LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...

வலைத்தமிழ் ஆசிரியர் குழு :


"ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" தொடர் வலைத்தமிழ் இணையதளத்திற்கு முதல் தொடர் என்கிற ரீதியில் எங்களுக்கு இது முதல் அனுபவம். சில வாரங்களுக்கு முன்புதான் ஆரம்பித்ததுபோல் தோன்றினாலும் இருபது வாரங்களைக் கடந்து வாசகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் தொடராக வெற்றிகரமாக வெளிவருவதற்கு முழுமுதல் காரணம் திருப்பூர் ஜோதிஜியின் எழுத்து நடை மற்றும் தொடருக்கு ஏற்ற வண்ண வண்ண படங்கள் ஆகியவையே என்று கருதுகிறேன்.  


ஒரு தொழிற்சாலை குறித்து எழுதப்பட்ட இந்தத் தொடருக்கும் வாசகர்களிடம் கிடைத்த ஆதரவும், அவர்கள் வழங்கிய கருத்துரையும் எங்கள் தளத்திற்கு சிறப்பான அங்கீகாரத்தை தந்தது என்றால் அது முற்றிலும் உண்மையாகும்.  எந்தத் துறையைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்.  ஆனால் வாசகர்கள் படிக்க விரும்பும் நடையில், எளிய மொழியில் எழுதினால் அது வெற்றியைப் பெறும் என்பதற்கு இந்தத் தொடர் முக்கிய உதாரணமாகும்.


இந்தத் தொடர் ஆரம்பித்தது முதல் இன்று வரை பல்வேறு ஆலோசனைகளை, வாசகர்களின் மன ஓட்டங்களை அறிந்து, தன் அனுபவங்களைப் பகிந்துகொண்டு வலைத்தமிழ் ஆசிரியர் குழுவினருடன் கைகோர்த்துப் பயணித்தது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம்.


ஜோதிதியின் ஆலோசனையின் பேரில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களைத் தளத்தில் செய்தோம், இன்னும் ஒருசில மாற்றங்கள் விரைவில் முடிய இருக்கிறது. இது வலைத்தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


"ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" தொடர் மாடசாமி, ரம்யா, ராஜா போன்ற பாத்திரங்கள் வழியே தங்களின் வலியை, வாழ்க்கையை மிக நேர்த்தியாகப் பதிவு செய்து இன்றைய எதார்த்த நிலையை ஆசிரியர் ஜோதிஜி படம்பிடித்துக் காட்டியுள்ளார். ஒவ்வொரு தொழிலும் உழைப்பவர்கள் மட்டும் ஒரு பக்கமும், உழைப்பை உறிஞ்சு வாழ்பவர்கள் மறுபக்கமும் இருப்பது இயல்பு தானே? இதைத்தான் இந்த பாத்திரங்கள் வழியே ஜோதிஜி படம் போட்டு காட்டியுள்ளார்.


இடையிடையே ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாழ்க்கை சார்ந்த பல்வேறு குறிப்புகள், முதலாளிகளின் மனோபாவம், தான் சந்தித்த அனுபவங்கள் வழியே உணர்ந்து எழுதிய மேற்கோள்கள் போன்றவற்றை மிக நேர்த்தியாக எழுதியுள்ளார்.


ஒவ்வொரு தொழிலும் பணத்தைத்தான் முதன்மை படுத்துகின்றது. பணம் தங்கள் வாழ்க்கையைச் சிறப்படைய வைக்கும் என்று நம்புகின்றார்கள். ஆனால் எத்தனை பணம் சேர்ந்தாலும் எவரும் நிம்மதியாக இருப்பதில்லை. அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? என்பதனை தனக்குரிய பாணியில் தான் பார்த்த தொழில் சமூகத்தை வைத்து பலவித கருத்துக்களைச் செறிவாக வழங்கியுள்ளார்.


எல்லா உழைப்புக்குப் பின்னாலும் வெற்றி கிடைத்து விடுவதில்லை. குறிப்பிட்ட உழைப்பைத் தவிர வேறு எதற்கும் இங்கே எளிதில் அங்கீகாரம் கிடைத்து விடுவதில்லை. ஏன்? அதற்கான காரணங்கள் என்ன? என்பதனை தன்னை உதாரணமாகக் கொண்டு தான் பெற்ற தோல்வியை வெட்கப்படாமல் எடுத்துரைத்து அதன் வழியே புதிய கருத்துக்களை வழங்கியுள்ளார். இவர் இந்தத் தொடரில் எழுதியுள்ள பல நிகழ்வுகளில் நேர நிர்வாகம் குறித்து எழுதப்பட்ட பல சம்பவங்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடியது.


மொத்தத்தில் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" ஆயத்த ஆடைத்துறையை மட்டும் விவரித்துச் செல்லாமல் இதன் மூலம் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு தொழிற்சாலையைத் தாண்டிய கருத்துக்களாக விளங்குகிறது.


ஒவ்வொரு வாரமும் பதியப்படும் வாசகர்களின் கருத்துக்கள் இந்தத் தொடரின் வெற்றியை உறுதிசெய்தது. இந்தத் தொடரைப் தொடர்ந்து படித்துவிட்டு அமெரிக்காவில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் அழைத்து ஜோதிஜியின் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" போல், தமிழகக் கண்டுபிடிப்புகள், குறிப்பாக ஜி.டி.நாயுடு குறித்துத் தான் ஒரு தொடர் எழுத வலைத்தமிழில் வாய்ப்பிருக்குமா? என்று எங்கள் குழுவினரிடம் கேட்டார்.


மேலும் ஜோதிஜியின் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" என்னை வெகுவாகக் கவர்ந்தது என்று குறிப்பிட்டார்.. இதுபோல் இங்கே இந்தத் தொடர் வெளியானது முதல் எங்களுக்குப் பலதரப்பட்ட இடங்களில் இருந்தும், பல உயர்பதவிகளில் வகிப்பவர்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான உற்சாகமான பாராட்டுக்கள் வந்து கொண்டே இருந்தன.


ஜோதிஜி கடந்த 2009 முதல் 'தேவியர் இல்லம்' என்ற வலைபதிவின் மூலம் பலதரப்பட்ட விசயங்களைக் குறிப்பாகத் தற்காலச் சமூகம் குறித்து, தான் கடந்து வந்த வாழ்க்கை குறித்து எழுதி வருகின்றார்.


தன் அனுபவங்களை எவ்வித பாசாங்கு இல்லாத நடையில் பட்டவர்த்தனமாக எழுதுவது இவரின் சிறப்பாகும். தான் பணிபுரியும் ஆயத்த ஆடைத்துறையில் உள்ள அக்கிரம நிகழ்வாகட்டும், ஈழம் சார்ந்த நாம் அறியாத தகவலாகட்டும் எதையும் மேம்போக்காக எழுதாமல் தான் உணர்ந்தவற்றை, தன் மொழியில் எழுதிவிட்டு நகர்வது இவரின் சிறப்பு.


தான் எது எழுதினாலும் அதில் ஒரு சமூக நேர்மை, அன்றாட வாழ்வியலில் இன்றைய நெருக்கடிகள் குறித்துப் பதிவு செய்துவரும் ஜோதிஜி, இதில் தமிழகத்தின் இன்றைய சூழலில் இயங்கும் ஒரு தொழிற்சாலையின் நிலை, அதன் உட்கட்டமைப்பு மற்றும் சவால்கள், தொழிற்சாலையை நடத்தும் முதலாளிகளின் நிலை, தொழிலாளர்களின் நிலை, அரசு மற்றும் போட்டியாளர்களின் சவால்கள் என்று பல்வேறு கோணத்தில் இந்தத் தொடரை செதுக்கியுள்ளார்.


இவர் இதற்கு முன்னால் "டாலர் நகரம்" என்றொரு புத்தகத்தின் வாயிலாகத் திருப்பூர் குறித்துப் பொதுவான பார்வையைப் பதிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வலைத்தமிழ் இணைய இதழில் திருப்பூருக்குள் உள்ள தொழிற்சாலையைக் குறித்து எழுதியிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்று. பாகம் ஒன்று பாகம் இரண்டு என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.


இது தொழிற்சாலைகள் குறித்த ஆவணம், குறிப்பாகத் திருப்பூர் ஆடைத் தொழில் குறித்த முழுமையான ஆவணம். இது ஒரு நூலாக வெளிவரும்போது இந்தத் துறையில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள், தொழில் ஈடுபட்டு வரும் தொழில்முனைவோர் என்று பலருக்கும் பயனளிக்கும். இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பது தமிழ் தாண்டி அனுபவங்கள் சென்று சேர வழிவகுக்கும். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விரைவில் வெளியிட வலைத்தமிழ் குழு இசைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..


தொடர் நிறைவடையும் இந்தத் தருணத்தில் இந்த முதல் தொடரை எழுதிய ஜோதிஜிக்கு வலைத்தமிழ் ஆசிரியர் குழு சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதன்மூலம் வலைத்தமிழ் ஆசிரியர் குழுவிற்குக் கிடைத்த அனுபவமும், ஜோதிஜியின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வரும் இணைய நண்பர்களின் ஒத்துழைப்பும், இத்தொடர் மூலம் தானும் தன் அனுபவங்களைப் பகிர வாய்ப்பிருக்குமா என்று கேட்டுவரும் எழுத்தாளர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்..


நன்றி..

ஆசிரியர் குழு 

 வலைத்தமிழ்.காம்


***********

கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர்.


”திருப்பூர் டைரி குறிப்புகளாக..”   ஆகஸ்ட் 1ல் துவங்கிய ஜோதிஜியின் உள்மன பயணம் டிசம்பர் 12ல் வெகு அற்புதமாக நிறைவடைந்து விட்டது .


இங்கு தோற்றவர்கள் , தவறாக ஜெயித்து விட்டு அதை தக்க வைத்துகொள்ள தெரியாமல் ,பேராசையால் அகலகால் வைத்து காலத்தின் நீண்ட எல்லைக்குள் அடையாளம் தெரியாமல் கரைந்து போனவர்கள் கடின உழைப்புக்கு மதிப்பு பெறாமல் விரக்த்தியில் நஷ்டபடுத்துபவர்கள் போன்ற பலரையும் பற்றி தன் பார்வையில் எடை போடும் களமாக இந்த தொடரை செதுக்கி இருக்கிறார் ஜோதிஜி.


முதல் போட்ட முதலாளிகள் மனோபாவத்தில் தொடங்கி ஒவ்வொறு  துறையின் பணி, அதன் பணிச்சுமை ,அதில் பணிபுரியும் தொழிலாளிகளின் மனோ நிலை அவர்களை அணுகும் முறை மேலும் திருப்பூர் பற்றி சிறிதும் அறியாதவகள் அல்லது திருப்பூரில் பணிபுரிய வேண்டும் என்ற கனவுகளை சுமந்து கொண்டு இருபவர்களாக்கான  ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்திர்க்கான ”கையேடு”  போல  வெகு அற்புதமான தனது எழுத்து நடை அளுமைதிறத்தால் சொல்லி இருக்கிறார். தொடருக்கு  சுவாரசியம் சேர்க்க ஓர் கதைக்கு, திரைகதை முக்கியம் என்பதை போல சில உண்மை பாத்திரங்களை எடுத்து அழகாக தொடரை நகர்த்தி இருக்கிறார் .


தனது கடந்த 22 வருட அனுபவ பாதையில் கற்றதும் பெற்றதுமாக இந்த துறையில் தனது கடின உழைப்பை உரமாக்கி இதுதான் திருப்பூர் என்ற இங்குள்ள தொழில் அமைப்பை கூர்ந்து கவனித்து அதோடு சளைக்காமல் ஓயாமல் ஓடி , அதன் ஆழத்தை தொட்டு அதில் கண்டெடுத்த த்னது அனுபவ முத்துக்களை சரமாக்கி வருங்காலதை திருப்பூரில் வளமாக்கிக் கொள்ள  விரும்புபவ்ர்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஜெயிக்கலாம் என்று தனது வாழ்வையே பணயமாக்கி சொல்லியிருக்கிறார் ’உன்னால் முடியும் தம்பி’ என்பது எம் எஸ் உதயமூர்த்தி வாக்கு.ஆனால் ஜோதிஜியின் வாக்கியம் ”உன்னாலும் முடியும் தம்பி “ என்பதுதான் அது என்பதாக தந்து இருக்கிறார் .பொதுவாக ஆன்மீகத்தில் மட்டுமல்ல பல இடத்திலும் சொல்லு ஒரு வழக்கு உண்டு அது ”கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்”ஆனால் இவர் தான் கண்ட நியாய அநியாயங்களை  முடிச்சுகளை தனது நம்பிக்கை அறிவால் அவிழ்த்து ,அதன் பலனையும் விளைவையும் விவரித்து  சொல்லி இருகிறார் .


இங்கு பல கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு சில வெளிநாட்டிலிருந்து ஆர்டர்  கொடுக்கும் கம்பெனிகளில் வார மற்றும் மாதாந்திர தொழிலாளர் சட்ட உரிமைகளாவது இருக்கிறது ஆனால் அந்த கம்பெனியில் பணிபுரியும் அழுவலக (Staffs) பணியாளர்கள் நிலைமை முற்றிலும் அடிமையானது .மனித உரிமைகள் இங்கு காசுக்காக பிழியப் படுவது பற்றி அவர் ஏனோ மிக குறைவாகவே சொல்லி இருக்கிறார் என்பது ஆதங்கம் .


பதினைந்து வருடமாக இந்த ஊரின் அலை வேகத்தோடு பயணித்து கொண்டு இருக்கும் நான் இந்த பதிவுகளை பற்றி சொல்வது மிக பெரிய விசயமாக இருக்காது ஆனால் திருப்பூருக்கு சம்பந்தமில்லாமல் இந்த பதிவுகள் மூலம் மட்டுமே 20 வாரங்கள் வலைத்தமிழ் மூலம் படித்து பயணித்தவர்கள் சொல்லும் கருத்தே இங்கு ஆசிரியர் , இந்த பதிவுக்களுக்காக எடுத்துக் கொண்ட முயற்சியின் வெற்றியின் எல்லைக் கோடாக இருக்கும் .  

 

கிருஷ்ணமூர்த்தி. திருப்பூர்

வலைபதிவர்.(முதல்கோணல்) http://myowndebate.blogspot.in/2014/11/blog-post.html


**********

சிவகுமார் நீலமேகம்


நானொரு வலைப்புழு. வலையில் எது கிடைத்தாலும் படித்து விடுவேன். கொஞ்சம் ஆர்வமுடன் படிக்கத்தக்க நடையில் இருக்க வேண்டும். அவ்வளவு தான். அவ்வகையில் ஜோதிஜியின் வலைப்பதிவுகளைத் தொடர்ச்சியாக படிப்பதுண்டு. தேவியர் இல்லம் வலைபதிவில் எழுதப்பட்ட ஈழம் மற்றும் திருப்பூர் மிகப்பெரும் தகவல் சுரங்கங்கள்.  அவ்வப்போது இவர் எழுதும்  காரைக்குடி உணவு சிந்திக்கக் கூடியன. இவர் காரைக்குடி உணவகத்தில் எழுதியுள்ள சத்து மாவை எங்கள் குடும்பத்தில் தயாரித்து தினமும் சாப்பிட்டு வருகின்றோம்.  நன்றிகள் பல.


அவ்வகையில் மற்றுமோர் திருப்பூர் படைப்பாக தொழிற்சாலை குறிப்புகள் என்ற இத்தொடர் வலைத் தமிழில் வெளி வந்த போது  துவக்கத்தில் இது மற்றொரு "டாலர் நகரமோ" என்ற முன் முடிவுடன் படிக்கத் துவங்கினேன். இவரே கதை சொல்லியாகவும் வருவதால் தன்னைப் பற்றிய குறிப்புகளாக இருக்குமோ என்று எண்ணி விட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக குறிப்புகளில் ஆழ்ந்தேன்.


இத் தொடரில் ஆசிரியர் ஒரு ஏறத்தாழ கைவிடப்பட்ட நிலையில் இருந்த தொழிற்சாலையை எவ்வாறு தன் நிர்வாகத் திறனால் மேம்படுத்துகிறார் என்பதை சம்பவங்கள், குறிப்புகள், தொழிலாளர்கள் மூலமாக கூறுகிறார்.சம்பவங்கள் என்று பார்த்தால் மிகச் சிலவே. ஆனால் அதன் ஊடாக தரும் தகவல்கள் மிகப்பெரும் களஞ்சியம். நமக்குத் தெரிந்த ஒரு நகரத்தின் மற்றொரு பக்கத்தினை மிகவும் நேர்த்தியாக கவனமாக காண்பித்துள்ளார். ஒரு நகரத்தின் வாழ்க்கைத் தரத்தினை அம் மக்களின் வாழ்வியலை (நல்லதோ - கெட்டதோ) எழுத அத்துறையை மிகவும் நேசிப்பவரால் மட்டுமே முடியும். இவருக்கு இது சாத்தியப்பட்டிருக்கிறது.


போர் அடிக்கக் கூடிய டெஸ்ட் மாட்ச்சில் தொடர்ச்சியாக 6 - 4 அடிப்பது போல் ஒவ்வொரு பகுதியிலும் விளாசியுள்ளார். துறை சார்ந்த விஷயங்களை இவ்வளவு எளிமையாக தன்னால் விவரிக்க முடியும் என்பதை காட்டியுள்ளார்.


இத்தொடரின் ஒவ்வொரு பகுதியும் இத்துறையில் இருப்பவர்களுக்கும் புதிதாக வருபவர்களுக்கும் ஒரு சிறப்புக் கையேடு.


2009ல் இருந்து இவரின் தேவியர் இல்லம் பதிவுகளைப் படித்து வருகிறேன். அவ்வப்போது பின்னூட்டமும் இடுவதுண்டு. மிகச்சிறப்பாக சுவாரஸ்ய நடையில் எழுதுகிறார். அவன் அருள். இவ்வளவு எழுதுவதற்கு எவ்வாறு நேரம் கிடைக்கிறது. இத்தொடரை படிக்குமுன் தாங்கள் ஒரு உயர் பதவியில் நேரம் கிடைக்கக் கூடிய இடத்தில் பணி புரிவீர்கள் என்று எண்ணியிருந்தேன்.


இத்தொடர் அந்த அனுமானங்கள் உடைத்தெரிந்து விட்டது. துறை சார்ந்த தங்கள் விளக்கங்கள் தொழிலாளர்கள் சார்ந்த நடவடிக்கைகள் (தட்டிக் கொடுத்து வேலை வாங்குதல்) மற்றும் முதலாளியின் முட்டாள் தனங்களை தவிர்த்தல்...


உண்மையிலேயே இவருக்கு நேர நிர்வாகம் மிகச் சிறப்பாக கைவரப் பட்டிருக்கிறது.


முக்கியமாக... தொடரில் வரும் பெண் (அவள் பெயர் ரம்யா) மனதில் நிற்கிறாள்.


சிவகுமார் நீலமேகம்.

https://plus.google.com/110527960579111333990/posts

 

**********

டி.என்.முரளிதரன்

 

அங்காடிக் கண்ணாடிகளில் அழகாய் தவம் இருந்து நம் உடலை அடையும் வரை நாம்  அறியாத ஒவ்வொரு பகுதியையும்  நம் கண் கொண்டு வந்து நிறுத்தி பிரமிப்பூட்டுகிறார்.
இத் தொடரில் முதலாளிகளின் சுயநலத்தை  தோலுரித்திக் காட்டுவதோடு, தன்னால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டலும் ஏன் தானே பாதிப்படைந்தாலும் வறட்டு கெளரவங்கள் ஆடம்பரங்கள் இவற்றை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளை சாட சிறிதும் தயங்கவில்லை  ஜோதிஜி.     
அவர் பணியாற்றிய நிறுவனங்களின் செயல்பாடுகள் தவறாக இருந்தபோது அவற்றை ஆணவம் மிக்க முதலாளிகளுக்கு அஞ்சாமல் சுட்டிக் காட்டியது  ஜோதிஜியின்  தன்னம்பிக்கையும் உறுதியையும்  வெளிப் படுத்துகிறது. 
முதலாளிகளின் பலவீனங்களை போட்டு உடைத்திருக்கும் அதே வேளையில்  அனைத்தையும் வெளிப்படையாக  சொல்ல முடியாது என்பதால்  சிலவற்றை தொடர்வதை  சாமார்த்தியமாக தவிர்த்திருக்கிறார்.  இத் தொடரில் குறிப்பிடப் பட்டிருப்பவை  அனைத்தும் அவரது சொந்த அனுபவங்கள். நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும்? என்று சொல்வதோடு எப்படி இருக்கக் கூடாது? என்பதற்கும் உதாரணங்கள் நிறைந்திருக்கின்றன இக் குறிப்புகளில்.
இந்தத் தொடரை ஒரு  நிர்வாகப் பாடமாகக் கொள்ளலாம். இங்கு வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. துரோகிகள் வஞ்சகர்கள், மாடாய் உழைத்துத்  தேயும்  உழைப்பாளிகள், சோம்பேறிகள் என அனைத்து தரப்பினரைப் பற்றியும் முதலாளி அறிந்திருக்கிறாரோ இல்லையோ நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்  என்ற  அனுபவ நிர்வாகப் பாடம் பலருக்கும் பயனளிக்கக் கூடியது .
ஆயத்த ஆடைத் தொழிலில்,  அயன் செய்தல், பிசிறு நீக்குதல் உட்பட சிறுசிறு பணிகள் கூட எவ்வளவு முக்கியமானவை  என்பதையும் விடாமல் கூறி இருக்கிறார். எதற்கு அதிக கவனம் கொடுக்கப் படவேண்டும் என்பதும் விவரிக்கப் பட்டிருகிறது . இவ்வளவு விஷயங்கள் இதில் உள்ளதா? என ஆச்சர்யப் பட வைக்கிறார் ஜோதிஜி 
அவர் அதிகாரப் பதவியில் இருந்தபோதும் தொழிலாளர்களின் சுக துக்கங்களை அருகில் இருந்து உணர்ந்தவர்  என்பதும்  அவரது எழுத்து உணர்த்துகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய சலுகைகள் தவறாமல் கிடைக்க வேண்டும் என்பதை முதலாளிகளிடம் வற்புறுத்தத் தவறாத மனிதாபிமானம் மிக்க நிர்வாகியாக இருந்ததுமே அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கும் என்பதை உணரமுடிகிறது.
பெரிய நிறுவனங்கள் அதனை சார்ந்து இருக்கும் சிறிய நிறுவனங்கள் இவற்றின் பணி என்ன என்பதையும் இவற்றின் வளர்ச்சி வீழ்ச்சி இவற்றைப்பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறார் ஜோதிஜி .   
இந்த தொழிற்சாலைக் குறிப்புகள் மூலம் நான் அறிந்து  கொண்ட ஒன்று  தொழிலாளிகள்  நிர்வாகிகள் முதலாளிகள் என்ற மூன்று தரப்பினரும் முறையான ஒருங்கிணைப்பின்றி வெவ்வேறு  நிலைகளில்   செயல்படுகின்றனர்.  ஒருவரை பற்றி ஒருவர் கவலைப் படுவதில்லை. 
ஓருவரின் மகிழ்ச்சியும் துன்பமும் வளர்ச்சியும் வீழ்ச்சியும்    இன்னொருவரிடத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதாபிமானத்திற்கு இங்கு அவ்வளவாக இடம் இல்லை. திறமையான ஒருவர் பணிபுரியும் நிறுவனத்தை விட்டு வெளியே போனாலும் அதை பொருட்படுத்துவதில்லை. காலத்திற்கேற்ப இத்தொழிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார் ஜோதிஜி.
விஞ்ஞான தொழில்  நுட்ப வளர்ச்சி காரணமாக ஏராளமான இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டாலும் மனித உழைப்பின் தேவையும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக  இயந்திரங்கள் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன இவற்றின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக் கணக்கான பொறியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இவற்றில் அவர்களின் பங்கு சிறிதும் இல்லை என்ற ஆதங்கத்தின் மூலம்  கல்வி முறையின் குறைகளையும சுட்டிக் காட்டுகிறார். ஒரு முறையற்ற தொழில் நகரமாக திருப்பூர் விளங்குகிறது என்பதை தெளிவாக நமக்கு புரிய வைக்கின்றார். 
திருப்பூருக்கு வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு வருபவர்களை வரவேற்று வாழ வைக்கும்  இந்நகரம் தொழில்சார்ந்து  முறைப்படுத்தப் படவேண்டும் என்ற விருப்பம் இவரது எழுத்துகளில் தெரிகிறது.   இந்தத் தொடர் முழுதும் தொழிற்சாலையில் பணிபுரியும்  மனிதர்களைப் பற்றியும் அவர்கள் சார்ந்த உளவியல் குறித்தவற்றை விவரித்துக் கொண்டே போகிறார் . இந்த தொடரில் தொழிற்சங்கங்கள் பற்றி எந்தக் குறிப்பும் காணப் படவில்லை என்று நினைக்கின்றேன். இருபது பகுதிகளைக் கொண்ட இத் தொழிற்சாலைக் குறிப்புகளின் ஒவ்வொரு பகுதியும் சற்று நீளமாக உள்ளது என்பதைத் தவிர பெரிய குறைகள் ஏதும் புலப்படவில்லை.  திருப்பூர் ஆயத்த ஆடைத்  தொழிலின் பின்னணியை ஒரு ஆவணப் படம் போல கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதில் ஜோதிஜி வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தத் தொடர் படிக்கும் சமயங்களில் சென்னை ரங்கநாதன் தெருவுக்கு செல்ல நேர்ந்தது .  பெரிய அங்காடிகளில் தொங்க விடப் பட்டுள்ள ஆயிரக் கணக்கான ஆயத்த  ஆடைகளை பார்க்கும்போது  ஒவ்வொன்றும் ஒரு முகம் காட்டுவது போல் தோன்றியது .  வறுமை, வெறுமை, கோபம் உழைப்பு  உயர்வு,ஏற்றம், இறக்கம்,  ஏமாற்றம் அனைத்தும் இணைக்கப்பட்டு ஆடை  வடிவம் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதாக  உணர்ந்தேன். ஒரு வேளை நான் திருப்பூர் செல்ல நேர்ந்தால் திருப்பூர் மீதான பார்வை இதன் அடிப்படையில்தான் அமையும் என்றே நினைக்கிறேன்.
இத் தொடரில் விவரிக்கப் பட்டுள்ள ஆயத்த ஆடையின் பல்வேறு தொழில்சார் தகவல்களையும் நடைமுறைகளையும், தொழிலாளர் முதலாளி, நிர்வாகிகளின்   வலிகள், வேதனைகள், வஞ்சகங்கள்  சிக்கல்கள், வெற்றி ,தோல்விகள் இவற்றை   அடிப்படையாகக் கொண்டு  ஒரு நாவல் படைக்கப் பட்டால்  ஜேடி குரூஸ் அவர்களின் "கொற்கை" நாவல் போல பேசப்படும் ஒன்றாக அமையும்  என்று நம்புகிறேன். ஒரு பயனுள்ள தொடரை வெளியிடத் "வலைத் தமிழ்" இணைய தளத்திற்கு நன்றி 
டி.என்.முரளிதரன் 
www.tnmurali.com 
தொடரை முழுமையாக வாசிக்க
http://www.valaitamil.com/literature_literature-article_jothiji-thiruppur/

தமிழ் வலையுலகில் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைப் பற்றி எழுதுபவர்களே. ஆனால் தனக்கென்று ஒரு களத்தை ஏற்படுத்திக் கொண்டு தான் சார்ந்த  துறையை சமூகப் பார்வையுடன் எழுதுபவர்கள் மிக சிலரே. அவர்களில் தனி முத்திரை பதித்தவர் 'தேவியர் இல்லம்' என்ற வலைப்பூவில் எழுதிவரும் அன்பிற்குரிய ஜோதிஜி அவர்கள். 


2013 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற "டாலர் நகரம்" என்ற புத்தகத்தின் வாயிலாக திருப்பூரை படம் பிடித்துக் காட்டிய ஜோதிஜி "ஈழம் - வந்தார்கள் வென்றார்கள்" " தமிழர் தேசம் " "வெள்ளை அடிமைகள்"  "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு" போன்ற மின் நூல்களின் வாயிலாக இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இந்த நூல்கள் ஐம்பதாயிரத்திற்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்ட வெற்றி பெற்ற நூல்களாகும். 


2014 ஆம் ஆண்டு வலைத்தமிழ் இணைய இதழில் கடந்த இருபது வாரங்களாக "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் " என்ற தொடரை எழுதி  வந்தார். ஆயத்த ஆடைத்  தொழிலின் பின்னணியை விரிவாக   சொன்ன  இதுபோன்ற ஒரு நூலை நான் இதுவரை படித்ததில்லை. 


ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்தவற்றை அதன் தொழில் நுணுக்கங்களை, சுவாரசியமான நாவல் போல 20 அத்தியாயங்களாகப் படைத்து அனைவரையும் வாசிக்க வைத்துள்ளார். இத்தொடருக்கு வாசித்தவர்களிடம் இருந்து வந்துள்ள விமர்சனத்தை வைத்தே எந்த அளவுக்கு ஒவ்வொருவரும் ஆழமாக வாசித்துள்ளனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தத் தொடரின் வெற்றியை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. 


ஆயத்த ஆடைகளே தற்போது அதிகமாக விரும்பப் பட்டு வருகின்றன. அதன் ரிஷிமூலம் என்ன? என்பதை  இத் தொடர் எடுத்துரைக்கின்றது. ஒரு ஆறு மலையில் உற்பத்தியாகி  நிலத்தில் வீழ்ந்து காடு மேடுகளை கடந்து, கற்களை உடைத்து  சமவெளிகளில் சஞ்சரித்து  பின்னர் கடலை அடைகிறது. அது போலவே ஆடைகளும் பருத்தியாய் விளைந்து நூலாய் மாறி இயந்திரங்களாலும் மனிதர்களின் வியர்வை சிந்தும் உழைப்பாலும்   ஆடையாக  உருப்பெற்று  அங்காடிக் கண்ணாடிகளில் அழகாய் தவம் இருந்து நம் உடலை அடையும் வரை நாம்  அறியாத ஒவ்வொரு பகுதியையும்  நம் கண் கொண்டு வந்து நிறுத்தி பிரமிப்பூட்டுகிறார்.


இத் தொடரில் முதலாளிகளின் சுயநலத்தை  தோலுரித்திக் காட்டுவதோடு, தன்னால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டலும் ஏன் தானே பாதிப்படைந்தாலும் வறட்டு கெளரவங்கள் ஆடம்பரங்கள் இவற்றை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளை சாட சிறிதும் தயங்கவில்லை  ஜோதிஜி.     

அவர் பணியாற்றிய நிறுவனங்களின் செயல்பாடுகள் தவறாக இருந்தபோது அவற்றை ஆணவம் மிக்க முதலாளிகளுக்கு அஞ்சாமல் சுட்டிக் காட்டியது  ஜோதிஜியின்  தன்னம்பிக்கையும் உறுதியையும்  வெளிப் படுத்துகிறது. 


முதலாளிகளின் பலவீனங்களை போட்டு உடைத்திருக்கும் அதே வேளையில்  அனைத்தையும் வெளிப்படையாக  சொல்ல முடியாது என்பதால்  சிலவற்றை தொடர்வதை  சாமார்த்தியமாக தவிர்த்திருக்கிறார்.  இத் தொடரில் குறிப்பிடப் பட்டிருப்பவை  அனைத்தும் அவரது சொந்த அனுபவங்கள். நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும்? என்று சொல்வதோடு எப்படி இருக்கக் கூடாது? என்பதற்கும் உதாரணங்கள் நிறைந்திருக்கின்றன இக் குறிப்புகளில்.

இந்தத் தொடரை ஒரு  நிர்வாகப் பாடமாகக் கொள்ளலாம். இங்கு வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. துரோகிகள் வஞ்சகர்கள், மாடாய் உழைத்துத்  தேயும்  உழைப்பாளிகள், சோம்பேறிகள் என அனைத்து தரப்பினரைப் பற்றியும் முதலாளி அறிந்திருக்கிறாரோ இல்லையோ நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்  என்ற  அனுபவ நிர்வாகப் பாடம் பலருக்கும் பயனளிக்கக் கூடியது .


ஆயத்த ஆடைத் தொழிலில்,  அயன் செய்தல், பிசிறு நீக்குதல் உட்பட சிறுசிறு பணிகள் கூட எவ்வளவு முக்கியமானவை  என்பதையும் விடாமல் கூறி இருக்கிறார். எதற்கு அதிக கவனம் கொடுக்கப் படவேண்டும் என்பதும் விவரிக்கப் பட்டிருகிறது . இவ்வளவு விஷயங்கள் இதில் உள்ளதா? என ஆச்சர்யப் பட வைக்கிறார் ஜோதிஜி அவர் அதிகாரப் பதவியில் இருந்தபோதும் தொழிலாளர்களின் சுக துக்கங்களை அருகில் இருந்து உணர்ந்தவர்  என்பதும்  அவரது எழுத்து உணர்த்துகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய சலுகைகள் தவறாமல் கிடைக்க வேண்டும் என்பதை முதலாளிகளிடம் வற்புறுத்தத் தவறாத மனிதாபிமானம் மிக்க நிர்வாகியாக இருந்ததுமே அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கும் என்பதை உணரமுடிகிறது. பெரிய நிறுவனங்கள் அதனை சார்ந்து இருக்கும் சிறிய நிறுவனங்கள் இவற்றின் பணி என்ன என்பதையும் இவற்றின் வளர்ச்சி வீழ்ச்சி இவற்றைப்பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறார் ஜோதிஜி .   


இந்த தொழிற்சாலைக் குறிப்புகள் மூலம் நான் அறிந்து  கொண்ட ஒன்று  தொழிலாளிகள்  நிர்வாகிகள் முதலாளிகள் என்ற மூன்று தரப்பினரும் முறையான ஒருங்கிணைப்பின்றி வெவ்வேறு  நிலைகளில்   செயல்படுகின்றனர்.  ஒருவரை பற்றி ஒருவர் கவலைப் படுவதில்லை.  ஓருவரின் மகிழ்ச்சியும் துன்பமும் வளர்ச்சியும் வீழ்ச்சியும்    இன்னொருவரிடத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதாபிமானத்திற்கு இங்கு அவ்வளவாக இடம் இல்லை. திறமையான ஒருவர் பணிபுரியும் நிறுவனத்தை விட்டு வெளியே போனாலும் அதை பொருட்படுத்துவதில்லை. காலத்திற்கேற்ப இத்தொழிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார் ஜோதிஜி.


விஞ்ஞான தொழில்  நுட்ப வளர்ச்சி காரணமாக ஏராளமான இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டாலும் மனித உழைப்பின் தேவையும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக  இயந்திரங்கள் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன இவற்றின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக் கணக்கான பொறியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இவற்றில் அவர்களின் பங்கு சிறிதும் இல்லை என்ற ஆதங்கத்தின் மூலம்  கல்வி முறையின் குறைகளையும சுட்டிக் காட்டுகிறார். ஒரு முறையற்ற தொழில் நகரமாக திருப்பூர் விளங்குகிறது என்பதை தெளிவாக நமக்கு புரிய வைக்கின்றார். 


திருப்பூருக்கு வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு வருபவர்களை வரவேற்று வாழ வைக்கும்  இந்நகரம் தொழில்சார்ந்து  முறைப்படுத்தப் படவேண்டும் என்ற விருப்பம் இவரது எழுத்துகளில் தெரிகிறது.   இந்தத் தொடர் முழுதும் தொழிற்சாலையில் பணிபுரியும்  மனிதர்களைப் பற்றியும் அவர்கள் சார்ந்த உளவியல் குறித்தவற்றை விவரித்துக் கொண்டே போகிறார் . இந்த தொடரில் தொழிற்சங்கங்கள் பற்றி எந்தக் குறிப்பும் காணப் படவில்லை என்று நினைக்கின்றேன். இருபது பகுதிகளைக் கொண்ட இத் தொழிற்சாலைக் குறிப்புகளின் ஒவ்வொரு பகுதியும் சற்று நீளமாக உள்ளது என்பதைத் தவிர பெரிய குறைகள் ஏதும் புலப்படவில்லை.  திருப்பூர் ஆயத்த ஆடைத்  தொழிலின் பின்னணியை ஒரு ஆவணப் படம் போல கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதில் ஜோதிஜி வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.


இந்தத் தொடர் படிக்கும் சமயங்களில் சென்னை ரங்கநாதன் தெருவுக்கு செல்ல நேர்ந்தது .  பெரிய அங்காடிகளில் தொங்க விடப் பட்டுள்ள ஆயிரக் கணக்கான ஆயத்த  ஆடைகளை பார்க்கும்போது  ஒவ்வொன்றும் ஒரு முகம் காட்டுவது போல் தோன்றியது .  வறுமை, வெறுமை, கோபம் உழைப்பு  உயர்வு,ஏற்றம், இறக்கம்,  ஏமாற்றம் அனைத்தும் இணைக்கப்பட்டு ஆடை  வடிவம் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதாக  உணர்ந்தேன். ஒரு வேளை நான் திருப்பூர் செல்ல நேர்ந்தால் திருப்பூர் மீதான பார்வை இதன் அடிப்படையில்தான் அமையும் என்றே நினைக்கிறேன்.


இத் தொடரில் விவரிக்கப் பட்டுள்ள ஆயத்த ஆடையின் பல்வேறு தொழில்சார் தகவல்களையும் நடைமுறைகளையும், தொழிலாளர் முதலாளி, நிர்வாகிகளின்   வலிகள், வேதனைகள், வஞ்சகங்கள்  சிக்கல்கள், வெற்றி ,தோல்விகள் இவற்றை   அடிப்படையாகக் கொண்டு  ஒரு நாவல் படைக்கப் பட்டால்  ஜேடி குரூஸ் அவர்களின் "கொற்கை" நாவல் போல பேசப்படும் ஒன்றாக அமையும்  என்று நம்புகிறேன். ஒரு பயனுள்ள தொடரை வெளியிடத் "வலைத் தமிழ்" இணைய தளத்திற்கு நன்றி 


டி.என்.முரளிதரன் 

www.tnmurali.com 

 

*******

 

திருமதி ரஞ்சனி நாராயணன்,

 

ஜோதிஜியின் திருப்பூர் பற்றிய மற்றுமொரு தொடர். இரண்டு தொழிற்சாலைகளில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கு தனது பாணியில் வழங்கியிருக்கிறார். எழுத்து என்பதை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பவர் திரு ஜோதிஜி என்பது அவரது எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதனால் அவரது எழுத்துக்களை வாசிக்க வரும்போது அவரது எழுத்துக்களை உள்வாங்கிக் கொள்ள தயாராக வர வேண்டும். மேலோட்டமாக வாசிப்பது என்பது இங்கு நடக்காத விஷயம். கவனச் சிதறல் இங்கு மன்னிக்க முடியாத ஒன்று.

இவரது முதல் அச்சுப் புத்தகம் டாலர் நகரம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த புத்தகத்தைப் படித்த போது நாம் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் எத்தனை சோகக்கதைகள்! அங்கு நாம் ஊகித்த கதைகளின் உண்மை மாந்தர்களை இந்த தொடரில் தோலுரித்துக் காட்டுகிறார், ஜோதிஜி.

‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளு’க்குள் நுழைவோம், வாருங்கள்.

‘நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நீங்கள் விரும்புவது பிராண்ட் வகையான ஆடைகள் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடைகள் உருவாக்கத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் விசும்பல் மொழி மறைந்துள்ளது என்பதை உணர்ந்து இருப்பீர்களா? வெள்ளை ஆடைகள் என்றாலும், நீங்கள் விரும்பம் வண்ணம் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னாலும் வடியும் இரத்தக் கறையை நாம் பார்க்கப் போகின்றோம்’ முதல் அத்தியாயத்திலேயே இவ்விதம் எழுதி திருப்பூரின் ஆடைத்தொழிற்சாலையின் உள்ளே வாழும் மனிதர்களிடையே நடக்கும் ஒரு நிழல் யுத்தத்திற்கு நம்மை தயார் செய்வதுடன், இந்த குறிப்புகளில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்று ஒரு ‘டீசர்’ கொடுத்து விடுகிறார் ஜோதிஜி. அதனால் நாம் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்கத் தயாராகிறோம். ஜோதிஜியின் எழுத்துக்களை படிக்க நீங்கள் மனதளவில் தயாராவது மிகவும் முக்கியம்.

இந்தக் குறிப்புகளில் அவரே நம்மை முதலிலேயே இப்படித் தயார் செய்துவிடுகிறார். ஒவ்வொரு துறையிலும் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத இந்த நிழல் யுத்தத்தில் பங்குபெறும் மாந்தர்களின் நடவடிக்கைகளில் ஒன்றிப் போய்விடுகிறோம்.  வெள்ளைத் துணிகளில் மட்டுமா சாயம் ஏற்றப்படுகிறது, இங்கே? மனிதர்களும் சமயத்திற்குத் தகுந்தாற்போல நிறம் மாறுவதை இந்தக் குறிப்புகளில் பார்க்க முடிகிறது.

முதலில் தனது முதலாளிகளாகிய ‘பஞ்ச பாண்டவர்களையும், அவர்களை தான் கையாண்ட விதத்தையும் சொல்லும் வேளையில், இந்த நிறுவனத்துக்குள் தாம் அடியெடுத்து வைத்த நிகழ்வையும் சொல்லுகிறார். அந்த நிறுவனத்தின் நிலைமையையும் சொல்லி, தான் அவற்றை மாற்ற எடுத்த முயற்சிகளையும் சொல்ல ஆரம்பிக்கிறார். அதற்கு அவர் பட்டபாடு எதிர்கொண்ட எதிர்ப்புகள் எல்லாமே விறுவிறுப்பான ஒரு நாவல் படிக்கும் அனுபவத்தை நமக்குக் கொடுக்கின்றன.

இங்கு நமக்கு ஒரு புதிய ஜோதிஜி அறிமுகமாகிறார். டாலர் நகரத்தில் நாம் சந்தித்த அந்த ‘ஒன்றும் தெரியாத அப்பாவி’ ஜோதிஜி இங்கு இல்லை என்பது இந்தக் குறிப்புகளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்தத் தொழிலில் நீண்ட நாட்கள் பட்ட அனுபவத்தில் புடம் போடப்பட்ட ஜோதிஜியை சந்திக்கிறோம்.

தனது அனுபவம் பற்றி ஜோதிஜியின் வார்த்தைகளில்:

தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களை கவிழ்த்தவர்கள்,  குறுகிய காலத்திற்குள் நிறுவன வளர்ச்சியை விட தங்களது பொருளாதார வளர்ச்சியை பெருக்கிக் கொண்டவர்கள், உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள்,  தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிறுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது.

அவர் கற்றது மட்டுமல்ல நமக்கும் பலவற்றையும் சொல்லிக் கொண்டு போகிறார். அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் பல்வேறு விதமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மாடசாமியிலிருந்து தொடங்கி ராஜா வரை. ‘அவள் பெயர் ரம்யா’ என்ற தலைப்பில் ஜோதிஜி எழுதிய ஒவ்வொன்றும் மணிமணியானவை. ஒருவரிடம் இருக்கும் திறமையை எப்படி அவரை பயிற்று வைப்பதன் மூலம் வெளிக்கொணரலாம் என்று இங்கு சொல்லுகிறார். ஆனால் அதுவே அவரை இக்கட்டில் மாட்டி வைத்ததையும் சொல்லிப் போகிறார். சுவாரஸ்யமான அத்தியாயம்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் தான் கண்டது, கேட்டது அனுபவித்தது என்று தனது ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்கிற எழுத்துப்பாணியில் விவரிக்கிறார். நீங்கள் திருப்பூரிலோ அல்லது வேறு ஏதாவது ஆடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்தால் தான் இந்த ‘ஒரு தொழிற்சாலையின் குறிப்பு’களை ரசிக்க முடியும் என்றில்லை. யாராக இருந்தாலும், என்னைபோன்ற இல்லத்தரசி ஆனாலும் ரசிக்கலாம். அதேபோல ஜோதிஜி இங்கு சொல்லியிருக்கும் மனிதர்களைப் போல நாம் வெளியிலும் பலரைப் பார்க்கிறோமே. அதனால் மனிதர்களை எடை போடவும் இந்தக் குறிப்புகள் நிச்சயம் உதவும்.

ஒரு சின்ன குறை: ஒவ்வொரு அத்தியாயமும் மிகவும் நீண்டுகொண்டே போகிறது. சிலசமயம் வேண்டுமென்றே வளர்க்கிறாரோ என்று கூடத் தோன்றுகிறது. அத்தியாயங்களின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். அல்லது இன்னும் இரண்டு மூன்று அத்தியாங்களாக கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்’ என்பதை ‘வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிய குறிப்புகள்’ என்று கூடக் கொள்ளலாம்.

திருமதி ரஞ்சனி நாராயணன். பெங்களூர்


வலைபதிவர், எழுத்தாளர்,

http://ranjaninarayanan.wordpress.com/

 

*******

 

மாரியப்பன் ரவீந்திரன்,

 

எப்பேர்ப்பட்ட மோசமான குணாதிசயங்கள் கொண்டவருடன் பழகினாலும் தன் சுயபுத்தியை இழக்காமல் தன் நிலையை எந்தசூழ்நிலையிலும் கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருக்கும் 22 வருட கடின உழைப்புடன் கூடியஅனுபவம் கொண்ட ஜோதிஜி எழுதியிருக்கும் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்ற தொடரை ஒரு அத்தியாயம் கூட விடாமல் கவனமாக வாசித்தேன்.

நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை, நான் சந்திக்கும் மனிதர்கள், நான் சார்ந்திருக்கும் தொழில் என்பதனை இந்த தொடர் மூலம் என்னால் மீள் ஆய்வு செய்து கொள்ள முடிந்தது.  இந்தத் தொடர் மூலம் தனிப்பட்ட முறையில் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். என் பார்வையில் சில விமர்சனக் கருத்துக்களை மட்டும் இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

1. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் அனுபவத்தொடர் என்பதா? 

2. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் மனிதவளம் தொடர்பான அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள் ;தொடர் என்பதா?

3. மனிதர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் அலசி ஆராயும் ஒரு சக மனிதரின் அனுபவக்குறிப்புகள் என்பதா?

4. 22 வருடங்களுக்கும் மேலாக இருந்துவரும் தொழிலில் தான் கண்ட மனிதர்களின் ஏற்றஇறக்கங்களை பதிவு செய்யும் தொடர் என்பதா?

5. ஆயத்த ஆடைத்தொழிலின் தலைநகரம் திருப்பூரைப் பிடித்துப் பார்த்த நாடித் தொடர் என்பதா?

6. தான் கடந்து வந்த 22வருட திருப்பூர் வாழ்க்கையின் வாழ்வியல் தொடர் என்பதா? அல்லது

7. திருப்பூர் தொழிலதிபர்களின் வாழ்ந்த வீழ்ந்த கதையை சொல்லும் தொடர் என்பதா?

8. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைச் சொல்லி வாழ்க்கையை புரிந்துகொள்ளச் சொல்லும் வாழ்வியல் நன்னெறித் தொடர் என்பதா?

9. எல்லாம் கலந்து கட்டிய சரம் என்பதா?

என்று சத்தியமாக நம்மால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அந்த அளவிற்கு வார்த்தைகளை வைத்து ஜோதிஜி விளையாடி இருக்கிறார்.

எழுதச்செல்லும் முன்பு எழுத வேண்டிய விசயத்தை மனதில் ஆழ்ந்து உள்வாங்கி அத்துடன் தனது கருத்துக்களையும் சரியான முறையில் எழுதியதால் இத்தொடர் ஒரு நாட்குறிப்பு போலவோ அல்லது ஒரு கட்டுரை போலவோ இல்லாமல் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் படித்துச்செல்லும் அளவிற்கு அவரது எழுத்து நடை அமைந்திருப்பது மிகச்சிறப்பு.

“வாழ்க்கை என்பதை புரிந்து வாழ்பவர்களுக்கு கொள்கையில் சமரசம் என்பதே இருக்காது. வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் என்பது தங்களுக்கான திறமையை அடையாளம் கண்டு கொள்வதே ஆகும். உங்களுக்கு உண்டான நேர்மை குறித்து உங்களுக்கே அக்கறை இல்லை என்றால் அது என்றாவது ஒரு நாள் மானங்கெட்ட மனிதர்களின் பட்டியலில் சேர்த்துவிடும் என்பதை நினைவில் வைத்திருக்கவும்” என்று வாழ்வியலை பதிவு செய்திருக்கும் விதம் அருமை.

“தர்மம் நியாயம் அறம் என்பதெல்லாம் அன்றும் இன்றும் பலரின் வாழ்க்கையில் வெறும் வார்த்தைகள் மட்டுமே. பணம் என்ற காகிதத்திற்காகஇதன் சுகம் என்ற குறுகிய வட்டத்திற்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்பதாகத்தான் இங்கே பலரின் கொள்கைகளும் உள்ளது” என்று மனித மனங்களை வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை.

“ஓரு நிர்வாகத்தின் வெற்றி என்பது தனிமனித உழைப்பை மட்டும் சார்ந்தது அல்ல. அது பலருக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சியினால் உருவாக்கப்படுகின்ற கூட்டுக்கலவை. அதன் மூலம் கிடைப்பதே மொத்த வெற்றி. ஒரு நிர்வாகத்தின் வளர்ச்சி வீழ்ச்சியடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமான முதன்மையான காரணமாக இருப்பது மனித மனங்களை கையாளத் தெரியாத பட்சத்தில் வீழ்ச்சி விரைவாகும்”.

“அரசியலில் அவ்வப்போது பலியாடுகள் தேவைப்படுவதைப் போல நிர்வாகத்திலும் பலி கொடுத்தால் தான் நிர்வாகம் அடுத்த நிலைக்கு நகரும் என்றால் கொடுத்தே ஆக வேண்டும்.இது வெளியே சொல்லமுடியாத நிர்வாக விதிமுறை.ஒரு சிறந்த நிர்வாகி என்பவருக்கு முதல் தகுதியே நெருக்கடியான சூழ்நிலையில் உருவாகும் பிரச்சனைகளை எப்படிக் கையாள்கின்றார் என்பதை வைத்தே முதலாளி அவரைப்பற்றி முடிவுக்கு வருகின்றார்“ என்று நிர்வாகவியலை விளக்கியிருக்கும் விதம் அருமையிலும் அருமை..

“ஒருவர் வாழ்வில் தென்படும் சிறிய வெளிச்சம் தான் மிகப் பெரிய பாதையைக் காட்டுகின்றது. தன்னம்பிக்கையோடு உழைக்கத் தயாராக இருப்பவனுக்கு இங்கு ஏதோவொரு சமயத்தில் வழி கிடைக்கத்தான் செய்கின்றது” என்று நம்பிக்கையூட்டுகிறார்.

“நாம் எந்தப் பதவியில் இருந்தாலும் எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் இயல்பான மனிதராகக் கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்க்கையை பதவியை நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியும். சிறப்பான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று இறுமாப்பில் நாம் நம்மை மாற்றிக் கொண்டால் அடுத்து ஒரு ஆப்புக் காத்திருக்கின்றது என்று அர்த்தம். இது தவிர ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் ஒவ்வொரு இடத்திலும் உள்ள மனிதர்களுடன் பேசினால் மட்டுமே அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும். நம் பதவி சார்ந்து ஒரு இறுக்கத்தை நாமே உருவாக்கிக் கொண்டே இருந்தால் அது பலவிதங்களில் நம்மைப் பல மனிதர்களிடத்தில் இருந்து அந்நியமாக வைத்து விடும் ஆபத்துள்ளது” என்று எச்சரிக்கவும் செய்கிறார்.

“ஒருவரின் தனிப்பட்ட பழக்கவழக்கம் மாறும் போது அவரால் எடுக்கப்படும் முடிவுகளும் மாறுகின்றது.'ஒழுக்கம் உயிரை விட மேலானது' என்று வள்ளுவர் சொன்னதன் காரணத்தை எவரும் யோசிப்பதே இல்லை.ஆனால் ஒரு மனிதனின் அனைத்து தோல்விகளும் அவனின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை தொடங்கி வைக்கின்றது. அவனுடைய ஆசைகள் அதனை விரைவு படுத்துகின்றது. இது தான் சரியென்று அவனது பேராசை உறுதிப்படுத்துகின்றது. இதன் வழியே சென்று அழிந்தவர்கள் தான் இங்கே முக்கால்வாசி பேர்கள் உள்ளனர்”.

இவ்வளவுதான் திருப்பூர் என்று எளிமையாக புரிய வைத்துவிட்டீர்கள் ஜோதிஜி.

தொழிலையும் விளக்கி அதிலிருக்கும் மனித மனங்களையும் விளக்கி திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் சார்ந்த செயல்பாடுகளை எழுதியுள்ள ஜோதிஜியின் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்பது வளர நினைக்கும் ஒவ்வொரு இளைஞரின் கைகளிலும் வைத்திருக்க வேண்டிய கையேடு ஆகும்.

தான் சாப்பிட்ட இட்லி சட்னி சாம்பாரையும் தான் பார்த்த சினிமாவையும் ரசித்து எழுதும் வலையுலகத்தில் வித்தியாசமாக ஒரு கனமான விசயத்தை இவ்வளவு அருமையாக எழுத முடியும் என்று எழுதிக்காட்டிய அன்புச்சகோதரர் ஜோதிஜி உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

“ஒரு நிறுவனத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவர்கள் பலமுறை மீண்டும் அழைத்தும் அந்தப்பக்கம் திரும்பிப் பார்ப்பதும் இல்லை என்ற கொள்கையைத் தொடக்கம் முதல் கடைபிடித்து வருகின்றேன்.ஒரு நிறுவனத்தை விட்டு நகர்ந்து வந்த பிறகு ஏதோவொரு இடத்தில் அடையாளம் தெரியாத தொழிலாளர் உண்மையான அக்கறையோடு என்னைப் பற்றி எங்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையோடு விசாரிக்கின்றார்கள். "நீங்க இருந்த வரைக்கும் நாங்க நன்றாக இருந்தோம்" என்று சொல்கின்ற அவர்களின் அந்த வார்த்தைகள் தான் இன்னமும் என்னை இந்தத் துறையில் இயங்க வைத்துக் கொண்டேயிருக்கின்றது”.

“கோடி கோடியாய் சேர்த்தவனும் இறுதியில் திருப்பூரில் மின் மயானத்திற்குத்தான் செல்லப் போகின்றான்.நானும் அங்கே தான் செல்லப் போகின்றேன்.கோடிகளைச் சேர்த்து வைத்தவனின் வாரிசு அவனை எளிதில் மறந்து விடக்கூடும்.ஆனால் என் கொள்கைகள் என் வாரிசுகளை வழி நடத்தும்.அவர்களும் பலரின் வாழ்க்கைக்கு உதவக் கூடியவர்களாக இந்தச் சமூகத்தில் எதிர்காலத்தில் செயலாற்றுவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்குள் உண்டு”

அன்புச்சகோதரர் ஜோதிஜி இதுதான் உங்களது 22 ஆண்டு கால உழைப்பிற்கான சம்பளம்.

ஆம். நம்பிக்கை தானே வாழ்க்கை.

உங்கள் நல்ல எண்ணங்கள் எந்த அளவுக்கு நீங்கள் சார்ந்திருந்த தொழிலாளர்களுக்கு உதவியாய் இருந்துருக்கும் என்பதனை உங்கள் சத்தியமான வார்த்தைகள் மூலம் உணர்ந்து கொண்டேன். வாசிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் கடத்திய உணர்வுகள் என்பது இன்னும் சில மாதங்கள் அதன் தாக்கம் எனக்குள் இருப்பதைப் போல உங்களால் பலன் அடைந்தவர்களின் ஆசிர்வாதம் நிச்சயம் உங்கள் தலைமுறைகளை வாழ வைக்கும் என்று உறுதியாய் நானும் நம்புகின்றேன்.

நன்றி ஜோதிஜி

மாரியப்பன் ரவீந்திரன். மதுரை.

*****

 

விஸ்வநாதன்

ஆயத்த ஆடை சமூகத்தின் சிக்கல்களுக்கு விடை காண விழையும் தேடல் தாகத்துடன் இருக்கும்  தனிமனிதர்களின் பிரதிநிதியாக உங்கள் பதிவுகள் இருக்கின்றன.  இந்த சமூகத்தில்  பொருளாதார அடிப்படையிலாலான காரண காரிய உறவுகள் நிரந்தர வெற்றிக்கு வழிகோலுவதில்லை.

தேவைப்பட்ட மனிதர்களுக்கு பயனற்றவர்களாகி  வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மரண வலியினை  உணர முடிகிறது. இங்கு அனைத்து சிக்கல்களுக்கும் தற்காலிகமாக நிவர்த்திக்கப்பட்டு புதிய பிரட்சினைகளுக்கு அடியெடுத்துக் கொடுத்து கொண்டிருக்கின்றன. இந்தத் தற்காலிக நிவாரணம் எச்சரிக்கை மணியை அனைத்து வைப்பது போலத்தான்.  இங்கு பெரும்பாலான முதலாளிகளும்  உழைப்பாளிகளும்  முடிவுகள் எடுப்பதில் கடந்த கால அனுபவ அறிவை மட்டும் நம்பிக்கொண்டு புதியனவற்றை ஏற்றுக்கொள்ளாத சமூகமாகத்தான் இன்னும் இருந்துகொண்டிருக்கின்றது. பழக்கத்தில் இருக்கக் கூடாதவற்றைப் பின்பற்றுவதால் தொழில் ரீதியான விபத்துகள் இழப்புகளை அதிகம் ஏற்படுத்துகின்றன. உற்பத்தி முறைகள் மரபு மாரதவைகளாக இன்னமும் இருக்கின்றன. இதனால் தொழில் மட்டும் வளர்ச்சி அடைந்திருக்கிறது தொழிற்சாலைகள் நீண்ட காலம் வாழ்வது இல்லை. சிறிய வேர்களை வைத்துகொண்டு பெரிய மரங்கள் வளர முடியாது.

வலுவில்லாத வேர்கள் பெரிய மரங்களைச் சுமக்க முடிவதில்லை. நபர்களைச் சார்ந்து நிற்பதை தவிர்க்கமுடிவதில்லை. நபர்களைச்  சார்ந்த தொழிற்சாலைகளின் வளர்ச்சி பாகுபாடின்றி பரஸ்பர துரோகத்தில் வீழ்ந்து விடுகின்றன.

தொன்று தொட்டு ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானத்தில்  வரப்போகிற தலைமுறை முந்தைய தலைமுறையின் (கற்பித்தல் மூலமாக இல்லாமல்) அனுபவத்தினை  புலப்படாத தொடர்பில் பெற்றுக்கொண்டிருக்கிறது.  அந்த விஞ்ஞானம் முதிர்ச்சியடையாத ஒன்று. எதுவும் ஒரு குறிப்பிட்ட ஊருக்குச் சொந்தமானதல்ல.

வானம் பார்த்த பூமியாக கார்காலத்தில் பருத்தி, எள், சோளம் கம்பு ராகி போன்ற பயிர்களை விதைத்து விவசாயத்தைத்  தொழிலாகக் கொண்டு சிரமப்பட்டு வாழ்ந்தது வந்த  மூதாதையர்களின் மண்தான்  திருப்பூரும்.  காவிரியும் தாமிரபரணியும் முல்லைபெரியாரும்  பாயும் ஊரில் வயலில் நடவு செய்துவிட்டு காலாற  இருந்தவர்கள்  அல்ல திருப்பூர் மக்கள். 

பஞ்சாலைகளில் இராப்பகலாக உழைத்தவர்களின் வாரிசுகள்தான் பெரும்பாலான பழைய முதலாளிகள். ஒவ்வொரு முதலாளியின் பின்னாலும் சிறந்த உழைப்பாளியின் அனுபவக் கதை இருக்கும். ஒவ்வொருவரும் உழைப்பாளியாகச் சுரண்டப் பட்டுத்தான் முதலாளியானார்கள். அவர்களுடைய உழைப்புதான் இங்கு வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.  நபர்களைச் சாராத  தொழில் நுட்பம் சார்ந்த புதிய அணுகுமுறை பின்பற்றப் பட வேண்டும்.  இந்த சமூகத்தில் தற்காலிக வெற்றியாளர்களின், புத்திசாலிகளின் அவநம்பிக்கை விஞ்யான ரீதியான  அணுகுமுறைகளைத் தடை செய்கிறது. பாரம்பரியமாக வந்த பல வற்றை நாம் மறு பசிசீலனை செய்ய வேண்டும். அனுபவத்திற்கும் புதுமைக்கும் எல்லை பிரிக்கப்பட வேண்டும். அனுபவத்தை ஆதரிக்கும் அதே வேளையில் பாரம்பரியத்தை துடைத்துப் போட்டு சுத்தப்படுத்தி காலத்திற்கு ஏற்ப புதுமையைப் புகுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இந்த சுழற்சி நடைபெறாத நிறுவனங்கள் சிறிய வேர்களைகொண்டு வளரும் மரங்கள் போன்றதுதான்.


தான் யாரென்று தெரியாமல் யாரைப் போலவோ எதுவாகவோ ஆகவேண்டும் என்று இலக்கு மட்டும் வைத்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தோல்வியில் தான் முடிந்திருக்கிறார்கள். நமது இருப்பைத் தெரிவதுதான் இந்த மாற்றத்தின் துவக்கம்.பல்வேறு நிறுவனங்களின் வெற்றி தோல்வி குறித்த பல்வேறு ஆதாரங்களை, தகவல்களைத் திரட்டி அது குறித்து ஆய்வுகள் செய்ய வேண்டும். உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஆயத்த ஆடை உற்பத்தி முறையை ஒருங்கிணைத்து முற்றிலும் புதிய அணுகுமுறையைக் கொண்டுவரவேண்டும்.அதை நோக்கிய பதிவுகள் எதிர்காலத்தில் உங்களிடம் இருந்து வரவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

கடந்த கால அனுபவங்களைச்  சுவாரசியமாகச்  சொல்வது போல் இதனையும்  முயற்சி செய்தால்  உங்களால் திருப்பூரின் வருங்க்கலச் சந்ததி மேலும் பயன்பெறும்.

நன்றி,

இப்படிக்கு

சமகால திருப்பூர் பயணி

விஸ்வநாதன்.


தொடரை முழுமையாக வாசிக்க

http://www.valaitamil.com/literature_literature-article_jothiji-thiruppur/


by Swathi   on 21 Dec 2014  1 Comments
Tags: ஆயத்த ஆடைத் துறை   ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்   Oru Tholitchalaiyin Kurippugal   Tiruppur Jothiji   Jothiji Tiruppur   திருப்பூர் ஜோதிஜி     
 தொடர்புடையவை-Related Articles
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14
கருத்துகள்
01-Jan-2015 03:04:46 Meenakshi Sundaram said : Report Abuse
அருமை. நிர்வாகத்தில் ennenna நடக்கிறது என்பதை புட்டுபுட்டு வைத்திருக்கிறார் Aasiriyar.பாரattuடுக்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.