LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : உழைத்து (மட்டும்) வாழ்ந்திடாதே - அத்தியாயம் 7

உழைத்து (மட்டும்) வாழ்ந்திடாதே


"என்னால் தொடர்ந்து ஒரு மணி நேரம் கூட நேராக நிற்க முடியல அண்ணே. முதுகுவலி வாட்டி வதைக்குது. நானும் சாதாரண வலின்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன். ஆனா இன்றைக்குப் பெருவியாதி போல என்னைப் படுத்தி எடுக்குது. இந்தக் கம்பெனியிலே கடந்த நாலு வருஷமா டிவிஎஸ் 50 யை ஓட்டி இப்ப அந்த வண்டியை பார்த்தாலே பயமெடுக்குது. வெளியே நிக்கிற வண்டியைப் பாருங்க. தனியா விட்டுட்டு வந்தா எவனும் தூக்கிட்டுப் போகக்கூட ஆசைப்பட மாட்டான். இங்கே இருக்குற புதுவண்டிகளை அவனவன் எடுத்துக்கிட்டு என் தலையிலே இந்த வண்டியை கட்டிட்டானுங்க.


வேற வேலை கேட்டாலும் இங்கே என்னை ஆதரிப்பவர் யாருமில்லை. இங்கே எனக்குக் கொடுத்துருக்கிற வேலை, வெளியே சுத்துறது மட்டும். ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் என் தலையில் கட்டி விட்டு ஒதுங்கிடுவாங்க. நான் தான் வெளிவேலைகள் எல்லாவற்றுக்கும் பொறுப்பு. எங்க ஊர்ல இருக்கிற பாதி இடங்கள் கூட எனக்குத் தெரியாது. ஆனா திருப்பூருக்குள்ளே இருக்கிற அத்தனை சந்து பொந்துகளும் இந்த நாலு வருசத்துல பழக்கமாயிடுச்சு. தினசரி காலை எட்டரை மணிக்கு அலையத் தொடங்கினால் ராத்திரி எத்தனை மணிக்கு வந்து படுப்பேன்னு தெரியல.


இந்த வண்டியை எந்த வருஷத்துல வாங்குனாங்கன்னே தெரியல. என் உடம்பு பஞ்சராகி நாளுக்கு நாள் செயல்பட முடியாத நிலைமைக்குப் போய்விட்டது. யோசித்துப் பாருங்க. தினமும் 200 கிலோ மீட்டர் இந்த மாதிரி லெக்கடா வண்டியிலே இந்த ரோட்ல சுத்திக்கிட்டே இருந்தா உடம்பு என்னதுக்கு ஆகும்? எப்படா இந்த வேலையை விட்டுட்டு ஊருக்கு போகலாம்ன்னு இருக்கு. ஆனால் அங்கே போனா என்ன செய்யுறதுன்னு குழப்பமாக இருக்குங்க".


அந்த நள்ளிரவில் மாடசாமியுடன் பேசிய இரண்டு மணி உரையாடலில் கடைசியாகச் சொன்ன இந்த வாசகங்கள் தான் நான் கிளம்பி வரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன். நான் சென்ற வேலையில் கவனம் இருந்தாலும் அந்த நேரத்திலும் அவனின் சுறுசுறுப்பும் தொழிலில் காட்டிய நேர்மையும் என்னை வியக்க வைத்தது.


என்னுடன் வந்தவரிடம் அங்கே தயாராக இருந்த ஆய்த்த ஆடைகளைப் பண்டல் கட்டி அனுப்பி விட்டு மாடசாமியுடன் பேசத் துவங்கினேன். காரணம் அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகங்கள் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது என்பதை விடத் திருப்பூருக்குள் புத்தக வாசிப்பு உள்ளவரைப் பார்த்ததும் நான் திருப்பூருக்குள் காலடி வைப்பதற்கு முன் வாழ்ந்த புத்தக வாழ்க்கை என் நினைவுக்கு வந்தது.


தொழில் நகரங்களில் புத்தகங்களுக்கு மதிப்பில்லை என்பதை விட எல்லாவற்றையும் அந்தஸ்த்தின் அடிப்படையிலே பார்க்கும் பழக்கம் இருப்பதால் பணம் சார்ந்த விசயங்கள் மட்டுமே இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது. பேசினால் பணம். யோசித்தால் பணம் என்பதைத் தவிர வேறு எதையும் யோசிக்க மனமில்லாத இறுகிப்போன மனதோடு வாழவே பழகி விட்டனர். அதையே சமூகமும் "அங்கீகாரம்" என்கிற நிலையில் வைத்துப் பார்ப்பதால் ஒவ்வொருவரும் அதன்வழியே நடக்கவே விரும்புகின்றனர். சோர்ந்து போகும் மனதை எப்படி ஆறுதல் படுத்துவது என்பதை அறியாத முதலாளிகளுக்கும் சரி தொழிலாளிகளும் சரி கடைசியில் நாடுவது மதுக்கடைகளையே.


இங்கே பணம் தான் ஒவ்வொருவரையும் இயக்குகின்றது. பணம் தான் வாழ வேண்டும் என்ற ஆசையையும் வளர்க்கின்றது. பணம் இருந்தால் எல்லாமே கிடைத்து விடும் என்ற எண்ணத்திற்குச் சமூகம் மாறி வெகு நாளாகிவிட்டது. மற்ற அனைத்தும் தேவையற்ற ஒன்றாக மாறிவிட்டது.


தொழில் சமூகம் என்பதன் கொடூரமான உலகத்தில் ரசனைகள் என்பதை நினைத்துப் பார்க்க கூட முடியாது. அப்படி ரசனையுடன் வாழ விரும்புவர்களைத் தயவு தாட்சணமின்றி எட்டி உதைத்து வெளியே தள்ளி விடும் என்பதால் அவரவர் சுயபாதுகாப்பு கருதி முகமூடிகளைப் போட்டுக் கொண்டு தான் வாழ விரும்புகின்றார்கள்.


இவனுடன் ஏன் பேச வேண்டும்? இவன் எதற்கு நம்மை அழைக்கின்றான்? என்று அலைபேசியில் எண் வரும் பொழுதே பார்த்து எடுக்காமல் இருக்கும் பலரையும் எனக்குத் தெரியும். "உனக்குப் பணம் என்பது தேவையில்லாமல் இருக்கலாம். எனக்கு அது தான் முக்கியத் தேவையாக இருக்கின்றது. உன் எண்ணம் என்னிடம் வந்தாலும் அந்தப் பணம் வந்து என்னிடம் சேராது" என்று முகத்திற்கு நேராகச் சொன்னவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன். பணம் என்பதை வாசலில் மாக்கோலம் போட்டு பந்தல் கட்டி வரவேற்க்க காத்திருப்பவர்கள் போலத்தான் இங்கே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


ஆனால் மாடசாமி போன்றவர்கள் இது போன்ற கொடுமையான சூழலில் பணிபுரிந்தாலும் பணத்திற்கு அப்பாலும் ஒரு உலகம் உள்ளது என்பதை உணர்ந்து கொண்டு கிடைத்த ஓய்வு நேரத்தில் புத்தகம் வாசிக்கப் பழக்கப்படுத்தியிருக்கும் அவனின் குணாதிசியத்தை ஆச்சரியத்துடன் கவனித்தேன்.


மாடசாமியுடன் உரையாடத் துவங்கும் முன் பல சிந்தனைகள் என் மனதில் அலையடித்தாலும் அவனின் வெள்ளந்தித்தனம் என்னால் பலவற்றையும் இயல்பாக அவனுடன் பேசக் காரணமாக அமைந்தது.


எங்கள் உரையாடல் அதிகாலை வரை வளர்ந்து கொண்டேயிருந்தது. அப்போது தான் அவனைப் போல ஆய்த்த ஆடைத்துறையில் அஸ்திவாரம் போல இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல நபர்களைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். சிறிய வயது. பெரிய பொறுப்பு. ஆனால் அது பெரிய சமாச்சாரமாகத் தெரியாமலேயே இரவு பகலாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நபரையும் யோசிக்கத் துவங்கினேன்.

 

Oru Tholitchalaiyin Kurippugal


ஒருவர் பணிபுரிகின்ற நிறுவனம் திருப்பூரின் ஒரு பகுதியில் இருக்கும். 15 கிலோமீட்டர் தாண்டி சாயப்பட்டறை இருக்கும். எவரோ செய்த தவறினால் ஐந்து கிலோ துணி அங்கே இருக்க அவசரம் அவசரமாக நள்ளிரவில் அந்தத் துணியை எடுத்து வர வண்டியை எடுத்து முறுக்க வேண்டும். வாங்கிய துணியை மற்றொரு இடத்துக்குக் கொண்டு போய்க் கொடுத்துச் செய்ய வேண்டியதை செய்து மீண்டும் நிறுவனத்துக்குள் வந்து சேரும் போது அதிகாலை நேரமாக இருக்கும். எடுத்துச் செல்லும் வண்டியில் பெட்ரோல் இல்லாவிட்டாலும் கையில் காசில்லாவிட்டால் நள்ளிரவில் தள்ளிக் கொண்டே தான் வந்து சேர வேண்டும். ஏன் தாமதம்? என்று கேட்க ஆட்கள் இருப்பார்கள். இத்தனை சிரமத்தை சந்தித்தாயா? என்று கேட்பவர் எவரும் இருக்கமாட்டார்கள். ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொருவிதமாகக் கூத்துக்களைப் பார்க்க முடியும்.


வெளிநாடுகளுக்குக் கொரியர் வழியே சாம்பிள் பீஸ் அனுப்ப இரவு பத்து மணிக்குள் தயாராக இருக்க வேண்டும். ஒன்பது மணிக்குத்தான் அந்த ஆடையில் அடிக்க வேண்டிய பட்டன் நிறம் மாறியுள்ளதைப் பார்த்து அங்கே ஒரு களேபரம் உருவாகும். நாள் முழுக்க ஆமை போலச் செயல்பட்ட அத்தனைபேர்களும் இரவில் முயல் போல முன்னங்கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருப்பர். முதலாளியிடம் வாங்கிய திட்டுக்களை உள்ளே பத்திரப்படுத்திக் கொண்டு மறுநாளும் அதேபோலத் தான் செயல்பட்டுக் கொண்டிருப்பர்.


சர்வதேச நிறுவனங்களில் தொடங்கி தேசிய அளவில் வரைக்கும் நடந்து கொண்டிருக்கும் பலதரப்பட்ட துறைகள் சார்ந்த நிறுவனங்களில் ஒரு ஒழுங்குமுறை இருக்கும். குறிப்பிட்ட எட்டு மணி நேரத்திற்குள் எப்படிச் செயலாற்றுவது என்பதை இயல்பான பழக்கமாக மாற்றி வைத்திருப்பர். ஆனால் திருப்பூர் நிறுவனங்கள் கடந்த இருபது வருடங்களாகக் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தாலும் கொடிக்கயிறு அவிழ்ந்து கடைசியில் முதலாளி இடுப்பில் கட்டியிருக்கும் கோவணக்கயிறும் அவிழ்ந்த கதையாகத்தான் இங்குள்ள நிர்வாக அமைப்பு உள்ளது.


அட, இப்படி ஒரு தவறு நிகழ்ந்து விட்டதே? ஒரு மனித உழைப்பு வீணாகப் போய்க் கொண்டிருக்கின்றதே என்று எவரும் யோசிக்க விரும்புவதில்லை. அலைவதற்கு என்று ஆள் இருக்கின்றான் தானே? என்ற அலட்சிய மனப்பான்மை தான் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும். கடைசியில் பலிகிடா போலப் பலரும் பாதிக்கப்பட்டு ஒரு நாள் நிறுவனம் படுத்த படுக்கை நோயாளி போல மாறிவிடும்.  மதிக்கத் தெரியாத முதலாளிகளிடம் பணிபுரிபவர் எப்படிப்பட்டவர்களாக இருப்பவர்?  சுயகௌரவத்திற்காக கோடிகளை இழக்கத் தயாராக இருப்பவர்கள் சில ஆயிரங்களை எதிர்பார்க்கும் நபர்களை துச்சமாக மதிப்பதால் கடைசியில் ஒவ்வொரு முதலாளிகளும் தெருக்கோடிக்குத்தான் வந்து நிற்கின்றார்கள்.


மற்றத்துறைகளுக்கும் ஆய்த்த ஆடைத் துறைக்கும் முக்கிய வேறுபாடுண்டு. இந்தத் துறையில் ஒவ்வொரு நிலையிலும் மனித உழைப்பு தேவை பட்டுக் கொண்டேயிருக்கும். தவறுகள் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லா இடத்திலும் கவனிப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும். முதலாளியோ? தொழிலாளியோ? இருவருக்கும் நித்ய கண்டம் பூரண ஆயுசு தான். நிம்மதி என்பது மிக மிகக் குறைவாக இருந்தாலும் இந்தத் துறையில் இருப்பவர்கள் வேறு துறைக்குச் செல்ல விரும்பாமல் பெரும்பாலும் இதற்குள்ளே காலத்தை ஓட்ட தயாராக உள்ளனர்.


மாடசாமியும் பலிகிடா தான். ஆனால் இதையும் தாண்டி அவனால் மேலே வர முடியாததற்குக் காரணம் அவனின் நேர்மையான அணுகுமுறையே முக்கியக் காரணமாக இருந்தது. உழைத்தால் போதும். முன்னேறிவிடலாம் என்ற புத்தக அறிவு அவனை வழிநடத்தியே தவிர உழைக்காமல் இருப்பவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. உழைக்காமல் இருக்கப்பழகியவர்கள் தினசரி வாழ்க்கையில் கடைபிடித்துக் கொண்டிருந்த தந்திரங்களை அவனால் கற்றுக் கொள்ளவும் முடியவில்லை. தோற்றுப்போய்க் கடைசியில் "உங்களுடன் என்னால் இனி போராட முடியாது" என்கிற நிலையில் தான் இங்கே வாழ்ந்து கொண்டிருந்தான்.


பத்தாம் வகுப்பு முடித்து விட்டு ஊரில் மேற்கொண்டு படிக்க வசதியில்லாத காரணத்தால் திருப்பூர் கிளம்பி வந்தவனுக்கு நண்பன் மூலம் ஒரு நிறுவனம் அறிமுகம் ஆனது. மாடசாமியின் கையெழுத்து அழகாக இருக்க நிறுவனத்தில் இருந்து வெளியே செல்லும் பொருட்களுக்கு டெலிவரி சலான் போட்டு அதைக் கவனிக்கும் பொறுப்பு வழங்கப்படக் கிராமத்து வெள்ளந்தி மனம் அடுத்தடுத்த வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்ய அவனை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டே வந்தது. முதல் வருட இறுதியில் நிறுவனத்தில் இருந்த டிவிஎஸ் 50 யை கையில் கொடுத்து "இனிமேல் இந்த வண்டி உன்னுடைய பொறுப்பு. வெளி வேலைகளையும் சேர்த்து பார்த்துக் கொள்" என்று வாங்கிக் கொண்டிருந்த எட்டாயிரம் சம்பளத்தோடு ஆயிரம் ரூபாயை சேர்த்துக் கொடுக்க மாடசாமி மகிழ்ச்சி சாமியாக மாறி ராப்பகலாக அலையத் துவங்கியிருக்கிறான்.


ஓய்வே இல்லை. தொடர்ச்சியாக அடுத்தடுத்த வேலைகள் காத்துக் கொண்டிருக்க ஏமாற்ற மனமில்லாமல் ஒவ்வொருவர் இடும் கட்டளைகளையும் சிரமம் பார்க்காமல் செய்து கொண்டு வர உடம்பில் ஒவ்வொரு உபாதையும் உருவாகத் தொடங்கியது. நேரத்திற்குச் சாப்பிட முடியாத காரணத்தில் முதலில் வயிற்றில் புண் உருவாக அடுத்தப் பரிசாக இரத்த சோகையும் வந்துவிட இரண்டாவது வருட இறுதியில் வந்து சேர்ந்தது தான் முகுது வலி.


கடந்த நாலைந்து ஆண்டுகளாகத் திருப்பூர் சாலை வசதிகள் பரவாயில்லை ரகம் தான். ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன் திருப்பூருக்குள் வந்தவர்கள் முக்கியமாக இரண்டு விசயங்களைச் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தண்ணீர் பிரச்சனை மற்றொன்று குண்டும் குழியுமாக இருந்த சாலைகள். எல் அண்ட் டி என்ற தனியார் நிறுவனம் மூலம் தற்காலிகத் தீர்வாகத் திருப்பூர் முழுக்கத் தேவையான குடிநீரை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதைப் போலவே சாலை வசதிகளும் சற்று மேம்பட்டுள்ளது. வட மாநில முதலாளிகள் அதிகளவில் திருப்பூரில் தொடக்கம் முதல் தங்க விரும்பாமல் கோவை பக்கம் சென்றதற்குக் காரணமே இந்த இரண்டு பிரச்சனைகள் தான்.


இந்தச் சாலை வசதிகள் அடிமட்ட நிலையில் பணிபுரியும் மாடசாமி போன்று தினந்தோறும் வெளியே அலைந்தே ஆக வேண்டும் என்று வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ள பலருக்கும் மொத்த உடல் உபாதையையும் தந்து கடைசியில் படுத்த படுக்கையாக மாற்றிக் கொண்டிருக்கின்றது.


மாடசாமி ஓட்டிக் கொண்டிருந்த வண்டியை கவனித்தேன். வண்டி என்ற பெயரில் ஒரு உருவத்தில் இருந்தது. எப்போது எந்தப் பகுதி கழன்று விழுமோ? என்ற அச்சத்தைத் தருவதாக இருந்தது. மற்ற ஊர்களில் இரண்டு சக்கர வாகனங்களைப் பயணிக்கத்தான் பயன்படுத்துவர். ஆனால் திருப்பூரில் ஐம்பது கிலோ துணியைக்கூட அநாயசமாக வண்டிக்குள் திணித்து ஓட்டிக் கொண்டு செல்வர்.


திருப்பூரில் ஒவ்வொருவரும் பயன்படுத்தும் இரண்டு சக்கர வாகனங்களுமே இரண்டு வசதிகளுக்காக மட்டுமே. மனிதச் சுமைகள் பாதி மீதி துணிச்சுமை.


பல சமயம் ஐம்பது கிலோ நூல் மூட்டையை வைத்துக் கொண்டு சர்வசாதாரணமாகச் சாலையில் பறப்பர். இதே போலப் பலசமயம் மாடசாமி நிறுவனத்தின் மொத்த சுமையையும் பொதி கழுதை போலச் சுமக்க தொடக்கத்தில் உடம்பு வலி உருவானது. அதனைத் தொடந்து முதுகுவலியும் வந்துள்ளது.


முதுகு வலியின் உண்மையான தன்மையை உணரத் தெரியாமல் உடம்பு வலிதானே? என்று யோசித்துக் கண்ட மாத்திரைகளை வாங்கிப் போட்டுக் கொள்ள அது பக்க விளைவுகளை உருவாக்கத் தொடங்கியது.

Oru Tholichalaiyin Kuripugal

தொடர்ச்சியாக ஓய்வே இல்லாமல் பயணித்த காரணத்தினால் சாலையில் உள்ள மேடுபள்ளத்தில் ஏறி இறங்கி பயணித்த அவனின் நெடுஞ்சாலைப் பயண வாழ்க்கை கடைசியில் பாயில் நெடுஞ்சான்கிடையாகப் படுக்க வைக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது. கடைசியாகத் தண்டுவட பாதிப்பில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.


மாடசாமிக்கு உருவான நிரந்தர முதுகு வலியை குறித்து யோசிக்க அந்த நிறுவனத்தில் எவருக்கும் நேரமில்லை.


மாடசாமி பார்க்கும் வேலையின் பெயர் PRODUCTION FOLLOW UPS என்கிறார்கள்.


பத்தாண்டுகளுக்கு முன் திருப்பூர் நிறுவனங்களில் வேலையில் சேர்வது என்பது வாய் வார்த்தை பரவல் மூலமாக நடந்து கொண்டிருந்தது. மாமன், மச்சான், பங்காளி என்று தொடங்கிக் கொளுந்தியாள், நாத்தினார், தங்கை, அப்பா, அம்மா என்று தொடர்ந்து கடைசியாகப் பக்கத்துவீட்டுக்காரன் என்பது வரைக்கும் திருப்பூர் வந்து சேர்ந்து விடுவார்கள். ஓரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பதினைந்து பேர்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிவார்கள். கூட்டுக் குடித்தன வாழ்க்கை போலக் கூட்டு ஒப்பந்தம் போட்டு சம்பாரித்து அவரவர் ஊரில் வசதியாக வீடு கட்டி வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் உண்டு. கூட்டணி போட்டு கெட்டு அழிந்தவர்களும் உண்டு. அவரவர் வினை வழி. அவரவர் விதி வழி.


ஆனால் சமீப காலமாகத் திருப்பூர் என்பது தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு அடைக்கலாம் புக உதவும் ஊராக இருப்பதால் ஒரு பக்கம் காவல் துறையும் மற்றொரு பக்கம் நிறுவனத்தின் மனிதவளத்துறையில் உள்ளவர்களும் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கின்றார்கள்.


ஒருவர் எந்தப் பதவிக்குச் சேர்ந்தாலும் நிறுவனத்தில் உள்ளே நுழைந்ததும் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக் கொள்கின்றார்கள். இது தவிரத் தினசரி நாளிதழ்கள் மூலம் அதிகளவில் விளம்பரம் கொடுத்தும் எடுக்கின்ற கலாச்சாரம் தற்பொழுது உருவாகியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் வெளி வருகின்ற எந்தப் பத்திரிக்கையிலும் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை என்று வந்தால் நிச்சயம் மாடசாமி பணிபுரிகின்ற பதவியும் சேர்ந்தே வரும். காரணம் இது போன்ற பதவிக்கு வருகின்றவர்கள் அசராத உழைப்புக்கு சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும். முன்பு அந்தந்த நிறுவனங்களே வெளியே சுற்ற இரண்டு சக்கர வாகனங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

Oru Tholitchalaiyin Kurippugal


ஆனால் இந்த நிலை மாறி தற்பொழுது இந்தப் பதவிக்கு வருகின்றவர்கள் கட்டாயம் இரண்டு சக்கர வாகனங்கள் வைத்திருக்க வேண்டும். நிறுவனம் பெட்ரோல் கொடுத்து விடுவார்கள். அதற்குத் தனியாக ஒரு நோட்டு வைத்துக் கொண்டு எங்கிருந்து சென்று எங்கே வந்து சேர்ந்தேன் என்று கிலோ மீட்டர் கணக்கு எழுதிக்காட்டி தினந்தோறும் குறிப்பிட்ட நபரிடம் கையெழுத்து வாங்க வேண்டும். அதன் பிறகே அடுத்தப் பெட்ரோல் டோக்கன் கிடைக்கும்.


மிகப் பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக ஆட்கள் உண்டு. அவரவருக்குண்டான பொறுப்புகள் என்று வரையறை உண்டு. அந்த வேலைகளை முடித்து விட்டு அடுத்தத் துறை மக்களிடம் கொடுத்து விட்டால் போதுமானது. இதே போல் ஒவ்வொரு துறையாக நகர்ந்து வந்து கடைசியில் தேய்த்துப் பாலிபேக்கில் போட்டு பெட்டிக்கு வந்து விடும். ஆனால் இன்று வரையிலும் சிறிய நிறுவனங்களில் உள்ளே பணிபுரியும் ஒரு சில நபர்கள் தான் ஒரு நிறுவனம் சார்ந்த அனைத்த பொறுப்புகளையும் கவனிக்க வேண்டும்.


ஐம்பது வேலைகள் இருந்தாலும் ஒரு நாள் முழுக்க அனைத்து வேலைகளையும் அவரே முடிக்க வேண்டியதாக இருக்கும். பல சமயம் தவறு ஏதும் நிகழ்ந்தால் அந்தக் குறிப்பிட்ட நபரே பலிகிடாவாக மாற்றப்படுவார். வேலை பறிபோய்விடும் வாய்ப்புண்டு.


தற்போதைய சூழ்நிலையில் எந்தப் பொருளும் கடனுக்கு எங்கும் வாங்க முடியாத சூழ்நிலை நிலவுவதால் "கையில் காசு வாயில் தோசை" என்கிற நிலையில் தான் தற்போது இந்தத் தொழில் உள்ளது. ஏழெட்டு வருடங்களுக்கு முன் சிறிய நிறுவனங்களை எந்தப் பெரிய நிறுவனங்களும் மதிப்பதே இல்லை. சிறிய நிறுவனங்கள் தங்கள் வேலைகளை முடித்துக் கொடுத்தாலும் அவர்களுக்குச் சேர வேண்டிய பணம் அவர்கள் வாங்குவதற்குள் தலையால் தண்ணீர் குடிப்பது போலத் தடுமாறிப் போய்விடுவார்கள். பெரிய நிறுவனங்கள் என்ன காரணங்கள் சொல்லி நாமத்தை போடலாம் என்று காத்திருப்பார்கள். இது போன்ற அனைத்து விசயங்களையும் தாண்டி சிறிய நிறுவனங்கள் தங்களை இந்தச் சந்தையில் நிலைபடுத்திக் கொள்ள வேண்டும்.


வாழ்க்கை ஒரு வட்டம் தானே? தற்பொழுது திருப்பூர் சந்தையில் சிறிய நிறுவனங்கள் தான் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். "காசை கொடுத்து விட்டு எடுத்துட்டு போ.  இல்லைன்னா இந்தப்பக்கம் வந்துடாதே" என்று விரட்டுகின்றார்கள்.


பெரிய நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் எதுவும் சிறிய நிறுவனங்கள் பொருட்படுத்துவதே இல்லை. அதைக் கவனிக்கவும் அதிகாரவர்க்கத்திற்கு நேரமும் இருப்பதில்லை. காரணம் தொழிலாளர்களின் பற்றாக்குறை அந்த அளவுக்கு இந்தத் தொழிலை படாய் படுத்திக் கொண்டிருக்கின்றது. பத்து வருடங்கள் ராப்பகலாக உழைத்து, தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படாத அத்தனை பேர்களையும் வாழ முடியாத நிலைக்கு இந்தத்துறை துப்பித் தள்ளிக் கொண்டேயிருக்கின்றது.


புதிய நபர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்றால் என்ன? நேபாளம் தொடங்கி வட மாநிலங்கள் வரைக்கும் புரோக்கர் வைத்து கொண்டு வந்து இறக்கிக் கொண்டேயிருக்கின்றார்கள்.   


இதன் காரணமாகவே தங்கள் நிறுவனங்களில் செய்ய வேண்டிய வேலைகளை மற்ற சிறிய நிறுவனங்களில் கொடுத்து பெரிய நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்றார்கள்.


சிறிய நிறுவனமோ? பெரிய நிறுவனங்களோ அவர்களின் நிர்வகத் தன்மை எப்படியிருந்தாலும் மாடசாமி போன்றவர்கள் நூற்றுக்கணக்கான பேர்கள் தங்களின் உழைப்பை கொடுத்து விட்டு செயல்படா முடியாத நிலை வரும் பொழுது நடைபிணமாக அவரவர் வாழ்ந்த ஊருக்குக்குத் திருப்பூர் ஆய்த்த ஆடைத்துறை அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றது. காரணம் மாடசாமி கடைசியாகச் சென்ற ஆண்டு என் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது "எப்ப எனக்குச் சாவு வரும்ன்னு காத்துக்கிட்டு இருக்கேன்" என்றான். 

 

Oru Tholitchalaiyin Kurippugal

 

குறிப்புகள் தொடரும்......

by Swathi   on 11 Sep 2014  4 Comments
Tags: Tiruppur Jothiji   Oru Tholitchalaiyin Kurippugal   Tirupur Textile Industry   திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள்   ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்   மாடசாமி   ஜோதிஜி திருப்பூர்  
 தொடர்புடையவை-Related Articles
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14
கருத்துகள்
20-Sep-2014 02:43:20 ரஞ்சனி நாராயணன் said : Report Abuse
மாடசாமியின் நிலை கண்கலங்க வைத்துவிட்டது. இதைப்போல எத்தனை ஆயிரம் தொழிலாளிகளோ, திருப்பூர் பெயர் வாங்க.
 
14-Sep-2014 08:52:47 முரளிதரன் said : Report Abuse
கடைசி வரிகள் கண்கலங்க வைத்து விட்டது. உழைப்புக்கேற்ற அங்கீகாரம கிடைக்கப் பெறாதபோது ஏற்படும் வலி சாதரணமானதல்ல . மற்றவர்கள் பிழைக்க யாராலும் கவனிக்கப் படாமல் மாடசாமிகள் மாடுகள்போல் உழைத்துக் கொண்டிருப்பது வேதனைதான்
 
13-Sep-2014 08:13:19 சுரேஷ்பாபு said : Report Abuse
மாடசாமி போன்ற முகம் அறியா உழைப்பாளிகளின் கஷ்டங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தமைக்கு பாராட்டுக்கள்!
 
12-Sep-2014 13:13:46 மைதிலி கஸ்தூரி ரெங்கன் said : Report Abuse
இவர்கள் போன்றவர்களை பார்க்கும் போது தான் , நாம் வாழும் வாழ்க்கை எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டது என புரிகிறது:(((
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.