|
||||||||
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணமே பயம் போக்கும் மருந்து - அத்தியாயம் 3 |
||||||||
பணமே பயம் போக்கும் மருந்து "நீங்கள் தொழிலாளர்கள் நலன் குறித்துச் சிந்திப்பது இருக்கட்டும். முதலில் உங்கள் நிறுவனத்தின் தற்போதைய நிதி சார்ந்த செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கின்றதா?" நான் இப்படியொரு கேள்வியைக் கேட்பேன் என்று அந்த அறையில் இருந்த பாஞ்ச் கூட்டம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வேலை தேடி வந்தவன் வேலை கொடுப்பவர்களிடமே தைரியமாகவே கேட்டு விட்ட போதிலும் எனக்குள் சின்னக் குறுகுறுப்பு இருக்கத்தான் செய்தது. அதையும் மீறியும் கேட்கக் காரணம் ஒரு நிறுவனத்தின் நிர்வாக முறைகள் பாராட்டத்தக்கதாக இருக்கலாம். ஆனால் ஆதாரம் என்பது பணம் மட்டுமே. காசு தான் கடவுள். பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது. வாரச்சம்பளம், மாதச்சம்பளம், துணை மற்றும் சார்பு நிறுவனங்களுக்கு அந்தந்த சமயத்தில் கொடுக்க வேண்டியது என ஒவ்வொன்றும் சரியாக இல்லாவிட்டால் இரத்தம் இல்லாத உடம்பு போலக் களையிழந்து ஜீவனற்று இருக்கும். கோமா நிலையில் இருப்பவரை வைத்து என்ன செய்ய முடியும்? பலருக்கும் சுமையாகத்தான் தெரியும். நண்பர் இந்த நிறுவனத்தைப் பற்றிச் சொன்னதை விட உள்ளே வந்து பார்த்த வரையிலும் அப்படித்தான் இந்த நிறுவன செயல்பாடுகளும் இருந்தது. ஒவ்வொரு நிலையிலும் அதிகப்படியான செலவுகளை வாரி இறைத்துக் கொண்டிருந்தனர். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பதனை செய்து வைத்துள்ள, செய்து கொண்டிருக்கின்ற அலங்காரங்கள் மட்டும் தீர்மானித்து விடாது. திருப்பூருக்குள் குப்பை போல நிறுவனத்தை வைத்திருப்பவர்கள் குறுகிய காலத்திற்குள் கோபுர உயரத்திற்கு வளர்ந்த பலரையும் பார்த்துள்ளேன். ஆனால் இங்கு எல்லாமே தலைகீழாக இருந்தது. "மாடல் பேக்டரி" என்ற பெயரில் மடத்தனமான நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருந்தனர். யோசித்துக் கொண்டிருந்த என்னை ஒருவரின் பேச்சு இயல்பான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியது.
அமைதியாக இருந்த அறையில் ஒருவர் மட்டும் பேசினார். "எதை வைத்து இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்?" என்றார். பிறகு தான் தெரிந்தது அவர் தான் இந்த நிறுவனத்தில் முதன்மை நிர்வாகியாக இருப்பவர். நிறுவனத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்குகள் அவர் குடும்பத்திடம் இருந்தது. அவர் மனைவியும் சேர்ந்து நிர்வாகப் பங்களிப்புகளில் இருப்பதை உள்ளே நுழைந்த பிறகே என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் பெண்மணி தான் எனக்குக் கண்ணில் விழுந்த தூசியாக மாறப் போகின்றார் என்பதை உணர முடியாமல் அவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கத் தொடங்கினேன். "நிறுவனத்தின் ஆதார பலமென்பது வாரச் சம்பளம் மற்றும் மாதச்சம்பளம். இது தான் முக்கியமும் முதன்மையும் கூட. மற்றவைகள் இரண்டாம் பட்சமே. அவற்றுக்குக்கூட நீங்கள் காரணங்கள் சொல்லி சமாளிக்க முடியும். ஆனால் ஒரு தொழிற்சாலையில் வாரச்சம்பளம் போட முடியாத நிலையில் என்ன மாறுதல்களை உங்களால் உருவாக்க முடியும்? திறமையான தொழிலாளர்களும் நம்பிக்கை இழந்து விடுவார்கள். அதே போல அலுவலக ஊழியர்களிடத்திலும் தேவையற்ற பயம் உருவாகி விடும். உங்கள் மனித வளத் துறை என்ன சட்ட திட்டங்கள் உருவாக்கினாலும் அதனை முறைப்படி செயல்படுத்தப்பட வேண்டுமென்றால் உள்ளே பணிபுரிபவர்களிடத்தில் அடிப்படை நம்பிக்கை இருக்க வேண்டும். தினந்தோறும் அவர்களின் சொந்தப் பிரச்சனைகளோடு உள்ளே வரும் போது நாம் எப்படி அவர்களிடத்தில் என்ன எதிர்பார்க்க முடியும்?" அதிகமாகவே பேசி விட்டோமோ? என்று பேச்சை நிறுத்திவிட்டு அவர்களிடத்திலே எவ்வித பதில் வருகின்றது என்று காத்திருந்தேன். வரிசைக்கிரமாக ஒவ்வொருவரும் கேள்வி கேட்கத் தயாராக இருந்தவர்களிடத்தில் திடீரெனச் சலசலப்பு உருவானது. அவர்களுக்குள்ளே பேசத் தொடங்கினர். சிலரின் முகத்தில் பிரகாசம் தெரிந்தது. அவர்கள் நிர்வாகத்தினரிடம் சொல்லத்தயங்கிய வார்த்தைகளை நான் சொல்லிவிட்டேன் என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். நேர்முகத் தேர்வின் போக்கே மாறத் தொடங்கியது. கேள்வி பதிலாகப் பேச வேண்டிய அனைத்தும் மாறி கலந்துரையாடலாக மாறியது. அதன் பிறகே எதார்த்த உலகத்திற்கு வந்தனர். நட்பு ரீதியாக உரையாடத் தொடங்கினார். மீண்டும் மனிதவளத்துறைத் தொடங்கி அங்கே அமர்ந்திருந்த பிற துறை சார்ந்த ஒவ்வொருவரும் மாறி மாறி பொதுவான விசயங்களைப் பற்றிப் பேசினர். நான் ஒரு ஆய்த்த ஆடை உற்பத்தியில் உள்ள ஒவ்வொரு துறையையும் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து வைத்துள்ளேன் என்பதைக் கேட்டனர். ஆனால் கூட்டத்தில் இருந்த பெண்மணி மட்டும் கடைசி வரையிலும் எதுவுமே என்னிடம் கேட்கவில்லை. கடைசியாகத் தொழில் நுட்ப இயக்குநர் (TECHNICAL DIRECTOR) என்ற பதவியில் இருந்தவர் மட்டும் என்னுடன் உரையாடத் தொடங்கிய போது ஒவ்வொருவரும் கலைந்து செல்லத் தொடங்கினர். எனக்குச் சற்று குழப்பமாகவே இருந்தது. நமக்கு நாமே ஆப்பை சொருகிக் கொண்டோமோ? என்று குழப்பத்துடன் வெளியே செல்பவர்களைக் கவனித்தேன். அவர்கள் Take Care. Best of Luck என்று தொழில் நுட்ப இயக்குநரிடத்தில் சொல்லி விட்டு சென்றனர். அவரும் "நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு என்னை மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறை முதன்மை நிர்வாகியும் அவர் மனைவி பயன்படுத்தும் அறை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நாங்கள் இருவரும் மட்டுமே அந்த அறையில் இருந்தோம். எனக்கு முதலில் தொழில் நுட்ப இயக்குநர் என்பதன் அர்த்தமே புரியவில்லை. இவரின் பணி இங்கே என்னவாக இருக்கும்? என்பதைப் பலவிதமாக மனதிற்குள் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் இதுவரையிலும் பணிபுரிந்த நிறுவனங்களில் பெற்ற அனுபவங்களின் மூலம் நான் பார்த்த, பழகிய நபர்கள், அவர்கள் இருந்த பதவிகளுக்கும் இங்கே நான் பார்த்துக் கொண்டிருப்பதற்கும் நூறு சதவிகிதம் வித்தியாசம் இருந்தது. ஆனால் "எதையும் சமாளிக்க முடியும்? எந்த நிலையிலும் என்னால் வெல்ல முடியும்" என்ற நம்பிக்கையே அடுத்தடுத்த நிலைக்கு என்னை நகர்த்திக் கொண்டிருந்தது. அது குருட்டாம் போக்கு என்றாலும் வாழ்வில் பல சமயம் நாம் கொண்டிருக்கும் அசாத்தியமான நம்பிக்கைகள் மட்டும் நமக்குப் பல கதவுகளைத் திறக்க காரணமாக இருக்கிறது என்பதை நான் ஒவ்வொரு முறையும் உணர்ந்திருந்த காரணத்தால் எனது வளர்ச்சி என்பது சீராகவே இருந்தது. இந்தத் துறைக்குத் தேவையான முறைப்படியான படிப்போ, அல்லது தெளிவான நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிச் சூத்திரங்களைக் கற்காத நிலையில் கூடக் கடந்து போன பத்தாண்டுகளில் கற்றுக்கொண்ட அனுபவங்களின் மூலம் "நம்மால் முடியும்" என்ற தன்னம்பிக்கை மட்டுமே இந்த அறை வரைக்கும் என்னை அழைத்து வந்துள்ளது. அவர் அடுத்து என்ன பேசப் போகின்றார்? என்பதைக் கவனிக்கும் ஆவலில் இருந்தேன். அவர் ஒன்றுமே பேசாமல் அருகே இருந்த மடிக்கணினியை உயிர்பித்தார். சற்று நேரத்தில் அங்கே இருட்டுப் பகுதியில் இருந்த அறையில் இருந்த சிறிய திரையில் வெளிச்சம் பரவி மடிக்கணியில் இருந்த தகவல்கள் தெரியத் தொடங்கியது. மடிக்கணியில் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த (POWER POINT PRESENTATION) கோப்பை வைத்துப் படிப்படியாக ஒவ்வொன்றையும் விவரித்துக் கொண்டே வந்தார். நிறுவனம் சார்ந்த படங்கள், செயல்பாடுகள், கடந்து வந்த பாதைகள், பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள், திட்டங்கள், மதிப்பீடுகள், இழப்புகள், எதிர்கால நோக்கம் எல்லாவற்றையும் விலாவாரியாக விவரித்துக் கொண்டே வந்தார். ஒவ்வொன்றையும் சுவராசியத்துடன் பார்த்துக் கொண்டே வந்தேன். அரைமணி நேரத்திற்குப் பிறகு என் அமைதியைப் பார்த்து "கேள்வி எதுவும் கேட்கத் தோன்றவில்லையா?" என்றார். அப்போது தான் எனக்குச் சற்றுத் தைரியம் வந்தது. "இந்த நிறுவனத்தில் உங்கள் பணி என்ன?" என்றேன். சிரித்துவிட்டுத் தொடர்ந்தார். "இந்த நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பகுதி நேர வேலையாகப் பணியில் இருக்கின்றேன். இதே போலத் திருப்பூர் மற்றும் கோவையில் ஏழெட்டு நிறுவனங்கள் என் ஆலோசனையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. உற்பத்தியை பெருக்குவதும், அது சார்ந்த செயல்பாடுகளை வடிவமைப்புகளைச் செய்து கொடுப்பதுமே என் முக்கியப் பணி. எனக்குக் கீழே பத்து ஐ.ஈ (INDUSTRIAL ENGINEER) துறையைச் சார்ந்தவர்கள் இங்கே பணியில் இருக்கின்றார்கள். குறுகிய காலத்திற்குள் அதிகச் செலவு இல்லாமல் ஒரு ஆடையை எப்படி உருவாக்க வேண்டும் என்பதனை நாங்கள் பொறுப்பேற்று நிறைவேற்றிக் கொடுக்கின்றோம்" என்றார். அப்போது அவரிடம் கேட்கத் தோன்றிய கேள்வியென்றாலும் கேட்காமல் மனதிற்குள் கேட்டுக் கொண்டேன். "அப்புறம் ஏஞ்சாமி இன்றைக்கு இந்த நிறுவனம் நிதிச்சுமையில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றது". அவர் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார். உலகில் உள்ள ஆயத்த ஆடைத்துறைச் சார்ந்த சர்வதேச நிறுவனங்கள் குறித்து விரிவாக பேசினார். ஒரு ஆய்த்த ஆடையை எப்படிச் சந்தைப்படுத்துகின்றார்கள்? உற்பத்தியாளர்களிடத்தில் எந்த நிலையில் எதிர்பார்க்கின்றார்கள்? இன்றைய சர்வதேச போட்டிச் சூழலில் அவர்களின் மாறிக் கொண்டேயிருக்கும் சிந்தனைகள், எதிர்பார்க்கும் விலை, இந்தியாவிற்கு எந்தந்த நாடுகள் போட்டியாளர்களாக உள்ளனர், மற்ற நாடுகளில் உள்ள ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் தற்போதைய சூழலுக்கு ஏற்ப எப்படி நவீனப்படுத்தியுள்ளனர்? தேவையற்ற செலவீனங்களை எப்படிக் கட்டுப்படுத்த முடியும் போன்ற பலவற்றை எனக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தார். அதுவரையிலும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டேயிருந்தவன் சற்று பொறுமையிழந்து "இதையெல்லாம் ஏன் சொல்லிக் கொண்டிருக்கீங்க?" என்றேன். அவர் குழப்பத்துடன் என்னைப் பார்த்தார். "நான் உங்களுக்குத் தேவையா? தேவையில்லையா? என்றே தெரியவில்லை. உங்களைத் தவிர அத்தனை பேர்களும் பாதியில் எழுந்து போய்விட்டார்கள். எவரும் எதுவும் சொல்லவில்லை. பிறகெப்படி நான் இதில் கவனம் செலுத்த முடியும்?" என்றேன். "உங்கள் கோபமும் வேகமும் இயல்பான குணமாக இருக்கும் போல. உங்களைத் தேர்ந்தெடுத்தக் காரணத்தினால் மட்டுமே உள்ளே அழைத்து வந்தேன். நீங்கள் எழுபது சதவிகிதம் என் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருப்பீங்க" என்றார். என் மனதிற்குள் மகிழ்ச்சி பரவியது. மேலும் பல விசயங்களைப் பேசி முடித்து விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்த போது மேலும் குழப்பங்கள் அலையடித்தது. காரணம் ஒரு மாதம் முழுமையாகப் பணியாற்றிய பின்பு நிரந்தரம் சார்ந்த பல வசதிகள் கிடைக்கும் என்றொரு ஆணியடித்திருந்தார்கள். இந்த ஒரு மாதத்திற்குள் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதியில்லை என்றால் கல்தா தான் என்பதனை மறைமுகமாக உணர்த்தியிருந்தார். எனக்கு அந்த "டீலிங்" பிடித்தே இருந்தது. அவர் சொன்ன தேதியில் உள்ளே நுழைந்தேன். அலுவலகக் கண்ணாடி வழியே பார்த்த தொழிற்சாலையின் உள்பகுதிக்கு மனிதவளத்துறையைச் சார்ந்த ஒரு பெண் என்னை அழைத்துக் கொண்டு சென்று ஒவ்வொரு துறை சார்ந்த நபரிடமும் அறிமுகப்படுத்தி விட்டுக் கடைசியாக எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்குக் கொண்டு வந்து சேர்ந்தார். எனக்கு ஒதுக்கப்பட்ட அறையென்பது தொழிற்சாலையின் தொடக்கப்பகுதியில் இருந்தது. நீண்ட ஹால் போலச் செவ்வக வடிவில் அமைத்திருந்தார்கள். மேல் தளத்தில் உருவாக்கப்பட்டு இருந்த குளிர் சாதன வசதிகள் இந்த அறை வரைக்கும் வந்து சேர்ந்து இருந்தது. குறுகிய அறை என்பதால் என் தோலை ஜில்லிட வைத்துக் கொண்டிருந்தது. எனது இருக்கைக்கு அருகே தொழில் நுட்ப இயக்குநரின் நேரிடை உதவியாளர்கள் (INDUSTRIAL ENGINEER) மூன்று பேரின் இருக்கை இருந்தது. அதனைத் தொடர்ந்து மனித வளத்துறையைச் சார்ந்த உதவியாளர்கள் இருந்தனர். அந்த ஹாலில் ஒவ்வொரு துறைக்கும் தடுப்பு எதுவும் உருவாக்கப்படாத காரணத்தால் உள்ளே இருந்த அனைவரின் செயல்பாடுகளையும் என்னால் பார்க்க முடிகின்ற வகையில் இருந்தது. என் இருக்கையில் இருந்து தொழிற்சாலையின் எழுபது சதவிகித பரப்பளவை பார்க்க முடியும். இது தவிர என் அறைக்கு அடுத்த அறையில் மனிதவளத்துறைக்குப் பொறுப்பாக மேலாளர் (HR MANAGER) பதவியில் ஒரு பெண்மணி இருந்தார். அவரின் பணி என்பது முக்கியமாகத் தொழிலாளர்கள் சார்ந்த நலன்கள் மற்றும் அவர்கள் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்ப்பது. மற்ற துறை சார்ந்த ஒவ்வொருவரும் பத்தாயிரம் அடி சதுர பரப்பளவில் இருந்த அந்தத் தொழிற்சாலையின் ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக அங்கங்கே இருந்தனர்.
என் மேஜைக்கு அருகே மைக் வசதியோடு ஸ்பீக்கர் இருந்தது. அதனை உயிர்ப்பித்து எதுவும் பேசினால் தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதியிலும் பொருத்தப்பட்ட கருவிகள் மூலம் ஆங்காங்கே இருப்பவர்களால் கேட்க முடியும். என் மேஜையில் இருந்த கணினி மொத்தமாக அலுவலகம் மற்றும் தொழிற்சாலையின் உள்ளே இருந்த அனைத்து கணினியுடனும் தொடர்பு கொள்ளும்படி உருவாக்கப்பட்டு இருந்தது. அங்கேயிருந்த அதிகப்படியான வசதிகளைப் பார்த்து மனதிற்குள் மிரட்சி உருவானாலும் அருகே அமர்ந்திருந்த ஐ.ஈ மக்கள் தான் என் வயிற்றில் புளியைக் கரைத்தனர். சார் "நீங்க இந்தப் பதவிக்குக் கடந்த ஆறு மாதத்தில் வந்து போனவர்களில் எட்டாவது நபர். நீங்களாவது எங்களோடு நிரந்தரமாக இருப்பீங்களா?" என்றனர். பயமுறுத்தலா? அக்கறையா? என்பது புரியாமல் எதையும் காட்டிக்கொள்ளாமல் மையமாக அவர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு என் இருக்கையில் அமராமல் தொழிற்சாலையின் மற்ற பகுதிகளைப் பார்வையிட என் அறையை விட்டு வெளியே வந்து பார்த்து அங்குப் பார்த்த காட்சிகள் என் குழப்பத்தை அதிகப்படுத்தியது. அப்போது தான் தொழில் நுட்ப இயக்குநர் சொன்ன வாசகம் என் மனதில் வந்து போனது. "எவர் எது சொன்னாலும் எதையும் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள். எதையும் அவசரப்பட்டு முடிவெடுத்து விடாதீர்கள். எந்தச் சமயத்தில் வேண்டுமானாலும் என்னை அழையுங்கள். நான் உங்களுக்கு எப்போதும் உதவியாக இருப்பேன். நீங்களாவது என் நம்பிக்கையைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்". ஏன் அப்படிச் சொன்னார்? என்று அப்போது எனக்குப் புரியவில்லை. தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றி வந்த போது எனக்குப் புரியத் தொடங்கியது. -தொடரும்..... |
||||||||
by Swathi on 13 Aug 2014 7 Comments | ||||||||
Tags: Oru Tholitchalaiyin Kurippugal Tiruppur Jothiji ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் ஜோதிஜி திருப்பூர் | ||||||||
கருத்துகள் | |||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|