|
||||||||
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16 |
||||||||
![]() எந்திர மனிதர்கள். என் வாகனம் தொழிற்சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. எனக்குள் இனம் புரியாத கவலை இருந்தது. ஒரு நிறுவனத்தின் இதயம், மூளை என்பது தொழிற்சாலை மட்டுமே. ஒருவர் எத்தகைய திறமைசாலியாக வேண்டுமானாலும் இருக்கலாம். அசாத்தியமான திட்டங்களைக் கூடத் தீட்டலாம். ஆனால் அதைச் செயல்படுத்தி வெற்றி காண்பதில் தான் அவரின் நிர்வாகத்திறமை உள்ளது. நிர்வாகத்தில் காரணங்கள் சொல்ல முடியாது. செய்த காரியங்கள் தான் நம்மைப் பற்றி பேசும். உற்பத்தி தடையில்லாமல் நடக்க வேண்டும். உற்பத்தியான பொருட்கள் வெளியே தொடர்ந்து சென்று கொண்டிருக்க வேண்டும். சென்ற பொருட்களில் எந்தப் பிரச்சனையும் இருக்கக் கூடாது. இது சுழற்சி போலத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இப்படி நடக்கும் பட்சத்தில் தான் அலுவலகப் பணியென்பது அமைதியாக இருக்கும். தடம் தவறினால் தடுமாற்றம் உருவாகும் என்பது இயல்பு தானே? எனக்கும் நம்பிக்கை பூ பூத்திருந்தது. நாம் கடந்த மாதங்களில் உழைத்த உழைப்பு வீணாகவில்லை என்ற நம்பிக்கை உருவாகியிருந்தது. இனி காய், கனி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். பல படிகள் ஏறிவிட்டோம். இனி பயணம் சுகமாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன். இதோ இன்று தொழிற்சாலை நின்று போகும் அளவுக்கு ஏதோவொரு பிரச்சனை. ஆய்த்த ஆடைத் துறை மட்டுமல்ல நீங்கள் காணும் எந்தத் துறை என்றாலும் அலுவலக நடைமுறைகள் என்பதும் தொழிற்சாலை என்பதும் முற்றிலும் வேறாக இருக்கும். வெவ்வேறு முகங்கள் கொண்ட இரண்டையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தேன். அதிகப் படியான மனஉளைச்சல் இருந்தது. ஒவ்வொன்றும் ஒன்றைக் கற்றுத் தந்தது. கற்றதன் வழியே பல பாடங்கள் புரியத் தொடங்கியது. பணம் படைத்தவர்களின் திருவிளையாடல் ஒரு பக்கம். அன்றாடங் காய்ச்சிகளின் தினசரி வாழ்க்கை ஒரு பக்கம். இரண்டும் வெவ்வேறு கோணங்கள். ஒன்றில் மனிதாபிமானம் என்பதே இருக்காது. மற்றதில் மனிதாபிமானம் மட்டும் தான் மிச்சமாக இருக்கும். ஒன்றில் அந்தஸ்து என்பதற்காக எவ்வித கேவலத்தைப் பொருட்படுத்த தேவையிருக்காது. மற்றொன்றில் மானம் பெரிதென வாழும் கூட்டமாக இருக்கும். இந்த இரண்டு பிரிவைப் போல அலுவலக பணியாளர்களும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் உலகமும் வெவ்வேறாக இருக்கும்.
அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்குப் பேசப் பழக நிறைய வாய்ப்புண்டு. பல சமயம் சிந்திக்க நேரம் இருப்பதுண்டு. ஆனால் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் இயந்திரங்களுடன் தான் தினந்தோறும் உறவாட வேண்டும். மனிதத் தொடர்பு என்பது குறுகிய நேரம் மட்டுமே. குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் இருந்தாக வேண்டும். தங்களது எண்ணம், ஏக்கம், சோகம் அனைத்தையும் உள்ளுக்குள்ளே பூட்டி வைத்திருக்கப் பழகியிருக்க வேண்டும். எந்தவொரு தனியார் நிர்வாகத்திலும் அலுவலக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்தார்கள் என்ற செய்தியை நீங்கள் குறைந்த அளவில் தான் வாசித்திருக்க முடியும். ஆனால் செய்தித்தாளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் என்பது அன்றாட செய்தியாகவே வந்து கொண்டிருக்கும். காரணம் தொழிலாளர்களின் மன உளைச்சல் என்பது எழுத்தில் எழுதி புரிய வைக்க முடியாத ஒன்று. திடீரென வெடித்துக் கிளம்பும் போது அது அடங்க நேரம் காலமாகும். இப்படித்தான் பலவற்றையும் யோசித்துக் கொண்டே போக்குவரத்து நெரிசலை வெறுப்புடன் பார்த்துக் கொண்டு வாகனத்தை நகர்த்திக் கொண்டிருந்தேன். நாங்கள் சென்று கொண்ருந்த வாகனம் போக்கு வரத்து நெரிசலில் ஊர்ந்து கொண்டிருந்தது. திருப்பூரின் முக்கியச் சாலையின் வழியே செல்லும் போது போக்குவரத்து நெரிசலைக் கடந்து நாம் நினைக்கும் இடத்திற்குச் செல்ல கூடுதல் நேரம் வேண்டும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது என்னைப் போன்றவர்களுக்கு அலுப்பைத் தரக்கூடியது. இடைவிடாத அலைபேசி தொடர்புகள் ஒருபுறம். மற்றொரு புறம் பயணங்கள் பாதிநேரத்தை விழுங்கி விடும் அச்சமும் சேர்ந்து மன உளைச்சலை உருவாக்கும். நாம் அன்றைய பொழுதில் செய்ய வேண்டிய முக்கியக் காரியங்கள் என்று பட்டியலிட்டு வந்தவற்றைச் செய்ய முடியாமல் போய்விடும். உடம்பில் ஆரோக்கியம் இருக்கும் வரைக்கும் அலைவது என்பது மனிதர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும். வயதாக உடம்பு ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் ஒவ்வொரு பழக்கமும் பல காத தூரம் விலகிக் கொள்ளத் தொடங்கும். என்னுடன் பயணித்த பேக்டரி மேனேஜர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். எதிரே இருப்பவர் தாம் பேசுவதை விரும்புகின்றாரா? இல்லையா? என்பதை உணராமல் பேசிக் கொண்டே இருக்கும் நபர்கள் பெரிய இடைஞ்சலாக மாறி விடுவார்கள். ஆனால் அவர் பதட்டத்துடன் இருந்தார். தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் இருந்தார். எந்தவொரு தனியார் துறையிலும் முக்கியப் பதவியில் தொடர்ந்து இருப்பது கடினமே. அதிலும் அந்தப் பதவியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினம். உழைப்பு மட்டுமே போதாது. மனிதர்களைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இடம், பொருள், ஏவல் பார்த்து ஒவ்வொரு நிமிடமும் தம்மைச் சோர்வில்லாது புதுப்பித்துக் கொள்ளப் பழகியிருக்க வேண்டும். உணர்ச்சிகளை உள்ளடக்கி வைத்திருக்கத் தெரிந்திருக்கவேண்டும். எதற்காகச் சீறுவார்? எப்போது சிரிப்பார்? என்று எதிரே இருப்பவர் உணர முடியாத நிலையில் இறுக்கமாக வாழப் பழகியிருக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக எத்தனை துரோகங்களை சந்தித்து இருந்த போதிலும் மனிதர்களின் மேல் நம்பிக்கை வைத்திருக்க தெரிந்திருக்க வேண்டும். இவரிடம் மனிதாபிமானம் உண்டு என்ற நம்பிக்கையை மற்றவர்கள் மனதில் உருவாக்கத் தெரிந்துருக்க வேண்டும்.
முக்கியப் பதவிகளில் இருப்பவர்களின் உண்மையான திறமையை நெருக்கடியான சூழ்நிலை தான் உணர்த்தும். அதுபோன்ற சமயங்களில் அவர்கள் அந்தப் பிரச்சனையை எப்படிக் கையாள்கின்றார்கள் என்பதில் இருந்து தான் நம்மால் புரிந்து கொள்ள முடியும். பேக்ட்ரி மேனேஜர் பயந்து போயிருந்தார். என் குணத்தை நன்றாகப் புரிந்தவர். ஒருவருக்குக் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதி இல்லை என்றால் என் ஆதரவு இருக்காது என்பதை நன்றாக உணர்ந்தவர். நாகரீகமாக அந்தப் பதவியில் இருந்து நகர்த்தி விடுவேன் என்பதை உணர்ந்த காரணத்தினால் அவர் அவசரமாக எல்லாவற்றையும் பேசிக் கொண்டே வந்தார். குறிப்பாக அவர் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பு, படும்பாடுகள், அவரின் விசுவாசத்தின் எல்லை என்பதனை அடுக்கிக் கொண்டே வந்தவர் என் திறமைகளைப் புகழத் தொடங்கினார். என் சாதனைகளை பட்டியலிடத் தொடங்கினார். என்னைப்பற்றி என்னிடமே பேசத் தொடங்கும் போது சுதாரித்துக் கொண்டேன். பேச்சை வேறு பக்கம் திருப்பி விட்டுத் தூரத்தில் கவனித்தேன். தொழிற்சாலை கண்களுக்குத் தெரியும் அளவில் நெருங்கிக் கொண்டிருந்தோம். தொழிற்சாலையின் வாசலில் ஒரு பெரும் கும்பல் கூடியிருந்ததைக் கவனிக்க முடிந்தது. என் மனதிற்குள் இனம் புரியா கோபம் எட்டிப் பார்த்தது. என் கோபம் பேக்ட்ரி மேனேஜர் மேல் திரும்பியது. "நீங்க ஒரு மணி நேரம் வெளியே வந்து திரும்பி போவதற்குள் தொழிற்சாலை உங்க கட்டுப்பாட்டுக்குள் இல்லை. நீங்க எப்படி நிர்வாகம் செய்றீங்கன்னு எனக்கு நன்றாகப் புரிகிறது என்றேன்? " அவருக்கு என் கோபம் புரிந்து விட்டது. அவரும் தொழிற்சாலையின் வாசலை கவனித்து பதட்டமானார். ஒரு நாட்டுக்குள் நுழைபவருக்கும் அந்த நாட்டின் தகுதி என்பது விமான நிலையத்திலேயே தெரிந்து விடும். அங்குள்ள நடைமுறைகளை வைத்தே மொத்த நாட்டின் தகுதியை எடை போட்டு விட முடியும். அங்கே கிடைக்கும் வரவேற்பு வைத்தே அரசாங்கத்தின் நிர்வாகத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். வந்து இறங்கியவனிடம் முடிந்தவரைக்கும் கறந்து விடலாம் என்ற எண்ணம் கொண்ட அதிகாரிகள் மூலம் மொத்த அரசு சார்ந்த துறையின் அவலட்சணத்தைப் புரிந்து கொள்ள முடியும். இதைப் போல ஒரு தொழிற்சாலையின் கட்டுப்பாடு என்பது நுழைவாயில் காட்டிக் கொடுத்து விடும். முகப்பில் இருப்பவர்களின் நேர்மையான எண்ணங்களும், பிடிவாதமான ஒழுக்கமும் தான் உள்ளே பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குணாதிசியத்தை நமக்குப் புரிய வைக்கும். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமான தீவு. ஆனால் ஒரு இடத்தில் அவர்களை ஒழுங்குபடுத்தி ஒரே நிலையில் கொண்டு வருவதென்பது சாதாரண காரியமல்ல. தனியாக இருக்கும் வரைக்கும் வரை அவன் ஒரு தனி மனிதன். அதுவே மொத்த கூட்டத்தில் சேர்ந்து வேண்டாத வேலைகள் செய்யத் தொடங்கும் போது அவன் மனதளவில் மிருகமாக மாறிவிடுகின்றான். சட்டம் ஒழுங்குக்கு சவால் விடுக்கத் தொடங்குகின்றான். இந்தக் கூட்டத்தை செக்யூரிட்டிகளுக்கு கையாளத் தெரிந்திருக்க வேண்டும். எங்கே தட்டினால் எப்படி மொத்தக் கூட்டமும் கலையும் என்பதை உணர்ந்து செயல்பட்டே ஆக வேண்டும். ஒவ்வொரு ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் செக்யூரிட்டிகள் என்றழைக்கப்படும் காவல் கூட்டம் என்பது தனியுலகம். தொடக்கத்தில் இங்குள்ள ஒவ்வொரு நிறுவனத்திலும் யாரோ ஒரு வயதான பெரியவரை அதுவும் சொந்தக்காரர் என்ற தகுதி படைத்தவரை பெயருக்கென்று வாசலில் அமர வைத்திருப்பார்கள். நாள் முழுக்க அவர் வாசலில் உட்கார்ந்திருப்பது மட்டுமே வேலையாக இருக்கும். ஆனால் இன்று இதற்காகத் தனிப்பட்ட செக்யூரிட்டி ஏஜென்சி வரைக்கும் இந்தத் துறையில் தற்போது வளர்ந்து கொடி கட்டி பறக்கின்றார்கள். சீருடைகள் அணிந்து, அதிரடி விரைவுப் படையினர் போலப் பல பெரிய நிறுவனங்களில் அசாத்தியமான திறமை சாலிகளுடன் பணிபுரிகின்றார்கள். ஒரு நிறுவனத்தின் காவல் சார்ந்த அனைத்து பிரிவுகளையும் பார்க்கின்றார்கள். நானும் இதைப் போல ஒரு குறிப்பிட்ட வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்த போது முதலாளி மறுத்து விட்டார். காரணம் மாதம் இதற்காக 50000 ரூபாய்ச் செலவாகும் என்ற நிலையில் இருந்தது. காசுக்கேத்த பணியாரம் என்பது போல வேறு சிலரை ஏற்பாடு செய்து இருந்தேன். நிர்வாகத்தின் ஒவ்வொரு இடத்திலும் காவல் கூட்டத்தை பணியில் அமர்த்தியிருந்தேன். முதலுக்கு மோசமில்லை என்கிற நிலையில் தான் இருந்தார்கள். ஆனால் இன்றோ நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்ததைப் பார்க்க வேண்டியதாக உள்ளது. பல படிகள் ஏறிவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஒரே இடத்தில் இருந்து கொண்டு மொத்த நிர்வாகத்தையும் நடத்தி விடலாம். அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து விடுவோம் என்ற எண்ணத்தில் பெரிய அடி விழுந்தது போல இருந்தது. என் வாகனத்தின் சப்தத்தை உணர்ந்து கொண்டவர்கள் மத்தியில் சிறிய சலசலப்பு உருவாகி கூடியிருந்தவர்கள் பக்கவாட்டில் ஒதுங்கத் தொடங்கினர். என் வாகனம் உள்ளே நுழைந்த போது ஏற்றியிருந்த கண்ணாடி வழியே அங்கே நின்று கொண்டிருந்த நபர்களை உற்றுக் கவனித்தபடியே பேக்டரி மேனேஜரை அங்கேயே இறக்கி விட்டு உள்ளே என் அறைக்குச் சென்றேன். கூடவே தலைமைப் பொறுப்பில் இருந்த செக்யூரிட்டியை என் அறைக்கு வரச் சொல்லியிருந்தேன். அவரிடம் விசாரித்து முடித்து விட்டு எனக்கு நம்பிக்கைக்கு உகந்த சிலரை வரவழைத்து விசாரித்தேன். இது தவிர குறிப்பிட்ட செய்யூரிட்டியை மட்டும் என் அறைக்கு வரச் சொல்லி மொத்த விபரங்களையும் விசாரித்த போது பேக்டரி மேனேஜர் சொன்ன தகவல்களுக்கு மாறானதாக இருந்தது. கடைசியாக சம்மந்தப்பட்ட பெண்ணை என் அறைக்கு வரவழைத்தேன். அந்தத் தேவதையின் தரிசனம் எனக்குக் கிடைத்தது. குறிப்புகள் தொடரும்... |
||||||||
by Swathi on 13 Nov 2014 5 Comments | ||||||||
Tags: திருப்பூர் பின்னலாடை தொழில் திருப்பூர் ஜோதிஜி Tiruppur Textile Industry Tiruppur Jothiji Iyanthira Manitharkal Iyanthiram எந்திர மனிதர்கள் | ||||||||
கருத்துகள் | |||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|