LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பாறைகளைப் பிளக்கும் விதைகள் - அத்தியாயம் 9

பாறைகளைப் பிளக்கும் விதைகள்


"உனக்குத் தேவையில்லாத விசயங்களில் தலையிடாதே? முதலாளி இந்தப் பொறுப்பை உனக்குக் கொடுத்ததும் நீ என்ன பெரிய ஆள்ன்னு நினைப்போ? உனக்கு என்ன வேலை கொடுத்து இருக்கின்றார்களோ அதை மட்டும் பார்?


நான் இங்கே பத்து வருசமா இருக்கேன். உன்னை மாதிரி மாதம் ஐந்து பேர்கள் வந்து போய்க் கொண்டு இருக்கானுங்க. நீ இங்கே எத்தனை நாளைக்குத் தாக்கு பிடித்து நிற்பாய்? என்று எனக்குத் தெரியும்? நோண்டற வேலையை விட்டு விடு?புரியுதா?" என்றார்.


மரியாதைக்காக என்றார் என்று எழுதி இருக்கின்றேனே தவிர மிரட்டினான் என்று தான் எழுத வேண்டும். காரணம் எங்கள் இருவருக்கும் நடந்த அரைமணி நேர வாக்குவாதத்தின் இறுதியில் இப்படியான மிரட்டலை அவன் என்னிடம் சொன்னான்.


முதல் முதலாக அவனுடன் அறிமுகமான நாள் என்பது என் வாழ்வின் மிக முக்கியமான நாளாகும். காரணம் என் பொறுமையின் எல்லை என்பதை அன்று தான் என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. நான் அன்று அவனிடம் அமைதியான முறையில் தான் எதிர் கொண்டேன். 'நம் மீது தவறேதும் இல்லாத போது நாம் ஏன் கோபப்பட வேண்டும்?' என்ற என் கொள்கையின் காரணமாக அவன் தொடர்ந்து என்னைக் கோபப்படுத்திக் கொண்டே இருந்த போதிலும் சிரித்துக் கொண்டே நிற்க அவனுக்கு மேலும் ஆத்திரம் அதிகமாகி வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருந்தான்.


"கடமையே கண்" போல நான் தொடர்ந்து கேள்வியாகக் கேட்க அவன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று கத்தத் தொடங்கினான்.


அவனைச் சுற்றிலும் ஏராளமான பேர்கள் அங்கே நின்று கொண்டிருந்தனர். மேலும் பலரும் வந்து போய்க் கொண்டிருந்தனர். அத்தனை பேர்களுக்கும் அவன் தேவதூதனாகத் தெரிந்தான். அங்கே வந்திருந்த சிலர் அவன் எப்போது தங்களிடம் பேசுவான் என்று காத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பவ்யமாக நின்று கொண்டிருந்தார்கள்.


ஆனால் அவன் என் பார்வையில் அக்மார்க் பொறுக்கியாகத் தெரிந்தான். அவன் இருந்த பதவியின் காரணமாக அவனுக்கு அங்கே ஒரு ராஜாங்கம் அமைந்து இருந்தது.


அரசியல்வாதிகளுக்கும் மத்திய தணிக்கை துறைக்கும் எப்போதும் ஏழரை தான் என்பதை நாம் பத்திரிக்கையின் படித்துருப்போம் தானே?


என்னையும் அப்படித்தான் அவன் பார்த்தான். நேற்று வந்தவன் இவன் ஏன் நம்மைக் கேள்வி கேட்க வேண்டும்? என்ற எண்ணம் தான் அவன் மனதில் மேலோங்கி நின்றது. நான் கேட்ட ஆவணங்களை அவனால் கொடுக்க வாய்ப்பிருந்த போதும் அதைத் தவிர்க்கவே முயற்சித்தான். இது குறித்து நான் கேட்ட போதெல்லாம் ஏளனப்படுத்தினான்.


அவன் அங்கே அமர்ந்திருந்த விதமே எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. தன்னுடைய கனத்த உருவத்தைக் கஷ்டப்பட்டு அவன் அமர்ந்திருந்த நாற்காலியில் திணித்து அமர்ந்து இருந்தான். அவனைச் சுற்றி ஏராளமான ஜால்ரா கோஷ்டிகள் இருந்தது. அவன் பேச்சை நிறுத்தும் போது அவர்களும் கூடவே சேர்ந்து என்னை மிரட்டிக் கொண்டிருந்தனர்.


கட்டைக்குரலில் அவன் என்னை நோக்கி பேச அவனின் மொத்த உடம்பும் குலுங்கி நின்றதை வேடிக்கை பார்க்கும்படி இருந்தது. ஒவ்வொரு வார்த்தையும் மிரட்டலாகத்தான் வந்து கொண்டிருந்தது. காரணம் அவன் முழுமையான பயத்தில் இருந்தான். நான் மிகக் கவனமாக அவன் தவிர்க்கவே முடியாத அளவிற்குக் கட்டம் கட்டி உள்ளே நிறுத்தி இருந்தேன்.

 

Yarn


ஆயத்த ஆடைத்துறையில் உள்ள ஒரு நிறுவனத்தின் கீழ் பலதுறைகள் உள்ளது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன் அல்லவா?


அவன் இருந்த துறையின் பெயர் FABRIC DEPARTMENT.


ஒரு ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் ஆணி வேராக இருப்பது இந்தத் துறையே.


நான் பணியாற்றிய அந்த நிறுவனத்தின் மொத்த உற்பத்திக்கும் தேவைப்படுகின்ற துணிகளைத் தயார் செய்து கொடுப்பது இவனின் வேலையாக இருந்தது. இவன் வகித்த பதவியின் பெயர் FABRIC MANAGER. இவனின் முக்கிய வேலை என்பது முதலாளி காகிதத்தில் கொடுக்கின்ற ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் தேவைப்படுகின்ற துணியை இவன் தயார் செய்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் தேவையான நூல் இவன் பொறுப்புக்கு வந்துவிடும்.


ஒரு நூல் பை என்பது அறுபது கிலோ இருக்கும். இவன் நிட்டிங் என்று சொல்லப்படுகின்ற அறவு எந்திரங்களில் கொடுக்கப்பட்ட அளவுகளில் ஓட்டி அதனை முதலில் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகே தயாரான துணியைத் தரம் வாரியாகப் பிரித்துச் சாயப்பட்டறைகளுக்கு அனுப்ப வேண்டும். வண்ணத் துணியைக் காம்பாக்ட்டிங் என்ற மற்றொரு பகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். வண்ணமேற்றிய துணி வெட்டுவதற்கு ஏதுவான முறையில் மாற்றப்பட்டு விடும். மீண்டும் ஒரு முறை அந்தத் துணியைத் தரம் பார்த்து சோதிக்க வேண்டும். கடைசியாக மடிப்பு கலையாத அழகான துணியாக உற்பத்தித் துறைக்கு வந்து விடும். இந்தத்துணியை இவனின் பொறுப்பில் உள்ளவர்கள் CUTTING SECTION என்று சொல்லப்படுகின்ற உற்பத்தித் துறையின் தொடக்க நிலைக்குக் கொடுக்கப்பட வேண்டும்.


துணி சார்ந்த இந்தத்துறையில் உள்ளவர்கள் மற்றொன்றையும் கட்டாயம் கவனிக்க வேண்டும். கட்டிங் துறைக்குக் கொடுத்த பின்பு அங்கிருப்பவர்கள் சரியான அளவில் வெட்டுகின்றார்களா? என்பதைக் கவனிக்க வேண்டும். நிர்ணயித்த அளவைவிடக் கட்டிங் மாஸ்டர்கள் வெட்டி விடக்கூடும். கடைசியில் எங்களுக்குத் துணி போதாது. இன்னும் வேண்டும் என்று கட்டிங் இன்சார்ஜ் துணித்துறையில் வந்து நிற்பார்கள். இந்த இடத்தில் தான் இவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.


ஆயத்த ஆடைத்துறையில் பயன் படுத்தப்படும் நூல்களில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு விதமான ஆடைகளுக்கு உதவும். இது போன்ற விசயங்களை மிக நுணுக்கமாகக் கவனித்துக் கணக்கீடு செய்வதற்கு ஆயத்த ஆடைத்துறையில் PATTERN MASTER என்றொரு கில்லாடி இருப்பார். வெளிநாடுகளில் இருந்து ஒரு ஒப்பந்தம் வந்ததும் முதலாளி மேலோட்டமாகப் பார்வையிட்டு முடித்ததும் இவர்கள் கையில் அந்தக் காகிதத்தை நிர்வாகம் கொடுக்கும். இவர்கள் அதில் உள்ள விபரங்களை வைத்துக் கொண்டு தங்கள் வேலைகளைத் தொடங்குவார்கள்.

 

ஒவ்வொரு விசயமாக எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட ஆடைக்குத் தகுந்தாற் போல் வெளிநாட்டுக்காரர் எதிர்பார்க்கும் அளவை வைத்துக் கொண்டு மாதிரி அட்டை ஒன்றை உருவாக்குவார்.


உருவாக்கிய முதல் அட்டையின்படி தான் கையில் வைத்துள்ள ஏதோவொரு துணியில் வந்த ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஆடையில் உள்ள அனைத்து பாகங்களையும் வெட்டி தைக்கக் சொல்லிப் பார்ப்பார். வந்த ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்ட அளவுகள் அனைத்தும் தைக்கப்பட்ட துணியில் உள்ளதா? என்பதைப் பார்த்து விட்டு மொத்த ஒப்பந்தத்திற்கும் உண்டான கணக்கீடுகளைப் போட தொடங்குவார். கடைசியில் ஒரு ஆடைக்குண்டான நூல் அளவு தெரியவரும். அதன்படி தனது வேலைகளைப் பேட்டன் மாஸ்டர் தொடங்குவார்.

 

Knitting


ஒரு ஆடை என்றால் S.M.L.XL என்று பல அளவுகள் இருக்கும். இது போன்ற பல விபரங்களையும், நூலில் அளவுகளையும், நூலின் தரத்தையும் காகிதத்தில் எழுதி முதலாளி கையில் கொடுத்து விடுவார். 15 ஆண்டுகளுக்கு முன் பேட்டன் மாஸ்டர்களைப் பார்த்து முதலாளிகள் பயந்த காலமுண்டு.


முன் கோபக்காரர்களாகவும் சுய கௌரவம் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தான் ஒரு ஆடை உருவாக்கத்திற்குத் தேவையான அத்தனை அடிப்படையான வேலைகளையும் செய்து கொடுப்பார்கள். எந்த நிர்வாகமும் இவர்களைச் சங்கடப்படுத்தாமல் சுகவாசியாக வைத்திருப்பார்கள்.


ஒரு ஆடைக்கு எத்தனை கிராம் நூல் தேவைப்படுகின்றது என்ற கணக்கின் அடிப்படையில் திட்ட மதிப்பீடு உருவாக்கப்படும். ஆனால் காலமாற்றத்தில் விஞ்ஞான முன்னேற்றத்தில் இன்று எல்லாமே வெளிப்படையாக மாறி விட்டது. தற்பொழுது ஆயத்த ஆடைத்துறையில் உள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் தனிப்பட்ட படிப்புகள் வந்து விட்டது. இது போன்ற படிப்புகள் படித்து விட்டு வருபவர்களும், நவீன வசதிகளைப் பயன்படுத்த தெரிந்தவர்கள் எவராயினும் இந்த நுணுக்கங்களை எளிதில் கற்றுக் கொள்ள முடியும்.


இன்று பேட்டன் மாஸ்டர் என்ற பதவியில் இருந்த அத்தனை பேர்களும் காணாமல் போய் விட்டார்கள். தற்போதைய சூழ்நிலையில் பேட்டன் மாஸ்டர்கள் ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் செய்து கொடுத்த வேலைகள் அனைத்தையும் எந்திரங்கள் செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இவர்கள் நூறுக்கும் இருநூறுக்கும் தன்மானத்தை இழந்து பரிதாபமாக ஒவ்வொரு நிறுவனமாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.


கால மாற்றம் என்பது கரை தெரியாமல் ஓடும் வெள்ளம் போன்றது. இதிலும் மாறிக் கொண்டே வரும் மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளபவர்களால் மட்டுமே பிழைத்து கரை சேர முடியும் என்பது உலக நியதி தானே?


நூலை துணியாக மாற்றும் துறையில் பல துணைத் துறைகள் உள்ளது. பெரிய ஒப்பந்தமாக இருந்தால் அவசர கதியில் செயல்பட வேண்டும். பத்துக்கும் மேற்பட்ட அறவு எந்திரங்கள் வைத்திருக்கும் துணை நிறுவனங்களுக்கு நூல் கொடுத்து ஓட்டை இல்லாமல் அளவு மாறாமல் ஓட்டி கொண்டு வர வேண்டும். தினந்தோறும் அறவு எந்திரங்கள் வைத்திருக்கும் நிறுவனங்களுக்குத் தரம் பார்க்கத் செல்கின்றவர்கள் தொடர்ந்து செல்ல வேண்டும். அறவு எந்திரங்கள் வைத்திருக்கும் துணை நிறுவனங்கள் இரண்டு ஷிப்ட் என்கிற கணக்கில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டுருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் அவர்கள் தயாரித்து வைத்துள்ள துணியை ஒவ்வொரு நாளும் நிறுவனத்தின் சார்பாக அங்கே செல்பவர்கள் அதற்கென்ற தனியாக வடிவமைக்கப்பட்ட எந்திரங்களில் சோதித்து எதிர்பார்த்த தரத்துடன் துணி சரியாக உள்ளதா? என்பதைப் பார்க்க வேண்டும். இது போன்ற கண்காணிக்கும் நபர்களை மேலே இருப்பவர்கள் கவனமாகக் கையாள வேண்டும்.


இவர்கள் தினந்தோறும் அந்தந்த அறவு எந்திரங்கள் உள்ள நிறுவனத்திற்குத்தான் செல்கின்றார்களா? என்பதைக் கண்காணித்தே ஆக வேண்டும். இடைச் செருகலாக என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.


நிறுவனத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்கு வழங்கப்பட்ட நூல் பைகளை வேறு இடத்திற்கு மாற்றுதல், இடையில் எடுத்து விற்று விடுதல், அளவு குறைத்து கொடுத்தல், கமிஷனுக்கு ஆசைப்பட்டு பல மோசமான விசயங்களைச் செய்பவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் இந்தத் துறைக்குத் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு இரண்டு முக்கியக் கடமைகள் உண்டு.


ஒன்று ஒழுக்கமானவராக இருத்தல் வேண்டும். மற்றொன்று நேர்மையான கொள்கை கொண்டவராக இருக்க வேண்டும்.


என்னிடம் உரையாடியவனிடம் இந்த இரண்டு தகுதியும் பூஜ்யம் மதிப்பெண்ணில் தான் இருந்தான். மாசு மருவற்ற பொறுக்கி என்று கூடச் சொல்லலாம். அவன் இங்கே இருக்க முக்கியக் காரணம் அவனின் தங்கை கணவன் மெர்சன்டைசர் துறையில் முதலாளியின் உள்வட்டத்தின் முக்கிய நிலையில் முதன்மை ஆளாக இருந்தான்.


நான் இந்த நிறுவனத்தில் நுழைந்தது முதல் என்னுடைய அத்தனை தன்மானத்தையும் இழக்க வேண்டியதாக இருந்தது. கேள்விகள் எதுவும் கேட்கமுடியாமல், எதனைப் பற்றியும் யோசிக்க முடியாமலும் செக்கில் பூட்டப்பட்ட மாடு போலச் சொல்ல முடியாத மன அழுத்தத்துடன் இருந்தேன். எனக்கு மேலே இருக்கும் ஒவ்வொருவரின் பேச்சையும் கேட்க வேண்டிய சூழ்நிலையில் தான் இருந்தேன். நாம் என்ன பதவிக்கு இங்கே உள்ளே வந்தோம் என்பதையே மறக்கும் சூழ்நிலையில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

 

Yarn Bundle


அங்கே ஒவ்வொருவரும் சொல்லக்கூடிய எடுபிடி வேலைகளைச் செய்து விட்டு இரவு எப்போதும் வரும்? எப்போது வீட்டுக்குப் போகலாம் என்று நாட்களைத் தள்ளிக் கொண்டிருந்தேன்.


ஆனால் என் மனதில் தனிப்பட்ட வைராக்கியம் வைத்திருந்தேன். இங்கே இருந்து கிளம்புவதற்கு முன் நான் யார்? என்பதை இந்த நிறுவனத்திற்கு உணர்த்தி விட்டுச் செல்ல வேண்டும் என்பதைக் கொள்கையாகவே வைத்திருந்தேன். நான் எதிர்பார்த்துக் காத்திருந்த நாளும் வந்தது. அன்று தான் எதிர்பாராத திருப்புமுனை நிகழ்ச்சி ஒன்று நடந்தது.


முதலாளி குறிப்பிட்ட விபரங்கள் குறித்துக் கேட்பதற்காகக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். கூட்டத்தில் அவர் கேட்ட பல ஒப்பந்தங்கள் தொடர்பான விபரங்கள் குறித்து எவருக்கும் தெரியவில்லை. முக்கியத் தலைகள் அனைவரும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.


அவர் குறிப்பிட்ட ஒப்பந்தத்திற்கு எடுத்த நூல் விபரமும் அது துணியான பிறகு உள்ளே வந்த விபரத்தையும் கேட்க கூட்டத்தில் அங்கே இருந்த அத்தனை பேர்களும் திருதிருவென்று விழித்தனர். சிலர் சொன்ன தகவல்களும் தவறாக இருந்தது. குறிப்பாகத் துணிக்கு பொறுப்பான நபர்கள் அத்தனை பேர்களும் அமைதியாக இருந்தார்கள். அவர் கேட்ட தகவல்கள் என்னிடம் இருந்தது. நான் அதுவரையிலும் முதலாளியின் பார்வையில் பட்டதே இல்லை. அவரின் எடுபிடிகள் தான் என்னை இயக்கிக் கொண்டிருந்தார்கள். நாம் சொல்லலாமா? என்று யோசித்துக் கொண்டே மொத்த கூட்டத்தையும் அங்கே நடந்த உரையாடல்களையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தேன்.


நாம் இடைமறித்துப் பேசினால் வேறேதும் விபரீதம் உருவாகுமோ? இவர் நம்மை ஏற்றுக் கொள்வாரா? இல்லை எப்போதும் போல ஏச்சு தான் கிடைக்குமா? என்று மனதில் தடுமாறிய போதும் கூட இந்தச் சமயத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் என்னுள் உருவானது.


நான் என் நோட்டில் குறித்து வைத்திருந்த விபரங்கள் அனைத்தையும் ஒரு காகிதத்தில் எழுதி அவரிடம் கொண்டு போய்க் கொடுத்து விட்டு என் இருக்கையில் வந்து அமர்ந்தேன். முகம் முழுக்க வேர்த்துக் கொட்டியது. படபடப்பு அடங்க நேரமானது.


நான் செய்த உருப்படியான காரியம் என்பது காகிதத்தில் எழுதிக் கொடுத்தும் என் எழுத்து முத்து முத்தாக அழகாக இருந்ததையும் பார்த்தவுடன் கீழே எழுதியிருந்த என் பெயரைப் பார்த்து விட்டு என்னை அழைத்தார்.


அப்போது தான் என்னைப் பற்றி எந்தத் துறையில் இருக்கின்றேன் போன்ற அனைத்து விபரங்களையும் விசாரித்தார். தயக்கத்துடன் என்னைப் பற்றி என் கடந்த கால அனுபவத்தையும், உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்ததையும் பற்றி அவரிடம் சொல்லிவிட்டு வந்தமர்ந்தேன். மொத்த கூட்டத்திலும் ஒரு பேரமைதி நிலவியது.


பக்கத்தில் இருந்த அவரின் ஜால்ராவிடம் சற்று கடிந்து கொண்டு "ஏன் இது போன்ற பையன்களை இப்படி வீணாக்கிக் கொண்டிருக்கீங்க" என்றார்.


அவரோ சம்பந்தம் இல்லாமல் உளறிக் கொண்டிருந்தார். அப்போது தான் மற்றொரு பயம் என் மனதில் உருவானது. நிச்சயம் உள்ளே இருக்கும் ஜால்ரா கோஷ்டியினர் நம்மை உள்ளே இருக்க விடமாட்டார்கள் என்ற எண்ணியபடி இனி இங்கே இருக்கப் போகும் மணித்துளியை எண்ணியபடி கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்தேன்.


கூட்டம் கலைந்து வெளியே வந்து கொண்டிருந்த போது முதலாளியின் உதவியாளராக இருந்த பெண்மணி என் பெயரைச் சொல்லி சப்தமாக அழைத்தார். அப்போது தான் என் பெயர் இந்த நிறுவனத்தில் உச்சரிக்கப்பட்டது என்பதை யோசித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் அழைத்த பெண்மணியுடன் முதலாளி அறைக்குச் சென்றேன். அங்கே எனக்குச் சீனியர் என்ற நிலையில் இருந்தவர்களுடன் இன்னும் பலரும் இருந்தனர்.


"இன்று முதல் இந்தப் பையன் என் நேரிடையான கட்டுப்பாட்டில் இருப்பான். ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் உண்டான அனைத்து விபரங்களையும் கணக்கு விபரங்களையும் ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் இவனிடம் கொடுக்க வேண்டும். இவன் சரிபார்த்து நான் கையெழுத்து போட்டால் மட்டுமே நீங்க அந்தப் பில்லை பாஸ் செய்ய வேண்டும்" என்று மற்றொரு நபரிடம் உத்தரவு கொடுத்த போது மொத்த கூட்டமும் என்னை வெறுப்புடன் பார்த்தது.


வாழ்க்கை என்பது இப்படித்தான் இந்தப் பாதை தான் என்பதையும் எவராலும் அறுதியிட்டு கூறிவிடமுடியாது. வாய்ப்புகள் எங்கிருந்து வரும்? எவரிடமிருந்து வரும் என்று கூட யோசிக்க முடியாது. வருகின்ற சமயத்தில் சரியாக வந்துவிடும். நாம் தான் எப்போதும் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். எடுபிடி போல என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்களே என்ற ஆதங்கம் மனதிற்குள் இருந்தாலும் கொடுக்கப்பட்ட வேலையை ஒவ்வொரு நாளும் மிகத் தெளிவாகச் செய்து கொண்டே வந்தேன்.

 

T-Shirt - Sample


ஒவ்வொன்றையும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வது எனது வாடிக்கை. அந்தப் பழக்கம் இப்போது எனக்குக் கை கொடுத்தது. இதன் காரணமாகத்தான் முதலாளி கேட்ட தகவல்களை உடனடியாக என்னால் கொடுக்க முடிந்தது.


அவர் மனதில் என்ன நினைத்தாரோ தனித்தனி தீவுகளாக இருந்த ஒவ்வொரு துறைக்கும் உண்டான கணக்கு வழக்குகளையும் என்னை எடுத்து தரச் சொன்னார். வாரத்தில் மூன்று நாட்கள் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அவரைப் பார்க்க அனுமதித்த போது உள்ளே மகிழ்ச்சியாக இருந்தாலும் நிச்சயம் இந்தப் பதவி நம்மைக் காவு வாங்கப் போகின்றது. நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதை மனதில் குறித்து வைத்துக் கொண்டேன்.


காரணம் அந்த நிறுவனத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த கணினிகளில் துணி சார்ந்த கணக்கு என்ற பெயரில் எல்லாவற்றையும் நிரப்பி வைத்திருந்தார்களே தவிர அவை அனைத்தும் தீர்க்க முடியாத வழக்காகவே இருந்தது.


எல்லா இடங்களிலும் விடுபட்டுப் போயிருந்த இடங்கள் அதிகமாக இருந்தது. ஆயிரம் கிலோ நூல் உள்ளே வந்திருந்தால் அது வண்ணத் துணியாக மாறி வந்த போது நூறு கிலோ காணாமல் போயிருந்தது. அதற்கான காரணங்களைத் துழாவும் போது அடுத்தடுத்த ஒப்பந்தங்கள் உள்ளே வந்து கொண்டிருக்க நிர்வாகம் அதன் பின் ஓடிக் கொண்டேயிருக்க மூன்று மாதங்களில் மூவாயிரம் கிலோ நூலுக்குக் கணக்கு என்பதே இல்லை என்ற நிலையில் இருந்தது.


உள்ளே பணிபுரிந்தவர்களில் முதலாளியின் உறவுக்கூட்டம் ஒரு பக்கம், நிறுவனம் தொடங்கியது முதல் இருந்தவர்கள் மறு பக்கம்.


இவர்கள் அத்தனை பேர்களும் முதலாளியின் 'நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள்' என்ற நிலையில் இருந்தார்கள். முதலாளியால் தடாலாடியாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்ததை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. மேலும் புதிதாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுவனத்தின் உள்ளே வருகின்றார் என்றால் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறி விட மாதந்தோறும் புதிய நபர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள்.


உள்ளே பணியில் இருந்த பழைய நபர்கள் வைத்ததே சட்டம் என்கிற நிலையில் நிர்வாகம் நடந்து கொண்டிருந்தது.


முதலாளி பழைய நபர்களைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலையில் இருந்தார். நான் மட்டும் விதி விலக்காக மூன்றாவது மாதம் வரைக்கும் தாக்குப்பிடித்து நிற்க அதுவே உள்ளே இருந்த பலருக்கும் பெரிய எரிச்சலை உருவாக்கிக் கொண்டிருந்தது. இப்போது முதலாளி புதிய பொறுப்பை அதுவும் அவருடைய நேரிடையான கட்டுப்பாட்டில் என்கிற ரீதியில் என்னைக் கொண்டு வந்து நிறுத்த திருடனுக்குத் தேள் கொட்டியது போலப் பலருக்கும் உள்ளே நடுக்கத்தை உருவாக்கத் தொடங்கியது. காரணம் முதலாளி என்னிடம் வழங்கிய வேலை என்பது அங்கேயிருந்த பலருக்கும் சம்பளம் தவிர்த்துப் பலவிதங்களில் வருமானத்தை அளித்துக் கொண்டிருந்தது. எனக்கு அரசல்புரசலாக இது குறித்துத் தெரிந்த போதிலும் இது குறித்து நாம் ஏன் அக்கறைப்பட வேண்டும்? என்ற எண்ணத்தில் காதில் வாங்கிக் கொண்டிருந்த ஒவ்வொரு செய்திகளையும் எவருடனும் பகிர்ந்து கொள்ளாமல் எனக்குள்ளே வைத்திருந்தேன்.


ரகசியம் என்பது நம்முடன் இருக்கும் வரையிலும் மட்டுமே. அடுத்து ஒருவரிடம் அது குறித்துப் பேசினால் அதற்குப் பெயர் ரகசியம் அல்ல. மெதுவாகச் செய்தியாக மாறி விடும். பலசமயம் வதந்தியாக மாறி பல விபரிதங்களை நம்மிடமே கொண்டு வந்து சேர்த்து விடும்.


தொடக்கத்திலேயே முதலாளியிடம் எனக்கு உதவியாளர் தேவையில்லை என்று சொல்லிவிட்டேன். அதற்குக் காரணமும் உண்டு. உள்ளே இருந்த பெரும்பாலான அத்தனை பெண்களும் பதினெட்டு வயதுக்கு அருகே இருந்தார்கள். எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பில் ஒரு பெண்ணைக் கொண்டு வந்து உட்கார வைத்தால் அதுவும் உள்ளே இருக்கும் மற்றவர்களுடன் பழகியவராக இருக்கும் பட்சதில் எந்தத் தகவல் எப்போது யாருக்குப் போய்ச் சேருமோ? என்ற கவலையோடு வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அடுத்துப் பெண் என்பதால் உருவாக வாய்ப்புள்ள பிரச்சனைகளின் காரணமாக எனக்கு உதவியாளரே தேவையில்லை என்று தவிர்த்து விட்டேன்.


இந்த இடத்தில் ஆயத்த ஆடை உலகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் நூல் உலகத்தைப் பற்றி நாம் பேசியாக வேண்டும்.


நூலை ஆங்கிலத்தில் YARN என்கிறார்கள். ஆனால் இந்தத் துறையில் நூல் விசயத்தைச் சரியான முறையில் கையாளத் தெரியாவிட்டால் நீ யார்? என்று கேட்டு ஒவ்வொரு முதலாளியையும் தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விடும். காரணம் நூல் தான் இந்தத் தொழிலுக்கும் ஆதாரம். இதுவே தான் அஸ்திவாரம்.


ஒவ்வொரு நிறுவனத்திலும் நூல் வாங்கும் பொறுப்பு முதலாளி கையில் மட்டுமே இருக்கும். காரணம் ஒரே சமயத்தில் பல கோடிகளை ஒரே நாளில் கொடுத்து வாங்க வேண்டும்.


கடன் கேட்டாலும் முதலாளியின் நம்பகத்தன்மையைப் பொறுத்து நூற்பாலைகளைக் கொடுக்கும் நிலையில் இருப்பார்கள். மாதம் ஒரு நாள் பல சமயம் வாரம் ஒரு நாள் இரண்டு மூன்று கோடிகளுக்கு நூல் வாங்க வேண்டியதாக இருக்கும். இதுபோன்ற நிலையில் அறிமுகம் இல்லாதவர்களின் கையில் நூல் வாங்கும் பொறுப்பைக் கொடுத்து விட்டால் மிகப் பெரிய பஞ்சாயத்து உருவாக வாய்ப்பு அதிகம். தரமற்ற நூல்களைக் கமிஷனுக்காக வாங்கிவிட்டுக் கடைசியில் நிறுவனத்தைத் தெருவில் நிறுத்தி விடுவார்கள் என்பதை மனதில் கொண்டே எந்த முதலாளியும் நூல் வாங்கும் பொறுப்பை வேறு எவர் கையிலும் கொடுப்பதில்லை.


இந்த மில் நூல் இத்தனை பைகள் வருகின்றது என்று தனக்குக் கீழே உள்ள பேப்ரிக் டிபார்ட்மெண்ட் கையில் கொடுத்து விடுவார்கள். இது போன்ற தனித்தனி துறைகள் என்பது 15 வருடங்களுக்கு முன்பு நினைத்தே பார்த்திருக்க முடியாது.


கடந்த ஏழெட்டு வருடங்களில் திருப்பூரில் உள்ள ஆய்த்த ஆடை நிறுவனங்களில் உருவாக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளில் பல மாறுதல்கள் உருவாகியுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் தனியான ஆட்கள், இணைய வசதிகளுடன் தனித்தனி கணினிகள்.


கூடவே ஆள், அம்பு, சேனைகள் மற்றும் அவரவர் வைத்திருக்கும் வாகனத்திற்குப் பெட்ரோல் என்று பலவிதமான வசதிகளை முதலாளிகள் உருவாக்கிக் கொடுத்து இருக்கின்றார்கள்.


15 வருடங்களுக்கு முன்னால் ஒரே நபர் தான் அனைத்து வேலைகளையும் பார்க்க வேண்டும்.


கணக்குபுள்ள அல்லது சூப்ரவைசர் என்ற வார்த்தைக்குள் அவரின் பதவி அடங்கி விடும். ஆனால் இன்று எல்லாமே மாறி விட்டது. இந்தத்துறைப் பற்றி எதுவும் தெரியாமல் உள்ளே நுழைபவர் பேசத் தொடங்கும் போதே என் சம்பளம் என்ன? என்று கேட்கும் அளவிற்கு ஒவ்வொருவரின் மனோபாவமும் மாறியுள்ளது.


ஆனால் என்னைப் போலப் படிப்படியான உழைப்புடன் கூடிய வளர்ச்சியை இன்றைய சூழ்நிலையில் எவரிடமும் எதிர்பார்க்க முடியாது. மூன்று மாதங்கள் மட்டுமே பணிபுரிந்து விட்டு நான்காவது மாதம் அடுத்த நிறுவனங்களில் நுழைந்து, தான் கற்று வைத்துள்ள அரைகுறை அறிவுடன் ஆங்கில அறிவையும் வைத்து மாதம் இருபதாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் பலரையும் எனக்குத் தெரியும். இந்த நிறுவனத்தில் இதைப் போலப் பலரும் இருந்தனர்.


துணித்துறையில் இருந்தவன் துணி சார்ந்த அறிவில் முன் அனுபவம் எதுவும் இல்லாதவனாகத்தான் இருந்தான். அவனுடன் உரையாடிய போதே என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.


துணி சார்ந்த விசயங்களில் அனுபவம் இல்லாத போதும் "மற்ற அத்தனை விசயங்களிலும்" பழம் தின்று கொட்டை போட்டவன் மட்டுமல்ல. கொட்டையையும் மென்று தின்று துப்பக்கூடியவன் என்பதை அடுத்த இரண்டு நாளில் புரிந்து கொண்டேன்.


நான் அந்த நிறுவனத்தில் நுழைந்த போது எதிர்பார்த்துச் சென்ற பதவிக்கும் எனக்கு வழங்கப்பட்ட பதவிக்கும் சம்மந்தம் இல்லை. இவருக்குக் கீழே நீங்கள் மூன்று மாதங்கள் பணியாற்ற வேண்டும் என்று ஒருவரை என்னிடம் சுட்டிக்காட்டினார்கள். அவரைத்தான் சீனியர் என்றார்கள். என்னைப் போல ஏழெட்டுப் பேர்கள் ஏற்கனவே அவருக்குக் கீழே பணியாற்றிக் கொண்டு இருந்தார்கள்.


பெரும்பாலும் கூட்டத்தோடு கோவிந்தா என்கிற நிலையில் தான் உள்ளே இருந்த பணிச்சூழல் இருந்தது. எவர் என்னை வேலை பார்க்கின்றார்கள்? என்பதையே கண்டு கொள்வதை எனக்குப் புரிந்து கொள்ளவதே சற்றுக் கடினமாக இருந்தது.


கடினமான சூழ்நிலைகள் நம்மை நமக்கே அடையாளம் காட்டும். நம்மிடம் உள்ள தகுதிகளை அதுவே இனம் பிரித்துக் காட்டிவிடும். அப்படித்தான் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.


ஆனால் இந்த நிறுவனத்தில் அஸ்திவாரம் என்பது செங்கரையான்களால் சூழப்பட்டு இருந்தது.


என் வேட்டை தொடங்கியது. பலரின் விளையாட்டும் வெளியே தெரிய வந்தது. வேட்டையாடு விளையாடு என்று என் தினப்பொழுதுகளும் கழியத் தொடங்கியது.


பேப்ரிக் மேனேஜர் என்ற பொறுப்பில் இருந்தவனின் மிரட்டலை மீறி பழைய டெலிவரி சலான் ஒவ்வொன்றையும் நோண்டிக் கொண்டே செல்ல பல புதிர்கள் அவிழத் தொடங்கியது.


அதற்கான விளைவுகள் நள்ளிரவில் அலைபேசியில் எனக்குக் கொலை மிரட்டல் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது. 


குறிப்புகள் தொடரும்.....

by Swathi   on 25 Sep 2014  10 Comments
Tags: Jothiji Tirupur   Tirupur Textile Industry   Tirupur Jothiji   Tiruppur Jothiji Articles   Tiruppur Jothiji E-Books   Oru Tholitchalaiyin Kurippugal   திருப்பூர் பின்னலாடை தொழில்  
 தொடர்புடையவை-Related Articles
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பாறைகளைப் பிளக்கும் விதைகள் -  அத்தியாயம் 9 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பாறைகளைப் பிளக்கும் விதைகள் - அத்தியாயம் 9
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பலி கொடுத்து விடு -  அத்தியாயம் 8 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பலி கொடுத்து விடு - அத்தியாயம் 8
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : உழைத்து (மட்டும்) வாழ்ந்திடாதே - அத்தியாயம் 7 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : உழைத்து (மட்டும்) வாழ்ந்திடாதே - அத்தியாயம் 7
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பஞ்சபாண்டவர்கள் - முதல் அத்தியாயம் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பஞ்சபாண்டவர்கள் - முதல் அத்தியாயம்
கருத்துகள்
15-Oct-2014 07:09:50 jayakumar said : Report Abuse
Fantastic...super. ..
 
03-Oct-2014 02:39:58 டி.என் முரளிதரன் said : Report Abuse
ஒரு சினிமா பார்ப்பது போல பரப்பரப்பாக செல்கிறது தொடர். திறமை இருப்பவர்க்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணரமுடிகிறது . அந்த வாய்ப்பை திறம்படப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு சிறந்த முன் உதாரணம் நீங்கள்.
 
30-Sep-2014 09:05:38 கிருஷ்ணமூர்த்தி said : Report Abuse
அற்புதம் .வெகு தீவிர எதிர் நீச்சல் போட்டுத்தான் நீங்கள் இந்த இடத்தை தக்க வைத்துள்ளீர்கள் என்பதை அறியும்போது ஒரு பக்கம் சந்தோசமாகவும் இன்னொரு பக்கம் இதர்க்காக நீங்கள் வாழ்வின் எத்த்னை பெரும்பகுதியை இழந்து இருப்பீர்கள் என்பதை நினைத்தால் சோகமாகவும் நகர்கிறது .
 
28-Sep-2014 08:15:37 கார்த்திக் said : Report Abuse
நன்றாக உள்ளது...
 
27-Sep-2014 03:44:42 சா. சுரேஷ்பாபு said : Report Abuse
ஒரு கார்மெண்ட் கம்பெனி எப்படி செயல்படுகின்றது என்பதை மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்! பழம் தின்று கொட்டை போட்டவர்களை எப்படி கையாளப்போகிறீர்கள் என்று ஆவலாக உள்ளது. சுவாரஸ்யமான தொடர்! வாழ்த்துக்கள்!
 
27-Sep-2014 00:03:33 சே.குமார் said : Report Abuse
சுவராஸ்யமாய் இருந்தாலும் தங்களது நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைக்கும் போது மனசுக்குள் திக்.. திக்.. அண்ணா...
 
26-Sep-2014 20:12:29 துளசிதரன் தில்லை அகத்து /கீதா said : Report Abuse
"ஒவ்வொன்றையும் குறிப்பெடுத்துக் கொள்வது எனது வாடிக்கை...இப்போது கை கொடுத்தது..// அலுவலகப் பணி செய்வோர் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று !!! முதலில் நீங்கள் ஆராம்பத்தில் சொல்லி இருப்பது இங்குதான் சார் நிறைய ன்ஹடக்கின்றது. மேலை ன்ஹாடுகளில், ஒருவருக்கு ஒரு பணி ஒப்படைத்து விட்டால் முழுவதும் அவரது பொறுப்புதான். யாரும் அதிகள் தலை இடுவதில்லை...அந்தப் பழக்கம் இங்கும் வந்தால் நம் தொழிற்சாலைகள் இன்னும் மேலோங்கும்! உலக அளவில் பேசப்படும்! ந்ஹள்ள தகவல்கள் அடங்கிய வலிகள் அடங்கிய ஒரு குறொப்பேடு தங்களது இந்தத் தொடர்! வாழ்த்துக்கள் நண்பரே!
 
26-Sep-2014 12:24:06 பந்து said : Report Abuse
மிக மிக சுவாரஸ்யம்.. பிரித்து மேய்ந்து இருக்கிறீர்கள்!
 
26-Sep-2014 09:16:35 குறும்பன் said : Report Abuse
திக் திக் திக் அடுத்த அத்தியாயத்திற்கு காத்துக்கொண்டுள்ளேன்.
 
26-Sep-2014 05:42:49 drtv said : Report Abuse
ஹா! குட். சுவாரசியம் மீண்டும் தொடங்கிவிட்டது!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.