|
||||||||
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா |
||||||||
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா இரா.பொற்செழியன்
தமிழ் நிகழ்கலைக் கழகம், அமெரிக்கா உலகின் மிக மூத்த செவ்விசை மரபான தமிழிசை மரபின் மீட்டுருவாக்கத்தில் களப்பணியாற்றும் சில நிறுவனங்கள்,ஆளுமைகளைப் பற்றி எனது பார்வையில் சிறு குறிப்பு. அதற்கு முன்னர் மேற்கத்திய, இந்திய செவ்விசையின் தற்போதைய நிலையை,அவை நிலைத்து நிற்க நடக்கும் முயற்சிகளை முதலில் தெரிந்துகொள்வது உதவும். மேற்கத்திய செவ்விசை முறைகள் காலத்தால் பின் தங்கியது எனினும் 16ம் நூற்றாண்டுக்குப் பின்னர் பல மேற்கத்திய நாடுகளின் அரசு, கல்விமுறை, சமூகம் அதைப் பேணிக்காப்பதிலும், கற்றுக்கொள்வதிலும், நிகழ்ச்சிகளை ஆதரிப்பதிலும், இசை வல்லுனர்களைக் கொண்டாடுவதிலும் முனைப்புடன் செயல்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் அரசு ஆதரவுடன்,இசை ஆர்வலர்கள், புரவலர்கள் பெரிதும் இதை ஆதரிப்பது சமூகத்தில் இந்த இசையின் தொடர்ச்சியை நிலை நிறுத்திவருகிறது. தற்போது இந்தியாவின் செவ்விசை என இசை உலகில் அறியப்பட்டிருக்கும் இசை மரபுகள் இந்துஸ்தானியும், கர்நாடக சங்கீதமும். கர்நாடக இசை வடிவத்தை அதை கற்பவர்களும், ஆதரிப்பவர்களும் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகக் கருதி, தவமாக பெரும் முயற்சியில், கற்றும்,பாடியும்,விழாக்கள் நடத்தியும் வருவது பாராட்டுக்குரியது. கர்நாடக இசை தமிழிசையின் ஒரு பரிமாணம் என்பது இசை ஆய்வாளர்கள், இசை ஆய்வுப் புலமை கொண்ட முன்னனி இசைக் கலைஞர்கள் பலரும் ஏற்றுக்கொண்டது. தமிழிசை என்பது ஏதோ கருநாடக இசையிலிருந்து வேறுபட்டதோ மாறுபட்டதோ அல்ல. செவ்விசையின் மூலமாக இருந்ததை மீட்டு, தமிழ் மொழியிலேயே அனைத்து இசை நுட்பங்களையும்,பாடல் நிலைகளையும் நிலைபெறச் செய்வது. தமிழிசையின் நுட்பமான இசை பரிணாமத்தை ஆய்ந்து ஆபிரகாம் பண்டிதர்,வீ.ப.கா சுந்தரம் போன்ற பேரறிஞர்கள் இசை வரலாற்று ஆவண நூற்களை வெளியிட்டுள்ளனர். இதை நடைமுறைப்படுத்த கட்டமைப்பு உருவாகவில்லையென்பதால் இவை ஆய்வு நிலையிலும்,இதைப்பற்றிய பேச்சு நிலையிலுமே இருந்தன. இவற்றை ஒரு கல்வியாக முறைப்படி நடைமுறைப்படுத்த அடித்தளமிட்ட பின்வரும் புரவலர்கள்,அமைப்புகள், இசைவல்லுனர்களின் பட்டியலில் திருபுவனம் ஆத்மனாதன் அவர்களின் பங்கு அளப்பரியது. நமது பெருமையாக நாம் ஒரு நூற்றாண்டு உணர்ந்துள்ள தமிழ் செவ்விசையாகிய தமிழிசையின் நிலையையையும் அதில் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை, இசையேந்தல் திருபுவனம்.கு.ஆத்மனாதன் அய்யாவின் இசைத் தொண்டு, மீட்டுருவாக்கத்தில் தளம் அமைக்கும் பல்கலைக் கழகங்கள், அமைப்புகளின் வரலாற்றுத் தேவையையும், அதன் இன்றியமையாத பங்கும் பற்றிப் பார்ப்போம். அண்ணாமலை அரசர்: கடந்த நூற்றாண்டில் அண்ணாமலை அரசர் தமிழிசைக்கான ஒரு பெரும் அடித்தளத்தைக் கட்டியெழுப்பக்கூடிய ஆளுமையாக விளங்கினார். பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பெரும் இசை மேதைகளை வைத்து தமிழிசை வளர நூற்களை வெளியிட்டார். தமிழிசை மீட்டுருவாக்க வரலாற்றில் அவருக்கு நீங்காத இடம் உண்டு. அதன் முழுமையான வீச்சையும், அண்ணாமலை அரசரின் கனவையும் தெளிவாக உணர்ந்தவர் இன்னிசையேந்தல் திரு.ஆத்மனாதன் அய்யா அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன்: தமிழ் மொழி, கலை வடிவங்களின் உயர் ஆய்வு மையமாக விளங்கும் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம் தமிழர்களுக்குக் கிடைத்த ஒப்பற்ற கல்வி நிறுவனம். புகழ் வாய்ந்த தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக தயாரிப்பான நந்தன் கதையில் முதன்மைப் பாத்திரமான நந்தனாராக பாடி நடித்தது முதல் பல பல்கலைக்கழக முயற்சிகளில் இணைந்து பணியாற்றியுள்ளார். 2019 ஆகஸ்ட் 15 இந்திய விடுதலைத் திருநாள் விழாவில் திரு.ஆத்மனாதன் அய்யாவின் சேவையைப் பாராட்டி, விருது அளித்து பெருமைப்படுத்தியது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். SRM பல்கலைக்கழகம்: SRM பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் தமிழறிஞர்கள் , தமிழ்ப் படைப்புகளுக்கு விருதுகளும் உதவிகளும் தொடர்ந்து செய்து வருகிற்து. பதின்மூன்று வருடங்களாக தமிழ் இசை விழாவை தொடர்ந்து நடத்திவந்த இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் இசைவிழாவிற்கு ஊக்கமளிக்கும் வண்ணம், அதைத் தொடர்ந்து நடத்த ஆதரவளிக்கும் வண்ணம், விழாவை நடத்த அரங்கத்தை நல்கி உதவி வருவது பாராட்டுக்குரியது.
அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையுடன்: அமெரிக்க வாழ் தமிழர்களுக்கான இசைவிழாவாக அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையுடன் இணைந்து டிசம்பர் இசைவிழாவின் ஒரு நாளை கடந்த ஐந்து வருடங்களாக நடத்தி வருகிறார். நந்தன் கதை, கக்கன் , தீரன் சின்னமலை, போன்ற மாமனிதர்களை கலை வடிவத்தில் செதுக்கி, அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையுடன் இணைந்து வரலாற்றில் பதியவைத்த பெருமை இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையையே சாரும்.
தமிழ் நிகழ்கலைக் கழகம்( Institute of Tamil Performing Arts): தமிழிசையின் அடிப்படைப் பாடங்களை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து பணியாற்றும் தமிழ் நிகழ் கலைக் கழகத்தின் ஆலோசகராக தமிழிசைக்கான பாட நூலை உருவாக்கும் பணியை வழி நடத்துவது குறிப்பிடத்தக்க பணியாகும். வலைத்தமிழ்: தமிழ் நிகழ்கலைக் கழகத்தின் பாடதிட்டத்தின்படி, உலகத்தின் எந்த நாட்டில் இருந்தாலும் இசை பயில, வலைத்தமிழ் இணையவழி இசைப்பள்ளி உதவி வருகிறது. இதைப் பயிற்றுவிக்க வலைத்தமிழ் இணையவழி இசைப்பள்ளி உதவியுடன் பல இசை ஆசிரியர்களை அமர்த்தி, அவர்கள் பயன் பெறும் வண்ணம் செய்திருப்பது, தமிழக இசை ஆசிரியர்களுக்கு திரு.ஆத்மனாதன் ஐயா செய்துள்ள பேருதவியாகும். இசைக்கல்லூரி, இசைப்பள்ளிகளுக்கான வாய்ப்பு: தமிழகத்தின் பல இசைக்கல்லூரி, இசைப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களின் திறனை வெளிப்படுத்தும் மேடையளித்து, குறிப்பாக சேர்ந்திசை எனும் வடிவத்தை மேடையேற்றி இசை மாணவர்களை ஊக்குவிப்பது இசை விழாவின் மற்றுமொரு சிறப்பு. இலக்கியங்களின் இசைவடிவம்: தொல்காப்பியம், சிலப்பதிகாரம், புறநானூறு, வள்ளலார் பாடல்கள் முதல் பெரும் தமிழ் இலக்கிய செல்வங்களுக்கு இசை வடிவம் கொடுத்து பல குறுந்தகடுகளை தயாரித்து ஆவனப்படுத்தியுள்ளது பெரும் சேவை. இசையமைக்கும் பாடல்களில் பாரம்பரியத்தின் மனம் கமழ மிக முக்கியக் காரணம்,இசையமைப்பில் பாரம்பரிய இசைக்கருவிகளை பயன்படுத்துவதும், இசையைப் பதிவு செய்யும் முறையில் இசையின் இயற்கையான அதிர்வுகளைக் கலந்து செவ்விசையின் இனிமையை வழங்குவதும் மிகச் சிறப்பானது. அரவணைக்கும் தாயுள்ளம்: தான் மட்டும் புகழ் பெற்றிருக்க எண்ணாமல் பல இசை வல்லுனர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கி, இசை விழாவை உருவாக்கி, பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.இந்தப் பண்பு நலன் அவரின் பேருள்ளத்தைக் காட்டுகிறது. இசைக் கல்லூரிகளுக்கும், இசை பயிலும் அனைத்து மாணவர்களுக்குமான மேடையாகவும் இசை விழா இருந்து அவர்கள் இசையார்வத்திற்கு ஊக்கமளிக்கிறது. இசை மாணவர்களின் மீது தீரா அன்பு கொண்டு அவர்களின் பாடல் திறன் வளர்ச்சியிலும், அவர்களின் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டிருப்பது திரு.ஆத்மனாதன் அய்யாவின் தாயுள்ளத்தினால் எனில் மிகையாகாது. இசைவிழாவின் பொதுமை: செவ்விசை விழாவில் முதல் முறையாக தமிழர்களின் பறையிசை, வள்ளிகும்மி இவற்றை மேடையேற்றி, இசைவிழாக்களுக்கு இருந்த மனத் தடைகளை அகற்றி அனைத்து மக்களுக்குமான இசை விழாவாக விரிவுபடுத்தியுள்ளது இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் இசை விழா. இசை நிகழ்ச்சியின் பாடுபொருளாக அனைத்து வகைப் பாடல்களும் பாடுவது செவ்விசை நிகழ்ச்சிகளை அனைவருக்கும் பொதுவானதாக்குகிறது. தமிழிசைத் தூதுவராக பல முறை பல நாடுகளுக்கும் சென்று பரப்பி, பல்லாயிரம் மைல்கள் தள்ளியிருக்கும் தமிழ்ச் சமூகத்தில் தமிழிசைக்கான விதைகளை விதைத்து இன்று உலகெங்கும் தமிழிசை ஆர்வத்தைத் தூண்டியுள்ளார். இதற்கான இசையறிவு,புலமை, அனுபவம் பெற்ற திரு. ஆத்மனாதன் ஐயா அவர்கள் கடந்த நாற்பது வருடங்களாக எண்ணிலடங்காத இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சமூகத்தின் ,அரசின் கடமை: மேற்கத்திய செவ்விசைக்குப் பல நாடுகள் செய்வதை, ஒரு தனி மனிதரே பெரும் நிறுவனமாக தமிழிசையின் மீட்டுருவாக்கம், கட்டமைப்பு, களப்பணியாற்றுவதை, பல்கலைக்கழகங்கள், கலைக் கழகங்கள் இவற்றுடன் இணைந்து எந்த எதிர்பார்ப்புமின்றி தமிழிசை வளர்ச்சிக்கு பணியாற்றுவதை, இந்திய, தமிழக அரசுகள், மற்றும் பெரு நிறுவனங்கள் கவனத்தில் கொண்டு அனைத்து ஆதரவையும் வழங்க வேண்டியது காலத்தின் அவசியம். தமிழ்ச்சமூகம் தமிழிசை எனும் செம்மையான வடிவம் செழிப்புற வேண்டுமெனில், இசைக்கடலின் அமுதாக நமக்குக் கிடைத்துள்ள இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை, திரு ஆத்மனாதன் ஐயாவின் இசைப் பயணத்தில் இணைந்து குழந்தைகளுக்கு தமிழிசையை பயிற்றுவிப்பது, குடும்பத்தின் , நிறுவனங்களின் அனைத்து விழாக்களிலும் தமிழிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதை கடமையாகக் கொள்வோம். மேற்சொன்ன சிறந்த பண்பு நலன்கள் கொண்ட பேராசான் திரு.ஆத்மனாதன் ஐயா அவர்கள் இசைக்கடலின் அமுதாக நமக்குத் தமிழிசையை வாரி வழங்குவதற்கு மனமார்ந்த நன்றியை இந்தக் கட்டுரை வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் அரும்பணிக்கு உற்ற துணையாய் இருக்கும் பல்கலைக் கழகங்கள், நிறுவனங்களுக்கும் நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளேன். |
||||||||
by Swathi on 11 Mar 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|