தமிழிசை முதல் உலகத் தமிழிசை மாநாடு கண்டுள்ள இவ்வாண்டில் மார்கழி இசைத்திருவிழாவை வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் மற்றும் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை இணைந்து இணையத்தில் தொடங்கியிருப்பது தமிழிசையைப் பாட ஒரு திறந்தவெளி மேடையை உருவாக்கவும், பல திறமையானவர்கள் அவர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்து இதில் கலந்துகொண்டு பாடி தமிழிசையையும், மார்கழியையும் கொண்டாடவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. வலைத்தமிழ் தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகத்தின் முதல்வர் இன்னிசையேந்தல் திருபுவனம் குரு. ஆத்மநாதன் அவர்கள் பாடும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்தல், பாட்டுகளைக் கேட்டுத் தரப்படுத்துதல், வெளி நாடுகளில் தமிழ்ச் சூழல் இல்லாத நிலையிலும் பாடும் மாணவர்களை ஊக்கப்படுத்திப் பாடவைத்தல் என்று சிறப்பாகத் திட்டமிடப்பட்டு மார்கழி 1 முதல் மார்கழி 29 வரை பாடப்படுகிறது.
ஆண்டாள் திருப்பாவையைப் பாடி இசைப்பள்ளி முதல்வர் தொடங்கிவைக்கத் தொடர்ந்து தினமும் இந்திய நேரம் காலை 8 மணிக்கு வலையொளி(you tube) மற்றும் முகநூலில்(face book) இவை ஒளிபரப்பப்படுகிறது. வலைத்தமிழ் எடுத்துள்ள இம்முயற்சிக்கு பலர் உலகெங்குமிருந்து பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
இன்னிசையேந்தல் திருபுவனம் குரு. ஆத்மநாதன் அவர்களிடம் இசை கற்று அரங்கேற்றம் செய்த மாணவர்கள் , இசையில் ஆராய்ச்சி செய்தவர்கள், இசை ஆசிரியர்கள், வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகத்தின் வழியே இணையம் வழி கற்கும் பல மாணவர்கள் என்று பலரும் இணைந்து இந்த விழாவில் பாடுவது குறிப்பிடத்தக்கது.
மார்கழியில் பாடிய அனைத்துப் பாடல்களையும் கேட்டு ரசிக்க : www.YouTube.Com/ValaiTamil , www.Facebook.com/ValaiTamil
|