் கொள்ள அவர் விரும்பவில்லை.


தான் கடந்த காலத்தில் பெற்ற வெற்றிகளை மட்டுமே தனக்குரிய தகுதியாக வைத்திருந்தார். மாறிய சமூகச் சூழல் எவ்விதத்திலும் அவரைப் பாதிக்கவில்லை. தனது நிறுவனத்தின் வளர்ச்சி வேண்டும் என்று நினைத்தாரே தவிர அதற்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. காரணம் கூலிக்கு மாரடிக்க ஆட்கள் கிடைப்பார்கள். நாம் எப்போதும் போலச் சுகவாசியாக இருந்து விட முடியும் என்ற நம்பிக்கை தான் அவரை வழிநடத்தியது. அவரின் தினசரி செயல்பாடுகளும் அப்படித்தான் இருந்தது.


ஒவ்வொரு நாளும் காலையில் பத்து மணி அலுவலகத்திற்கு வருவார். பத்து நிமிடம் என்னை வரவழைத்து பேசி விடுவார். அதுவொரு வினோதமான நிகழ்வாக இருக்கும்.


மகன் தன் பிறந்த நாளுக்கென்று வழங்கிய டேப்லெட் பிசியை விரித்து வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார். அவர் வைத்திருந்த மாடல் அந்தச் சமயத்தில் தான் வெளியாகி இருந்தது. ஒவ்வொரு நாளும் அலுக்காமல் அதனைப் பற்றி அளந்து விடுவார். பொறுமையாகக் கேட்டுக் கொள்வேன். இடையே "உங்களுக்கு இதை இயக்கத் தெரியுமா?" என்று கேட்பார்.


நான் அவர் எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்யும் வண்ணம் "எனக்குத் தெரியாது சார். உங்களிடம் இருந்து இப்படி ஒரு வசதியான டேப்லெட் பிசியைப் பார்க்கின்றேன்" என்றதும் சப்தமிட்டு சிரிப்பார்.


திருப்தியடைந்தவராய் அடுத்த விசயத்திற்குத் தாண்டிச் செல்ல அவகாசம் கொடுத்து மெல்ல விசயத்திற்கு இழுத்துக் கொண்டு வருவேன்.  முதலாளிகளிடம் பேசுவது தனிக்கலை. உடையாடல்களின் தொடக்கத்தில் பணம் சார்ந்த விசயங்களை எக்காரணம் கொண்டும் பேசி விடக்கூடாது. நமது சொந்த விருப்பங்களை எக்காரணம் கொண்டு சொல்லிவிடக் கூடாது. முக்கியமாக நிர்வாகத்தின் பலகீனங்களை சொல்லி விடக் கூடாது.


கடைசியாக உண்மையான நிலவரங்களை எடுத்துரைக்கக் கூடாது. நிறுவனத்தின் கடன்காரர்களின் தொந்தரவுகளைக் காட்டிக் கொள்ளக்கூடாது.


எல்லாநிலையிலும் பொறுமையாக வலை விரித்தவன் மீன் சிக்குமா? என்பது போலக் காத்துக் கொண்டிருக்க வேண்டும். சமயம் சந்தர்ப்பங்கள் சரியாக இல்லாதபட்சத்தில் அடுத்த நாளுக்காகக் காத்திருக்க வேண்டும். மொத்தத்தில் நம்மோடு பேச அவர்களுக்கு விருப்பத்தை உருவாக்க வேண்டும். அதனை ஒவ்வொரு நாளும் உருவாக்கி வைத்திருக்க வேண்டும். இது தான் முதன்மைப் பதவிகளில் இருப்பவர்களின் முக்கியச் சூத்திரமாக இருக்க வேண்டும்.


பலதரப்பட்ட முதலாளிகளிடம் நெருங்கிப் பழகிய வாய்ப்பிருந்த காரணத்தினால் இவரைக் கையாள்வது எளிதாக இருந்தது. முட்டாள்களை நாம் முட்டாள் என்று அழைக்காமல் நீ தான் உலகத்திலே புத்திசாலி என்று சொல்லிப் பாருங்கள். அது ஒன்றே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும். அவர் விருப்பத்தை உணர்ந்து கொண்டு, அவரின் கொடூரமான குணத்தைச் சகித்துக் கொண்டு என் வாய்ப்புக்காகக் காத்திருந்த போது தான் மாதச் சம்பளப் பட்டியலைப் பார்த்து விட்டு இப்படிக் கேட்டார்.


"இதென்ன புதுப்பழக்கம்?" என்றார்.


நான் குழப்பமாக "எதைச் சொல்கிறீர்கள்?" என்றேன்.


"மாதம் தொடங்குவதற்கு முன்பே மாத சம்பளம் பட்டியலை கொண்டு வந்து நீட்டுறீங்க? இன்னும் ஒரு ஒப்பந்தம் கூட வெளியே போக வில்லையே?" என்றார்.

 

Oru Tholitchalaiyin Kurippugal - Jothiji Factory


எந்த ஒப்பந்தமும் ஏற்றுமதியாகவில்லை என்று அக்கறையோடு கேட்பவர் இதற்காக என்ன முதலீடு போட்டுள்ளார்? என்று கேட்டால் கோபம் வந்து விடும் என்பதாக அமைதியாகப் பார்த்துக் கொண்டு "அடுத்த மாதம் இறுதியில் தொடர்ச்சியாகப் போய் விடும்" என்றேன்.


ஆச்சரியத்துடன் "எப்படி?" என்று கேட்ட போது சகஜநிலைமைக்கு வந்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு வாரமும் எடுத்துள்ள ஒப்பந்தத்தின் மதிப்பு, அதன் மூலம் கிடைக்கக்கூடிய லாபம், அலுவலகம் மற்றும் தொழிற்சாலையில் சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட மாறுதல்கள், பிரிண்டிங், நிட்டிங் மூலம் வரப்போகின்ற லாபம் என்று வரிசையாக அவருக்குப் பட்டியலிட்டுச் சொன்ன போது அவர் முகம் மகிழ்ச்சிக்கு மாறினாலும் அடுத்தக் கேள்வியை என்னை நோக்கி வீசினார்.


"நீங்க கணக்குச் சம்மந்தப்பட்ட விசயங்களில் அதிகக் கவனம் செலுத்த வேண்டாம். நம்ம அக்கவுண்ட்ஸ் துறையிடம் எல்லாவற்றையும் கொடுத்து விடுங்க. அவர்களிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன்" என்றார்.


எனக்குப் புரிந்து விட்டது. அதாவது லாபம் சார்ந்த விசயங்கள் என் கண்ணில் படாமல் இருந்தால் என் விருப்பம் சார்ந்த விசயங்களில் நான் அதிகப் பிடிவாதம் காட்டாமல் இருப்பேன் என்று அவரின் எண்ணம். மடத்தனத்தின் உச்சம் என்று மனதில் நினைத்துக் கொண்டு "அக்கவுண்ட்ஸ் துறை மாதிரி மற்றொரு துறையை நாம் உருவாக்க வேண்டும் சார்?" என்றார்.


ஆச்சரியத்துடன் பார்த்தவரிடம் "ப்ளானிங் துறை என்று உருவாக்கி விட்டால் அவர்களே எல்லா வேலையையும் உருவாக்கி விடுவார்கள். திட்டமிடுதல் தொடங்கிக் கடைசி வரைக்கும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். நான் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்தாலே போதுமானதாக இருக்கும். தினந்தோறும் அக்கவுண்ட்ஸ் மற்றும் ப்ளானிங் துறையைச் சார்ந்த இருவரும் உங்களை வந்து பார்த்தாலே போதுமானது" என்றேன்.


அவருக்குப் புரிந்து விட்டது. நாம் விடாக்கண்டன் என்றால் இவன் கொடாக்கண்டன் போல மடக்குகிறான் என்று புரிந்து கொண்டு "இல்லையில்லை. அதெல்லாம் சரியாக வராது. இப்ப உள்ள மாதிரியே நீங்களே நிர்வாகத்தை நடத்துங்க. உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்க. சம்பளம் நிர்ணயிப்பது மட்டும் நான் பார்த்துக் கொள்கின்றேன்" என்றார்.


"நீங்க சொல்றது சரிதான் சார். எனக்குத் தேவையானவர்களை நீங்களே தேர்ந்தெடுத்து தந்து விடுங்க. அது தான் சரியாக இருக்கும்" என்றதும் கோபத்துடன் உச்சிக்கே சென்று கத்தத் தொடங்கினார். "நான் ஒன்று சொன்னால் நீங்க ஒன்று சொல்றீங்க. இது சரிப்பட்டு வராது" என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தவரை புறக்கணித்து விட்டு என் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு மாடிப்படியில் கீழே இறங்கத் தொடங்கினேன். அவர் வெளியே வந்து எட்டிப் பார்த்தவர் அவர் மகன் இருக்கும் அறைக்குச் சென்று விட்டார். கீழே வந்த போது மகன் என்னை அழைப்பதாகச் சொன்னதையும் மீறி வெளியே வந்து வாகனத்தை இயங்கிய போது மகனே கீழே வந்து விட்டார்.


"கொஞ்சம் பேசனும் மேலே வர்றீங்களா?" என்று தன்மையாகப் பேச மீண்டும் அவருடன் வந்து அவர் அறையில் அமர்ந்து போது எனக்கு எரிச்சலாக இருந்தது.


அப்பாவுக்கும் மகனுக்கும் அடிப்படையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு. அவர் அடித்துச் சாய்ப்பார். இவர் தண்ணீர் ஊற்றி தெளிய வைப்பார். ஆனால் ஓன்றும் தெரியாத போது இருவரும் சோர்ந்து நாடகமாடுவார்கள். பல நிகழ்ச்சிகளில் இதை நான் கவனித்துக் கொண்டிருந்தாலும் நான் கண்டு கொள்வதில்லை. பன்றிகளுக்குச் சாக்கடை தான் சுகம் என்றால் வீட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினாலும் இருக்கும் இடத்தைச் சாக்கடையாகத் தானே மாற்றும். ஆனால் மகன் எப்படி இதைத் தொடங்கப் போகின்றார் என்று ஒன்றும் தெரியாது போல அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு "சொல்லுங்க சார்" என்றேன்.


"என்ன கிளம்பிட்டீங்க?" என்றார்.


எல்லாமே தெரிந்து அப்பா இட்ட கட்டளையை நிறைவேற்ற என்னை முன்னால் உட்கார வைத்துக் கொண்டு கேட்கும் கேணதனத்தை ரசித்துக் கொண்டே "இல்லை சார். தலைவலியாக இருக்கு. அதுதான் வீட்டுக்குக் கிளம்பிட்டேன்" என்றேன்.


"வேறொன்றும் பிரச்சனையில்லையே?" என்றார்.


நானும் ஒன்றும் தெரியாது போல "ஒன்றுமில்லையே" என்றேன்.


அவர் சிரித்துக் கொண்டே "அப்பா என்ன சொன்னார்" என்றார்.


நானும் விடாமல் "ஒன்றும் சொல்லவில்லையே" என்றேன்.


அவர் பார்வை எனக்குப் புரிந்தது. நீ கிறுக்கனா? இல்லை நான் கிறுக்கனா? என்பது போல இருந்தது அவருக்குப் புரிந்து விட்டது. சற்று கீழே இறங்கி வந்து பேசத் தொடங்கினார்.

 

Oru Tholitchalaiyin Kurippugal - Jothiji Factory


"அப்பா சம்பளப்பட்டியல் பார்த்து டென்சன் ஆனாராமே?" என்றார்.


"அப்படியா?" என்றேன்.


அவருக்குப் புரிந்து விட்டது. அப்பட்டமாகவே பேசத் தொடங்கினார். அப்பா மேல் அவருக்கிருந்த ஆதங்கத்தைப் படிப்படியாகச் சொல்லிக் கொண்டே வந்தார். நாகரிகமாகப் பேசினாலும் அவர் அழுது விடுவாரோ என்று எண்ணிக் கொண்டு பேச்சை மாற்றினேன். தன் தகப்பன் ஒரு 420 என்ற எந்த மகனால் அப்பட்டமாகச் சொல்ல முடியுமா?


அவர் சுற்றி வளைத்துப் பேசினாலும் என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. கடைசியில் அவராகவே வழிக்கு வந்தார். "தயவு செய்து அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விடாதீர்கள். எங்கப்பா யாரையும் பார்த்து மிரண்டு போனது இல்லை. அவரின் கடந்த இருபது வருட அனுபத்தில் உங்களை மாதிரி எத்தனையோ பேர்களை இங்கே வேலைக்கு வைத்துள்ளார். ஆனால் உங்களின் அசாத்திய திறமையைப் பார்த்து அவரே என்னிடம் பலசமயம் ஆச்சரியமாகப் பேசியுள்ளார். ஆனால் பணம் சார்ந்த விசயங்களில் அவர் குணம் இன்னமும் மாறவில்லை. அது எங்களுக்கே தெரியும். உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் என்னிடம் சொல்லுங்க. நான் வீட்டில் சண்டை போட்டு அதை வாங்கித் தருகின்றேன்" என்று தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டே சென்றார்.


மகன் பேசிக் கொண்டிருந்த போது சற்று நேரத்திற்கு முன் நடந்த சம்பவங்களை யோசித்துப் பார்த்தேன்.


சம்பளப் பட்டியலில் இறுதியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பெருந்தொகை முதலாளிக்கு எரிச்சலை உருவாக்கி இருக்க வேண்டும். அவர் வைத்திருந்த சிவப்பு நிற பேனாவால் அதன் மீது வட்டமிட்டு "நீங்க சொல்கின்ற திட்டத்திற்கும் நாம் இத்தனை பேர்களுக்கு கொடுக்கும் சம்பளமும் அதிகமாகத் தெரிகின்றதே?" என்றார்.


எனக்கு எரிச்சலும் கோபமும் உள்ளே பொங்கிக் கொண்டிருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் மீண்டும் ஒரு முறை விலாவாரியாக அவரவர் தகுதி குறித்த விசயங்களைப் பேசி விட்டு அவர்களின் தனித் திறமைகளைப் பட்டியலிட்டு காட்டினேன். அடுத்த மூன்று மாதத்திற்குத் திட்டமிட்டுள்ள மூன்று கோடிக்கு உண்டான உழைப்பின் அவசியத்தைச் சுட்டிக் காட்டினேன்.


எல்லாமே அவருக்குப் புரிந்தது. நிர்வாக வளர்ச்சி என்பது அவருக்குக் கண்கூடாகத் தெரிந்தது. சுடுகாடு போல இருந்த தொழிற்சாலை ஒரு மாதத்திற்குள் 300 பேர்கள் புழங்கும் இடமாக மாறிக் கொண்டிருப்பதும் ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக் கொண்டிருப்பதும் அவருக்கு ஆச்சரியத்தைத் தந்த போதும் அதனைப் பாராட்ட மனமில்லாது எந்த இடத்தில் குறை காணலாம்? அதனை வைத்துக் கொண்டு எந்த இடத்தில் பணத்தை இன்னமும் குறைக்க முடியும் என்று தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார்.


தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியுமா? இனி நாமும் விளையாடிப் பார்த்து விடலாம் என்று இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு "சார் நீங்க சொல்வது சரிதான். இதில் குறிப்பிட்டுள்ள தொகை அதிகமாகத்தான் இருக்கின்றது" என்றபடி அவர் முகத்தைப் பார்தேன்.


அப்போது தான் அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது. "சரியாகப் புரிஞ்சுகிட்டீங்க. எப்படிக் குறைக்கப் போறீங்க?" என்றார்.


"பாதி நபர்களை அனுப்பி விடலாம். எடுத்த ஒப்பந்தங்களில் பாதியை திருப்பிக் கொடுத்து விடுவோம். பிரிண்ட்டிங், நிட்டிங், எம்ப்ராய்ட்ரி போன்றவற்றை இன்னும் ஆறேழு மாதங்கள் கழித்துத் தொடங்கி விடலாம். உற்பத்தித் துறையில் உள்ள சிலவற்றை மட்டும் இயக்க முடியுமா? என்று பார்ப்போம். அப்போது நீங்க சொன்ன தொகையில் இன்னமும் குறைத்து விடலாம்" என்று சொல்லிவிட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அவரைப் பார்த்தேன்.

 

Textile Industries in Tirupur


சுதாரித்துக் கொண்டார். தன்னைக் கிறுக்கனாக மாற்றுகின்றான் என்பதை உணர்ந்து கொண்டு "ஆட்களின் சம்பளத்தைக் குறைத்து விடுங்க என்றால் ஆட்களை வெளியே அனுப்பி விடலாம் என்று சொல்றீங்க? நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. நாங்க சம்பளப்பட்டியலையே 15ந் தேதிக்கு மேல் தான் போட தொடங்குவோம். மூன்றாவது வாரத்தில் தான் கொடுப்போம். நீங்க எல்லாமே தலைகீழா செய்றீங்க? இப்படிப் பழக்கப்படுத்தினா வர்றவன் அத்தனை பேர்களும் சுகவாசியாக மாறிவிடுவானுங்க" என்று அவர் ஆழ்மன வக்கிர எண்ணங்கள் ஒவ்வொன்றையும் புலம்பலாகக் கோபத்துடன் எடுத்து வைத்த போது அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.


தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.


இன்று தொழில் நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கும் முதலாளிகளின் மனோபாவம் முற்றிலும் மாறி விட்டது. மிகப் பெரிய முதலீடு போட்டுள்ளவர்கள் நாம் தப்பிக்க என்ன வழி? என்பதைத் தான் முக்கியமாகப் பார்க்கின்றார்கள். அறம் சார்ந்த கொள்கைகள், தொழில் தர்மம் போன்ற அனைத்தும் மாறிவிட்டது. தப்பிப் பிழைக்க வேண்டும். தனக்கே எல்லாமும் வேண்டும் என்ற இந்த இரண்டு கொள்கையின் அடிப்படையில் தான் இன்றைய தொழில் அதிபர்களின் மனோபாவம் உள்ளது. நட்டம் வரும் போது எவர் பங்கு போட்டுக் கொள்ள வருகின்றார்கள்? என்ற அவர்களின் கேள்வியில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளதோ அதே அளவுக்குத் தங்களிடம் பணிபுரிகின்றவர்களுக்கு அடிப்படை உரிமைகளைக் கூட நான் வழங்க மாட்டேன் என்பவர்களை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்?


இதுவொரு ஆதிக்க மானோபவம் என்பதை விடத் தன்னை, தங்கள் குடும்பத்தைத் தவிர மற்ற அத்தனை பேர்களும் அடிமையாகவே காலம் முழுக்கத் தங்களுக்குச் சேவகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களின் மனோபாவம் இப்படித்தான் இருக்கும். இதற்குப் பின்னால் நீங்கள் சாதி, மதம், வளர்ந்த சூழ்நிலை, கற்ற கல்வி, வளர்த்துக் கொண்ட சிந்தனைகள் என்று நீங்கள் எத்தனை காரணம் காட்டினாலும் மொத்தத்திலும் அளவுகடந்த ஆசையே இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. தன் தகுதிக்கு மீறி ஆசைப்படுபடுகின்ற ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் நிலைபொறுத்துத் தங்களுக்கு வசதியான கொள்கைகளை வைத்துள்ளார்கள். அதுவே சரியென்றும் சொல்கின்றார்கள்.


முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்த விசயங்களை நான் யோசித்துக் கொண்டிருந்த என்னை மகன் பேசிய உடையாடல் கலைத்தது. மகன் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் தான் என்னை யோசிக்க வைத்தது. "இரண்டு வருடமாவது இங்கே நீங்க இருந்தால் நான் இந்த நிறுவனத்தை நான் எப்படி நடத்த வேண்டும் என்பதை உங்கள் மூலம் கற்றுக் கொள்வேன்" என்றார். வெட்கப்படாமல் அவர் கேட்ட கோரிக்கை எனக்குப் பிடித்திருந்த காரணத்தால் சமாதானமாகி சிரித்துக் கொண்டே என் இருக்கைக்கு வந்தேன்.


அடுத்த ஒரு வாரம் முழுக்க என் பொழுதுகள் சற்று கரடுமுரடாகவே நகர்ந்தது.


நிறுவனம் உங்களுடையது. ஆனால் நிர்வாகம் என்னுடையது. உனக்குத் தேவையான லாபம் உன்னிடம் வந்து சேரும். நீ ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார் என்று சொல்லாமல் நான் என் போக்கிலேயே போக அப்பாவுக்கு உள்ளூற ஆத்திரம் இருந்தாலும் மகன் எனக்குச் சாதகமாக உருவாக்கிய பஞ்சாயத்தில் ஒவ்வொரு முறையும் வேண்டா வெறுப்பாக நான் நீட்டிய தாள்களில் கையெழுத்து போட்டு விட்டு நகர்ந்தார்.


நாட்கள் மாதங்களைத் துரத்தத் தொடங்கியது. முழுமையாக மூன்று மாதங்களில் ஆள் அம்பு சேனை என்று படைபட்டாளங்கள் உருவாக நிர்வாகத்தின் முகமே மாறத் தொடங்கியது. புதிய கிளைப் பிரிவுகள் உருவாக வங்கி தானாகவே வந்து உதவக் காத்திருக்கும் அளவுக்கு நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் விரைவாக நடந்தேறத் தொடங்கியது.

Oru Tholitchalaiyin Kurippugal

தினந்தோறும் காலை முழுக்க அலுவலகம் சார்ந்த வேலைகளை முடித்து மதியத்திற்கு மேல் தொழிற்சாலைக்குள் நுழைந்து விடுவேன். பலசமயம் நள்ளிரவு வரைக்கும் அங்கேயே இருக்க உற்பத்தி சார்ந்த பல விசயங்களில் வெளியிடங்களில் நம்பிக்கை வரும் அளவுக்குத் தொழிற்சாலையின் முகமும் மாறத் தொடங்கியது. எப்போதும் போல அன்றொரு நாள் காலைப் பொழுதில் அலுவலகத்தின் உள்ளே நுழைந்த போது தொழிற்சாலையின் பேக்டரி மானேஜர் பதட்டமாக என் மேஜைக்கு அருகே நின்று கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.


அவரிடம் முழு விபரத்தை கேட்ட போது ஆச்சரியம் அதிர்ச்சியாக மாறியது. காரணம் ஒரு பெண்ணால் மொத்த தொழிற்சாலையின் ஒழுக்கமே தலைகீழாகப் போகும் அளவுக்கு இருந்தது என்ற செய்தியைக் கேட்டதும் என் வாகனத்தில் அவரையும் உட்கார வைத்துக் கொண்டு தொழிற்சாலையை நோக்கி விரைந்தேன். 

by Swathi   on 06 Nov 2014  5 Comments
Tags: திருப்பூர் பின்னலாடை தொழில்   திருப்பூர் ஜோதிஜி   Tiruppur Textile Industry   Tiruppur Jothiji   Panakkaran   Thathuvam   பணக்காரன்  
 தொடர்புடையவை-Related Articles
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14
கருத்துகள்
10-Nov-2014 02:19:45 nagarajan said : Report Abuse
இன்றைய திருப்பூர் முதலாளிகளின் அற்பத்தனத்தை வெகுவாவே அறிந்துள்ளீர்கள் ,உங்களின் அனுபவங்களைபோலவே நானும் என் 35 வருட அனுபவத்தில் அன்றைய- இன்றைய முதலாளிகளை பார்த்திருக்கிறேன் .அடுத்தடுத்த அத்தியாயங்களை படிக்க ஆவலாயிருக்கிறேன்
 
10-Nov-2014 01:00:36 வினோத் said : Report Abuse
ஒரு தொழிற்சாலையின் குறிப்புக்கள். பேரை கொஞ்சம் மாத்துங்க... ஒரு கைதியின் டைரி
 
09-Nov-2014 21:37:41 Nilavan said : Report Abuse
நன்று
 
08-Nov-2014 19:36:21 டி.என் முரளிதரன் said : Report Abuse
தொழிலாளர்களின் சம்பளம் கொடுப்பதைக் கூட செலவாகக் கருதும் முதலாளிகளின் அற்ப மனதை படம் படித்துக் காட்டி விட்டீர்கள். செலவே இல்லாமல் லாபம் மட்டும் வேண்டும் என்று நினைக்கும் முதலாளிகளே அதிகம் இருக்கிறார்கள் போலும் .
 
07-Nov-2014 23:05:49 krishnamoorthy said : Report Abuse
முக்கிய பதவிகளில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் நிர்வாகத்தின் உண்மை முகம் தெரியும் .லாபத்தில் அவர்களின் குறிக்கோளும் - தொழிலாளர்கள் மேல் உள்ள அக்கறையும் சமமாக பயணித்த கம்பெனிகள் எப்படியும் காத்து இருந்தாவது ஒரு சமயத்தில் மேலே வந்து நின்றதுண்டு .ஆனால் இரண்டாவது விசயததில் கவனம் செலுத்தாத கம்பெனிகள் வெகு நாள் நீடித்தது இல்லை என்பது வேறு விசயம் .எப்போதும் முதல் இடத்தில் இருப்பவகள் அநுபவிக்கும் வலி எப்போதுமே யாருக்கும் புரியாது .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.